முற்காலத்தில் ஆண்டவர் சபுலோன் நாட்டிடையும், நெப்தாலிம் நாட்டையும் அவமதிப்புக்கு உள்ளாக்கினார்; ஆனால் பிற்காலத்தில் கடல் நோக்கும் வழியையும், யோர்தான் அக்கரைப் பகுதியையும் புறவினத்தார் வாழும் கலிலேயாவையும் மகிமைப்படுத்துவார்.
மக்களினத்தைப் பலுகச் செய்தீர், அதன் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடையின் போது உழவன் மகிழ்வது போலும், கொள்ளைப் பொருளைப் பங்கிடுவோர் அக்களிப்பது போலும், உம் முன்னிலையில் அவர்கள் அக்களிக்கிறார்கள்.
ஏனெனில் மாதியான் நாட்டுப் போர்க் காலத்தில் செய்தது போல், அவர்கள் தோள் மேல் சுமத்தப்பட்ட நுகத்தையும், தோளைக் காயப்படுத்திய தடியையும், அவர்களை ஒடுக்கியவனின் கொடுங்கோலையும் நீர் ஒடித்தெறிந்தீர்.
ஏனெனில் நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளது, நமக்கு ஒரு மகன் தரப்பட்டுள்ளான்; ஆட்சியின் பொறுப்பு அவருடைய தோள் மேல் இருக்கும், அவருடைய பெயரோ, "வியத்தகு ஆலோசனையாளர், வல்லமையுள்ள இறைவன், முடிவில்லாத் தந்தை, அமைதியின் மன்னன்" என வழங்கப்படும்.
அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும் அமைதியின் பெருக்கிற்கும் முடிவு என்பதே இராது. தாவீதின் அரியனையில் அமர்வார்; அவரது அரசை நிறுவுவார்; இன்று முதல் என்றென்றும் நீதியாலும் நியாத்தாலும் அதை நிலைபெயராது காத்திடுவார்; சேனைகளின் ஆண்டவரது ஆர்வம் இதைச் செய்யும்.
செங்கற் கட்டடம் தகர்ந்து வீழ்ந்தது, ஆனால் செதுக்கிய கற்களால் கட்டுவோம்; காட்டத்தி மரங்கள் வெட்டுண்டு சாய்ந்தன, ஆனால் அவற்றுக்குப் பதிலாகக் கேதுரு மரங்கள் வைப்போம்" என்று சொல்லுகிறார்கள்.
ஆதலால் ஆண்டவர் அவர்களின் இளைஞரைக் குறித்து மகிழ்வதில்லை, திக்கற்றவர் மேலும் கைம்பெண்கள் மேலும் இரங்குவதில்லை. ஏனெனில் ஒவ்வொருவனும் கடவுட் பற்றில்லாதவன், கொடியவன், ஒவ்வொருவன் வாயும் பேதமையே பேசுகிறது; இதிலெல்லாம் அவர் சினம் ஆறவில்லை, நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.
ஏனெனில் அக்கிரமம் தீயைப் போல் எரிகின்றது, முட்களையும் முட்புதர்களையும் தீய்க்கின்றது, காட்டில் அடர்ந்துள்ள செடிகளைப் பிடிக்கின்றது, தூண் போல புகைப்படலம் எழும்புகின்றது.