பின்பு நான் இறைவாக்கினளுடன் கூடினேன்; அவள் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றாள். அப்போது ஆண்டவர் என்னை நோக்கி, "அவனுக்கு மாஹெர்-ஷலால்-ஹாஷ் -பாஸ் எனப் பெயரிடு.
ஏனெனில் குழந்தை, 'அப்பா, அம்மா' என்று கூப்பிடக் கற்றுக் கொள்வதற்குள் தமஸ்குவின் செல்வங்களும், சமாரியாவின் கொள்ளைப் பொருளும் அசீரிய அரசனுக்கு முன் வாரிக் கொண்டு போகப்படும்" என்று சொன்னார்.
இதோ ஆண்டவர் இம் மக்களுக்கு எதிராக, ஆற்றல் மிக்க பேராற்றின் பெருவெள்ளத்தை அதாவது, அசீரியா அரசனையும் அவன் மகிமை அனைத்தையும் திரண்டுவரச் செய்திடுவார்; எல்லாக் கால்வாய்களிலும் அதன் வெள்ளம் பெருகும், கரைகள் அனைத்திலும் புரண்டு பாயும்.
யாண்டும் ஒரே வெள்ளக் காடாய்ப் பெருகியோடி, யூதா நாட்டிலும் பாய்ந்து அதன் கழுத்தை எட்டும்; எம்மானுவேலே, உன் நாட்டின் பரப்பையெல்லாம் அது நிரப்பி நிற்கும்."
மக்களினங்களே, அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் தோல்வியுறுவீர்கள்; தொலை நாடுகளே, நீங்களெல்லோரும் செவி சாயுங்கள்; நீங்கள் போர்க்கோலம் கொள்ளுங்கள், தோல்வியே அடைவீர்கள்; நீங்கள் போர்க்கோலம் கொள்ளுங்கள், தோல்வியே அடைவீர்கள்;
ஒன்றுகூடி ஆலோசனை செய்யுங்கள்; அதுவும் விழலுக்கு இறைத்த நீராய்த் தான் போகும். நீங்கள் ஆணை பிறப்பியுங்கள், அதுவும் நிலை நிற்காது; ஏனெனில் கடவுள் நம்மோடிருக்கிறார்.
இந்த மக்கள் சதித் திட்டம் என்று சொல்வதையெல்லாம், நீங்களும் சதித் திட்டம் என்று சொல்லாதீர்கள். அவர்கள் அஞ்சுவதற்கு நீங்கள் அஞ்சாதீர்கள், அஞ்சி நடுக்கம் கொள்ளாதீர்கள்.
சீயோன் மலை மேல் கோயில் கொண்டுள்ள சேனைகளின் ஆண்டவர் இஸ்ராயேலில் ஏற்படுத்திய அடையாளங்களாகவும் முன்னறிகுறிகளாகவும், இதோ நானும், ஆண்டவர் எனக்கீந்த பிள்ளைகளும் இருக்கிறோம்.
மை வித்தைக்காரரையும் முணுமுணென்று ஓதிக் குறிசொல்லும் மந்திரவாதிகளையும் குறி கேளுங்கள்" என்று உங்களிடம் அவர்கள் சொல்லுகிறார்களே, குலதெய்வத்தை ஆலோசிப்பதல்லவா மக்களுக்கு முறைமை? வாழ்வோருக்காகச் செத்தவரையல்லவா குறி கேட்பார்கள்?
பெருந்துன்பத்தோடும் பசியோடும் அவர்கள் நாட்டைக் கடந்து செல்வர்; அவர்கள் பசியினால் வாடும் போது, ஆத்திரங் கொண்டு தங்கள் அரசனையும் கடவுளையும் சபிப்பார்கள்; மேலே அண்ணாந்து பார்ப்பார்கள்,
கீழே தரையைக் குனிந்து நோக்குவார்கள், கடுந் துயரும் இருளும் மன வேதனையின் காரிருளும் புலப்படும், எங்கும் இரவே பரவியிருக்கும், மன வேதனையில் இருப்பது காரிருளில் இருப்பதன்றோ?