ஆண்டவர் கூறுகிறார்: "வானம் நம்முடைய அரியணை, பூமி நம்முடைய கால் மணை; அப்படியிருக்க, நீங்கள் நமக்கெனக் கட்டும் கோயில் எங்கே? நாம் வீற்றிருக்கும் இந்த இடந்தான் யாது?
"மாட்டை வெட்டிப் பலியிடுவோன் நமக்கு மனிதனைக் கொலை செய்பவன் போலாம்; ஆட்டை வெட்டுகிற ஒருவன் நாயை மூளை சிதற அடிப்பவன் போலாம்; காணிக்கை ஒப்புக்கொடுக்கிறவன் பன்றியின் இரத்தத்தை ஒப்புக் கொடுப்பவன் போலாம்; தூபக் காணிக்கை தரக் கருத்துள்ளவன் சிலையை வாழ்த்தித் தொழுபவன் போலாம்; தங்கள் போக்கின்படியே இவற்றையெல்லாம் தேர்ந்துகொண்டனர், அருவருப்பானவற்றில் அவர்களின் உள்ளம் இன்பம் கண்டது.
ஆதலால் நாம் அவர்களுக்குத் துன்பங்களைத் தருவோம், அவர்கள் அஞ்சுகின்றவற்றை அவர்கள்மேல் வரச் செய்வோம்; ஏனெனில் நாம் கூப்பிட்டோம், அவர்களுள் பதில் தருபவன் ஒருவனுமில்லை; நாம் பேசினோம், அவர்கள் கேட்கவில்லை; நம் கண்கள் முன்பாகத் தீமை செய்தார்கள், நமக்கு விருப்பமில்லாதவற்றில் அவர்கள் இன்பம் கண்டார்கள்."
ஆண்டவருடைய வாக்கைக் கேட்டு அஞ்சுகிறவர்களே, அவர் சொல்வதைக் கேளுங்கள்: "நமது திருப்பெயரை முன்னிட்டு உங்களைப் பகைத்து வெறுத்துத் தள்ளும் உங்கள் சகோதரர்கள், 'ஆண்டவர் மகிமைப்படுத்தப்படட்டும். உங்கள் மகிழ்ச்சியைக் கொண்டு அவரை நாங்கள் கண்டு கொள்வோம்' என்றார்கள்; ஆனால் அவர்கள்தான் வெட்கிப் போவார்கள்.
இத்தகைய நிகழ்ச்சியை யாரேனும் கேட்டதுண்டோ? இதைப் போன்றது ஒன்றை யாரேனும் கண்டதுண்டோ? ஒரே நாளில் ஒரு நாட்டைப் பெற்றெடுக்க முடியுமோ? ஒரே நொடியில் மக்களினம் ஒன்றைப் பிறப்பிக்க முடியுமோ? ஆயினும் சீயோன் பிரசவ வேதனையுற்றவுடனே தன் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.
பேறு காலத்தை நெருங்கச் செய்துவிட்டுப் பிள்ளை பிறக்காமல் செய்து விடுவோமோ? என்கிறார் ஆண்டவர்; பிரசவ வேதனையைக் கொடுத்து விட்டுப் பிள்ளை பிறக்காமல் தடுத்து விடுவோமோ? என்கிறார் உன் கடவுள்.
யெருசலேமுடன் சேர்ந்து மகிழ்ச்சியடையுங்கள், அவள் மேல் அன்பு கொண்ட அனைவரும் அக்களியுங்கள்; அவளைக் குறித்துத் துயரப்படும் நீங்கள் எல்லோரும் அவளோடு சேர்ந்து அகமகிழுங்கள்.
ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, ஆற்றுப் பெருக்கு போல் அவள் மேல் சமாதானத்தை நாம் பொழிந்திடுவோம்; மடை புரண்டோடும் வெள்ளம் போல் அவள் மேல் மக்களினங்களின் மகிமையை ஓடச் செய்வோம்; அவள் பாலை அருந்துவீர்கள், மார்போடணைக்கப்படுவீர்கள், மடிமேல் சீராட்டப் பெறுவீர்கள்.
இவற்றை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயமும் மகிழ்ச்சி கொள்ளும்; உங்கள் எலும்புகள் புல்லைப் போலப் பசுமை பெற்றெழும், ஆண்டவர் தம்முடைய ஊழியர்களுக்கு தமது வல்லமையுள்ள கரத்தைக் காட்டுவா; தம் பகைவர் மேல் கோபத்தைக் கொட்டித் தீர்ப்பார்.
சோலைக்குள் சென்று தொழுவதற்காகத் தங்கள் நடுவிலுள்ள ஒருவன் சொற்படி தங்களைச் சுத்திகரம் செய்து தூய்மையாக்கிக் கொள்பவர்களும், பன்றி இறைச்சியையும் அருவருப்பானதையும் சுண்டெலியையும் தின்கிறவர்களும் ஒருங்கே அழிக்கப்படுவார்கள், என்கிறார் ஆண்டவர்.
அவர்களுடைய செயல்களையும் எண்ணங்களையும் நாம் அறிவோம்; வேற்றினத்தார், பிறமொழியினர் அனைவரையும் கூட்டிச் சேர்க்க நாமே வருகிறோம்; அவர்கள் கூடி வந்து நம்முடைய மகிமையைக் காண்பார்கள்.
அவர்கள் நடுவில் ஓர் அடையாளத்தை நாட்டுவோம்; அவர்களுள் மீதியாய் இருப்பவர்களை ஆப்பிரிக்காவுக்கும், வில் வீரர்கள் வாழும் லீதியாவுக்கும், தூபால், கிரீஸ் நாடுகளுக்கும், தொலைவிலுள்ள தீவுகளுக்கும், நம் திருப்பெயரைக் கேட்டிராதார், நம் மகிமையைக் கண்டிராதார் அனைவரிடமும் அனுப்புவோம்; அவர்களும் மக்களினங்களுக்கு நம் மகிமையை வெளிப்படுத்துவார்கள்.
அவர்கள் ஆண்டவருக்கு உகந்த காணிக்கையாக எல்லா மக்களினங்களினின்றும் உங்கள் சகோதரரைச் சேர்த்து, இஸ்ராயேல் மக்கள் காணிக்கைகளைச் சுத்தமான பாத்திரத்தில் ஏந்தி ஆண்டவரின் கோயிலுக்குக் கொண்டு வருவது போல் அவர்களைக் குதிரைகள் மேலும் தேர்களின் மீதும், பல்லக்குகளிலும், கழுதைகள் மேலும், ஒட்டகங்கள் மேலும் ஏற்றி யெருசலேமிலுள்ள நமது பரிசுத்த மலைக்குக் கொண்டுவருவார்கள், என்கிறார் ஆண்டவர்.