பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ச்சியால் கூச்சலிடு! பிரசவ வேதனையுறாத மங்கையே, அக்களித்து ஆர்ப்பரி! ஏனெனில் கைவிடப்பட்டவளின் மக்கள் கணவனைக் கொண்டுள்ளவளின் மக்களை விடப் பலராயினர், என்கிறார் ஆண்டவர்.
அஞ்சாதே, ஏனெனில் நீ அவமானம் அடையமாட்டாய், கலங்காதே, ஏனெனில் நீ வெட்கத்துக்கு உள்ளாகமாட்டாய்; உன் இளமையின் வெட்கத்தை மறந்துவிடுவாய், உன் கைம்மையின் நிந்தையை இனி நினைக்கமாட்டாய்;
ஏனெனில் உன்னைப் படைத்தவரே உனக்குக் கணவன், சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்; இஸ்ராயேலின் பரிசுத்தரே உன் மீட்பர், உலகுக்கெல்லாம் கடவுள் என அழைக்கப்படுகிறார்.
ஏனெனில், கைவிடப்பட்டு மனம் நொந்தவளான மனைவியை அழைப்பது போலும், இளமை முதலே துணைவியாய் இருந்த ஒருத்தியை மணமுறிவுக்குப் பின் அழைப்பது போலும் ஆண்டவர் உன்னை அழைக்கிறார், என்கிறார் உன்னுடைய கடவுள்.
பொங்கிய கோபத்தில் ஒரு நொடிப் பொழுது உன்னிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொண்டோம்; ஆயினும், முடிவில்லாத அன்போடு உன் மேல் இரக்கம் கொள்வோம், என்கிறார் உன் மீட்பராகிய ஆண்டவர்.
நோவே நாட்களில் நாம் செய்தது போல் இன்றும் செய்வோம்; நோவே காலத்துப் பெருவெள்ளம் இனி மேல் மண்ணுலகை மூழ்கடிக்காது என்று ஆணையிட்டுச் சொன்னது போல், உன் மேல் சினங்கொள்ளவே மாட்டோம் என்றும், உன்னைக் கண்டனம் செய்யமாட்டோம் என்றும் ஆணையிட்டு உனக்கும் சொல்லியுள்ளோம்.
மலைகள் நிலைபெயரலாம், குன்றுகள் அசைந்து போகலாம், ஆனால் உன்மீது நாம் கொண்ட அன்பு நிலை பெயராதிருக்கும்; நம் சமாதானத்தின் உடன்படிக்கை அசையாதிருக்கும், என்கிறார் உன் மேல் இரக்கம் கொள்ளும் ஆண்டவர்.