ஆண்டவர் கூறுகிறார்: "நீதியைக் கடைப்பிடியுங்கள், நேர்மையானதைச் செய்யுங்கள்; ஏனெனில் நாம் தரப்போகும் மீட்பு அண்மையில் இருக்கிறது, நமது நீதி வெளியாகப் போகிறது.
இவ்வாறு செய்கிறவன் பேறு பெற்றவன்; இதைக் கைக்கொண்டு ஓய்வு நாளை அவசங்கை செய்யாமல் அதைக் கடைப் பிடித்து, எவ்வகையிலும் தீமை செய்யாமல் தன் கைகளைக் காத்துக்கொள்ளுகிற மனிதனும் பேறு பெற்றவன்!"
ஆண்டவரை அணுகி வரும் அந்நியன், "தம் மக்களிடமிருந்து திண்ணமாய் ஆண்டவர் என்னைப் பிரித்து விடுவார்" என்று சொல்லாதிருக்கட்டும்; அவ்வாறே அண்ணகனும், "இதோ, நான் பட்ட மரந்தானே" என்று கூறாதிருக்கட்டும்.
ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: "நமது ஓய்வு நாளைக் கடைப்பிடித்து, நமக்குகந்தவற்றையே தேர்ந்து கொண்டு, நமது உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றியிருக்கும் அண்ணகர்களுக்கு,
நமது கோயிலுக்குள் நம் சுற்றுக் கட்டடங்களில் ஓர் இடமும், மனிதர்களின் புதல்வர், புதல்வியரின் பெயர்களிலும் சிறந்ததொரு பெயரும் கொடுப்போம்; ஒருபோதும் அழியாத, முடிவில்லாத பெயரை அவர்களுக்குச் சூட்டுவோம்.
ஆண்டவரிடம் அவரை வழிபடுவதற்காக அணுகி வந்து, அவருடைய அடியார்களாய் இருக்கும்படி ஆண்டவரின் திருப்பெயர் மேல் அன்பு கூர்கிற அந்நியர்கள் ஓய்வு நாளை அவசங்கை செய்யாமல் அதைக் கடைப்பிடித்து நமது உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றியிருந்தால் -
அவர்களை நமது பரிசுத்த மலைக்குக் கூட்டி வந்து, நம் செப வீட்டில் அவர்கள் மகிழ்ந்திருக்கச் செய்வோம்; நமது பீடத்தின் மேல் அவர்கள் தரும் தகனப் பலிகளும் மற்றப் பலிகளும் நமக்குகந்தவையாய் ஏற்கப்படும்; ஏனெனில் நம் வீடு எல்லா மக்களினங்களுக்கும் செப வீடு என வழங்கப்படும்.
பேராசை கொண்ட ஈன நாய்கள், போதுமென்ற மனமே அவர்களுக்கில்லை; மேய்ப்பவர்களுக்குக் கூட கொஞ்சமும் அறிவில்லை, அனைவரும் தத்தம் போக்கில் நெறி தவறிப் போயினர்; பெரியவன் முதல் சிறியவன் வரையில் ஒவ்வொருவனும் தன் தன் ஆதாயத்தையே கருதுகிறான்.