அவை நெருப்பில் எரியும் விறகைப் போலவும், நெருப்பால் கொதிக்கும் தண்ணீரைப் போலவும் ஆகும். உமது பெயர் உம் பகைவர்களுக்கு விளங்கவும், புறவினத்தார் உம் திருமுன் நடுங்கவும் நீர் வரமாட்டீரா!
மகிழ்ச்சியோடு நீதியைக் கடைப்பிடிப்பவனையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைவு கூர்கிறவர்களையும், நீர் எதிர்கொண்டு வந்து சந்திக்கிறீர்; இதோ நீர் எங்கள் மேல் சினங்கொண்டீர், நாங்களோ பாவஞ்செய்தோம்; அவற்றிலேயே நாங்கள் நெடுங்காலமாய் உழல்கிறோம், எங்களுக்கும் மீட்புக் கிடைக்குமோ?
நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்ட மனிதனைப் போல் ஆனோம், எங்கள் நீதியின் செயல்கள் யாவும் கறைபட்ட ஆடை போலாயின; இலை போல நாங்கள் அனைவரும் உதிர்ந்து போனோம், காற்றைப் போல் எங்கள் அக்கிரமங்கள் எங்களை அடித்துப் போயின.
உமது பெயரைக் கூவியழைப்பவன் எவனுமில்லை, எழுந்து உம்மைப் பற்றிக்கொள்பவன் ஒருவனுமில்லை; எங்களிடமிருந்து உமது முகத்தை மறைத்துக் கொண்டீர், எங்கள் அக்கிரமங்களின் கையில் எங்களை விட்டு விட்டீர்.
பரிசுத்தமும் மகிமையும் வாய்ந்த எங்கள் கோயில், எங்கள் தந்தையர் உம்மைப் புகழ்ந்து கொண்டாடிய அந்த இடம் தீக்கிரையாகி அழிந்ததே; எங்கள் சிறந்த கட்டடங்கள் அனைத்தும் பாழடைந்த நிலையில் கிடக்கின்றனவே.