ஆண்டவர் அபிஷுகம் செய்த சீருசுக்கு முன்பாக மக்களினங்களைக் கீழ்ப்படுத்தவும், அரசர்கள் புறங்காட்டி ஓடச் செய்யவும், அவன் முன் கோட்டைக் கதவுகள் திறக்கப்படவும், கோட்டை வாயில்கள் மூடப்படாதிருக்கவும், அவனுடைய வலக் கையைப் பிடித்துக் கொண்டு, ஆண்டவர் அவனுக்குக் கூறுவது:
உன்னைப் பெயர் சொல்லி அழைக்கிற இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் நாமே என்பதை நீ அறியும்படி, மக்கள் மறைத்து வைத்துள்ள புதையல்களையும், மறைவிடத்திலிருக்கும் கருவூலங்களையும் கையளிப்போம்.
நம் ஊழியனாகிய யாக்கோபை முன்னிட்டும், நாம் தேர்ந்து கொண்ட இஸ்ராயேலின் பொருட்டும், உன்னை நாம் பெயரிட்டு அழைத்தோம்; நம்மை நீ அறியாதவனாயிருந்தும், உனக்குச் சிறப்புப் பெயர் தந்தோம்.
தன்னை உருவாக்கியவனுடன் வாதாடுகிற மட்கலத்திற்கு ஐயோ கேடு! களிமண் குயவனை நோக்கி, 'நீ என்ன செய்கிறாய்? உன் வேலைப்பாட்டில் கைத்திறமையில்லை' என்று சொல்வதுண்டோ?
இஸ்ராயேலின் பரிசுத்தரும், அதைப் படைத்தவருமான ஆண்டவர் கூறுகிறார்: நம் பிள்ளைகளைப் பற்றி நம்மைக் கேட்பதும், நம் கைவேலையைக் குறித்து நமக்குக் கட்டளையிடுவதும் உங்கள் வேலையா?
வெற்றிக்கென்று சீருசை நாமே தூண்டினோம், அவன் பாதைகளையெல்லாம் சீர்ப்படுத்தினோம்; நமது திருநகரைத் திரும்பவும் அவனே கட்டுவான், மீட்புக் கிரயமோ கையூட்டோ இன்றியே நாடுகடத்தப்பட்ட நம் மக்களை விடுதலை செய்வான்" என்கிறார் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர்.
இன்னும் ஆண்டவர் கூறுகிறார்: "எகிப்து தன் வேலைப் பயனாகிய செல்வங்களோடும், எத்தியோப்பியா தன் வணிகத்தால் கிடைத்த வருமானத்தோடும், சாபா தன் உயர்ந்து வளர்ந்த குடிகளோடும் இஸ்ராயேலே, உன்னிடம் வந்து சேரும்; உனக்கு அவை யாவும் உரிமையாகும், உன்னைப் பின்தொடர்வார்கள்; விலங்கிடப்பட்டவர்களாய் உன் முன் வந்து, உன்னை வணங்கி மன்றாடி, 'உன்னிடத்தில் மட்டுமே கடவுள் இருக்கிறார், உன்னிடத்திலன்றி வேறெங்கும் கடவுள் இல்லை' என்பார்கள்."
ஏனெனில் வானத்தைப் படைத்த ஆண்டவர் கூறுகிறார்: (அவரே கடவுள், அவர் தான் பூமியை உருவாக்கினார், அதைப் படைத்து நிலை நாட்டினார்; வெறுமையாய் இருக்கும்படி அதை உண்டாக்கவில்லை, அதில் மனிதர் வாழவே அதை உருவாக்கினார்): "நாமே ஆண்டவர், வேறு எவனுமில்லை;
மறைவிலோ, மண்ணுலகின் இருட்டான இடத்திலோ நாம் பேசினதில்லை; 'வீணாக நம்மைத் தேடுங்கள்' என்று யாக்கோபின் வித்துக்கு நாம் சொல்லவில்லை; ஆண்டவராகிய நாம் உண்மையைப் பேசுகிறோம், நேர்மையானவற்றை அறிவிக்கிறோம்.
புறவினத்தாருள் தப்பிப் பிழைத்தவர்களே, ஒன்றுகூடி எல்லாரும் சேர்ந்து வாருங்கள்; மரச் சிலையைத் தூக்கிக் கொண்டு வலம் வருவோரும், மீட்க முடியாத தெய்வத்திடம் வேண்டிக் கொள்வோரும் மதியீனர்கள் ஆவர்.
அறிவியுங்கன், உங்கள் நியாயத்தைக் கூறுங்கள், ஒன்றாய்க் கூடி ஆலோசனை செய்யுங்கள்; முதலிலிருந்தே இதை அறிவித்தவர் யார்? தொடக்கக் காலத்திலேயே தெரிவித்தவர் யார்? ஆண்டவராகிய நாமல்லவோ? நம்மையல்லால் வேறு தெய்வம் இல்லை. நீதியுள்ளவரும், மீட்கிறவருமான கடவுள் நம்மையல்லால் வேறு யாருமில்லை.
நம் மேலேயே நாம் ஆணையிட்டோம், நம் வாயிலிருந்து புறப்படுவது உண்மையே, பொய்யா மொழியே: (24) எல்லா முழந்தாளும் நமக்கு மண்டியிடும், எல்லா நாவும் நம் பெயரால் ஆணையிடும்.'
(25) நம்மைப் பற்றி மக்கள் சொல்வது இதுவே: ஆண்டவர் ஒருவரிடம் மட்டுமே நீதியும் வல்லமையும் இருக்கின்றன; அவருக்கு எதிராய் எழுந்தவர் அனைவரும், வெட்கத்தோடு அவர் முன் வருவர்.