கப்பல்களைப் பாருங்கள். அவை எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும், புயல் காற்றில் அடிபட்டாலும், கப்பலோட்டி சிறியதொரு சுக்கானைக் கொண்டு தான் விரும்பும் திசையிலெல்லாம் அவற்றைச் செலுத்துகிறான்.
மனிதனின் நாவும் அவ்வாறே. அது உடலின் மிகச் சிறிய உறுப்பு தான். ஆயினும் பெரிய காரியங்களைச் சாதிப்பதாகப் பெருமையடிக்கிறது. சிறியதொரு நெருப்புப் பொறி எவ்வளவு பெரிய காட்டை எரித்து விடுகிறது, பாருங்கள்.
நாவும் அந்த நெருப்பு போலத்தான். அக்கிரம உலகின் உருவே அது. நம் உடலின் உறுப்புக்களுள் அமைக்கப்பட்டு உடல் முழுவதையும் கறைப்படுத்தி, மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தை எரிக்கும் நெருப்பு போல் உள்ளது. அந்நெருப்போ நரகத்திலிருந்தே வருகிறது.
காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் நீந்துவன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதன் அடக்கிவிடலாம், அடக்கியும் உள்ளான். நாவையோ எம் மனிதனாலும் அடக்க முடிவதில்லை.
உங்களுள் ஞானமும் அறிவும் படைத்தவன் யாராவது இருந்தால், அவன் அவற்றைத் தனது நன்னடத்தையினால் எண்பிக்கட்டும்; அவன் செயல்கள் ஞானத்தால் விளையும் சாந்தத்தோடு விளங்கட்டும்.
ஆனால், உங்கள் உள்ளத்தில் மனக்கசப்பும் பொறாமையும் கட்சி மனப்பான்மையும் இருந்தால், அதைப் பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். உண்மையை எதிர்த்துப் பொய் பேச வேண்டாம்.
விண்ணினின்று வரும் ஞானமோ தீய எண்ணத்துடன் கலவாதது; இதுவே அதன் தலையான பண்பு. மேலும் அது சமாதானத்தை நாடும்; பொறுமையைக் கடைப்பிடிக்கும்; இணக்கத்தை விரும்பும்; இரக்கமும் நற்செயல்களும் பெருகச் செய்யும்; நடுநிலை தவறாது; கள்ளமறியாது.