இளந்தளிர் போல் அவர் வளர்ந்தார், வறண்ட நிலத்திலிருக்கும் வேர் போலத் துளிர்த்தார்; அவரைப் பார்த்தோம், அவரிடம் அழகோ அமைப்போ இல்லை; கவர்ச்சியான தோற்றமும் இல்லை.
இகழப்பட்டவர், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவர்; அவர் துன்புறும் மனிதனாய் துயரத்திலாழ்ந்தவராய் இருந்தார்; கண்டோர் கண் மறைத்து அருவருக்கும் ஒரு மனிதனைப் போல், அவர் இகழப்பட்டார், நாம் அவரை மதிக்கவில்லை.
மெய்யாகவே அவர் நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார், நம்முடைய நோய்களைச் சுமந்துகொண்டார்; ஆனால் அவர் தண்டனைக்குள்ளானவர் எனவும், கடவுளால் ஒறுக்கப்பட்டவர் எனவும், வாதிக்கப் பட்டவர் எனவும் நாம் எண்ணினோம்.
ஆனால் நம் பாவங்களுக்காகவே அவர் காயப்பட்டார், நம் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்; நம்மை நலமாக்கும் தண்டனை அவர் மேல் விழுந்தது, அவருடைய காயங்களால் நாம் குணமடைந்தோம்.
அவர் கொடுமையாய் நடத்தப்பட்டார்; தாழ்மையாய் அதைத் தாங்கிக்கொண்டார்; அவர் வாய்கூடத் திறக்கவில்லை; கொல்வதற்காக இழுத்துச் செல்லப்படும் ஆட்டுக்குட்டிபோலும், மயிர் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறியாடு போலும் அவர் வாய் திறக்கவில்லை.
கொடிய தீர்ப்புக்குப் பின் அவர் கொண்டு செல்லப்பட்டார், அவருக்கு நேர்ந்ததைப் பற்றி அக்கறை கொண்டவன் யார்? ஆம், அவர் வாழ்வோர் உலகினின்று எடுக்கப்பட்டார், தம் இனத்தாரின் அக்கிரமங்களுக்காகவே அவர் வதைக்கப்பட்டார்.
பொல்லாதவர்களோடு அவருக்குக் கல்லறை தந்தார்கள், சாகும் போது அவர் தீமை செய்கிறவர்களோடு இருந்தார்; ஆயினும் வன்முறைச் செயல் ஏதும் அவர் செய்தவர் அல்லர், அவருடைய வாயில் பொய்யே வந்ததில்லை.
அவரை வேதனையிலாழ்த்தி நொறுக்க ஆண்டவர் விரும்பினார். தம்மையே பாவத்திற்காக அவர் பலியாக்கினால், பெரியதொரு சந்ததியைக் கண்டு நீடுவாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையால் நிறைவேறும்.
தம் ஆன்மா பட்ட வேதனையின் பலனை அவர் கண்டு நிறைவு கொள்வார்; நம் ஊழியனாகிய அந்த நீதிமான் தமது அறிவினால் பலரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொள்வார்.
ஆதலால் பலபேரை அவருக்கு நாம் பங்காகத் தருவோம், அவரும் வல்லவர்களோடு கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வார்; ஏனெனில் சாவுக்குத் தம் ஆன்மாவைக் கையளித்தார், பாவிகளுள் ஒருவனாய்க் கருதப்பட்டார்; ஆயினும் பலருடைய பாவத்தைத் தாமே சுமந்து கொண்டு பாவிகளுக்காகப் பரிந்து பேசினார்.