சீயோனைப் பற்றிப் பேசாமல் நான் மௌனமாய் இருக்கமாட்டேன், யெருசலேமின் காரியத்தில் சோர்வடைய மாட்டேன்; அன் நீதி சுடரொளி போல வெளிப்படு மட்டும், அதன் மீட்பு தீப்பந்தம் போலச் சுடர் விடும் வரையிலும் நான் அமைதியடைய மாட்டேன்.
புறவினத்தார் உன் நீதியைக் காண்பார்கள், அரசர்கள் அனைவரும் உன் மகிமையை நோக்குவார்கள்; புதுப் பெயர் ஒன்று உனக்கு வழங்கப்படும், ஆண்டவரின் நாவே அந்தப் பெயரைச் சூட்டும் .
தள்ளப்பட்டவள்' என நீ இனி அழைக்கப்படமாட்டாய், 'கைவிடப்பட்டவள்' என உன் நாடும் இனிச் சொல்லப்படாது, 'என் அன்புடையாள்' என நீ அழைக்கப்படுவாய், 'மணமானவள்' என உன் நாடும் சொல்லப்படும்; ஏனெனில் ஆண்டவர் உன் மேல் அன்பு கூர்ந்தார், உன் நாடு இறைவனுக்கு வாழ்க்கைப்படும்.
இளைஞன் கன்னிப் பெண்ணை மணந்து கொள்வது போல், உன்னை அமைத்தவர் உன்னை மணந்து கொள்வார்; மணவாளன் தன் மணவாட்டியைக் குறித்து மகிழ்வது போல், உன் கடவுள் உன்னைக் குறித்து மகிழ்ச்சியடைவார்.
யெருசலேமே, உன் மதில்கள் மேல் சாமக் காவலரை ஏற்படுத்தினோம், இரவும் பகலும் நாள் முழுதும் அவர்கள் மௌனமாய் இரார்கள்; ஆண்டவரை நினைவு கொள்ளும் நீங்கள், என்றென்றும் வாய் மூடிக் கிடக்காதீர்கள்.
ஆண்டவர் தம் வலக்கையால் ஆணையிட்டு, வல்லமையுள்ள தம் கரமுயர்த்தி உறுதி சொன்னார்: "உன் கோதுமையைப் பகைவர்களுக்கு உணவாக இனி நாம் தரவே மாட்டோம்; நீ உழைத்து பிழிந்த திராட்சை இரசத்தைப் புறவினத்தாரின் மக்கள் குடிக்க விடமாட்டோம்.
ஆனால் அறுவடை செய்தவர்களே அதைச் சாப்பிடுவார்கள், அதற்காக ஆண்டவரை வாழ்த்துவார்கள்; திராட்சைப் பழங்களைச் சேர்த்தவர்களே அதன் இரசத்தை நமது திருக்கோயிலின் முற்றத்தில் பருகுவார்கள்."
இதோ, உலகத்தின் எல்லை வரை கேட்கும்படி, ஆண்டவர் அறிவித்துச் சொன்னதாவது: "இதோ, உன் மீட்பர் வருகின்றார், அவருடைய வெற்றிப் பரிசு அவரோடு இருக்கிறது; அவர் முன்னால் அவருடைய வெற்றிச் சின்னங்கள் வருகின்றன" என்று சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்.
அப்போது, 'பரிசுத்த மக்கள்' என அவர்களை அழைப்பார்கள், 'ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள்' என்பார்கள்; நீயோ 'தேடிக் கொள்ளப்பட்டவள்' எனப்படுவாய், 'கைவிடப்படாத நகரம்' என்று பெயர் பெறுவாய்.