எழுந்திரு, சீயோனே எழுந்திரு, எழுந்து உன்னுடைய ஆற்றலை அணிந்து கொள்; பரிசுத்தரின் பட்டணமாகிய யெருசலேமே, உனது மகிமையின் ஆடைகளை உடுத்திக் கொள்; ஏனெனில் விருத்தசேதனம் செய்யாதவனும், தீட்டுப்பட்டவனும் உன் நடுவே போகும்படி இனி நேரிடாது.
ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: முன்னாளில் நம் மக்கள் அந்நியராய்க் குடியேறி வாழ்வதற்காக எகிப்துக்கு இறங்கிப் போனார்கள்; அசீரியன் காரணம் ஏதுமில்லாமலே அவர்களை வதைத்தான்;
இப்பொழுதோ காரணமின்றி நம் மக்கள் கொண்டு போகப்பட்ட பின், நமக்கு இங்கே என்ன வேலை, என்கிறார் ஆண்டவர். அவர்களை ஆளுகிறவர்கள் அநியாயமாய் நடக்கிறார்கள், நாள் முழுதும் இடைவிடாமல் நம் திருப்பெயரைப் பழித்துரைக்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
இதோ, உன் சாமக்காவலர் குரல் கேட்கிறது, அவர்கள் தம் குரலை உயர்த்தி மகிழ்ச்சியோடு ஆர்பரிக்கிறார்கள்; ஏனெனில் ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை நேருக்கு நேராய்க் காண்கிறார்கள்.
யெருசலேமின் பாழடைந்த இடங்களே, நீங்கள் அனைவரும் அக்களித்து ஆர்ப்பரியுங்கள்; ஏனெனில், ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் தந்தார், யெருசலேமை அவர் மீட்டருளினார்.
மக்களினங்கள் அனைத்தின் கண்களுக்கும், ஆண்டவர் தம் பரிசுத்த கைவன்மையைக் காட்டினார். உலகின் கடைக் கோடி நாடுகள் எல்லாம், நம் கடவுள் தரும் மீட்பைக் காணப்போகின்றன.
நீங்கள் விழுந்தடித்து அவசரமாய்ப் புறப்பட மாட்டீர்கள், ஓட்டம் ஓட்டமாய் ஓடவும் மாட்டீர்கள்; ஏனெனில் ஆண்டவர் உங்களுக்கு முன்னால் நடப்பார், இஸ்ராயேலின் கடவுள் காவற்படை போல் உங்களைப் பின்தொடர்வார்.
அதே அளவுக்கு மக்களினங்கள் பல திடுக்கிடும், அரசர்களும் அவரைப் பார்த்து, வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் சொல்லப்படாத ஒன்றைக் காண்பார்கள், இதுவரை கேட்டிராத ஒன்றைப் பார்ப்பார்கள்.