நீ கடலைக் கடந்து செல்லும் போது நாம் உன்னோடிருப்போம்; ஆறுகளும் உன்னை மூழ்கடிக்கமாட்டா; தீ நடுவே நீ நடந்து போனாலும் எரிந்து போக மாட்டாய்; நெருப்பும் உன் முன் தணலற்று நிற்கும்.
நமது கண்ணுக்கு நீ விலையேறப் பெற்றவன், மதிப்புக்குரியவன், உன் மேல் மிகுந்த அன்பு கொண்டோம்; ஆதலால் தான் உனக்காக மனிதரைக் கையளிப்போம், உன் உயிருக்காக மக்களை மாற்றிக் கொள்வோம்.
'கொடு' என்று வட திசைக்குச் சொல்வோம்; 'தடுக்காதே' என்று தென் திசைக்குச் சொல்வோம்; தொலைவிலிருந்து நம் புதல்வர்களையும் பூமியின் எல்லையிலிருந்து நம் புதல்வியரையும் கொண்டு வா;
மக்களினங்கள் யாவும் ஒன்று கூடட்டும், எல்லா இனத்தவரும் ஒன்று சேரட்டும்; அவர்களுள் யார் இதை அறிவிக்கக்கூடும்? முன்னைய காரியங்களை நமக்கு அறியச் செய்யமுடியும்? அவர்கள் காட்சிகளைக் கொண்டு வந்து மெய்ப்பிக்கட்டும், அதைக் கேட்டு, மக்கள் 'உண்மை' எனச் சொல்லட்டுமே.
நீங்களே நமக்குச் சாட்சிகள் என்கிறார் ஆண்டவர், நாம் தேர்ந்து கொண்ட நம் ஊழியனும் நீங்களே. நம்மை அறிந்து நம் மேல் விசுவாசம் வைத்து, நாமே இருக்கிறவர் என்பதைக் கண்டு பிடிக்கச் செய்வது உங்கள் ஊழியமே. நமக்கு முன் தெய்வம் ஏதும் உண்டானதில்லை, நமக்குப் பின் ஏற்படப் போவதுமில்லை.
நாமே அறிவித்தோம், மீட்பு தந்தோம், தெரியப்படுத்தினோம்; உங்கள் நடுவில் இதையெல்லாம் செய்தது வேறு தெய்வமன்று; நீங்களே நமக்குச் சாட்சிகள், நாமே கடவுள் என்கிறார் ஆண்டவர்.
இஸ்ராயேலின் பரிசுத்தரும், உங்கள் மீட்பருமான ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "உங்களை முன்னிட்டுப் பபிலோனுக்கு எதிராகப் பகைவர்களை அனுப்புவோம்; அதன் தாழ்ப்பாள்களையெல்லாம் தகர்த்து விடுவோம், தங்கள் மரக்கலங்களைக் குறித்துப் பெருமை பாராட்டிக் கொள்ளும் கல்தேயர்களை முறியடிப்போம்.
இதோ, நாம் புதியன செய்கிறோம், இப்பொழுது அவை தோன்றும், நீங்களும் காண்பீர்கள்; பாழ்வெளியில் நாம் பாதையொன்று அமைப்போம், பாலை நிலத்தில் ஆறுகள் ஓடச் செய்வோம்.
காட்டு மிருகங்களும் குள்ள நரிகளும், தீக் கோழிகளும் நம்மை மகிமைப்படுத்தும்; ஏனெனில் தேர்ந்து கொள்ளப்பட்ட நம் மக்களின் தாகந்தீர்க்கப் பாழ்வெளியில் நீர் சுரக்கச் செய்வோம், பாலை நிலத்தில் ஆறுகள் புறப்படச் செய்வோம்.
தகனப்பலியாக ஆடுகளை நமக்கு ஒப்புக் கொடுக்கவில்லை. உங்கள் பலிகளால் நம்மை மகிமைப்படுத்தவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நாம் உங்களை வற்புறுத்தவில்லை, நமக்குத் தூபம் காட்டும்படி உங்களை நாம் கட்டாயப்படுத்தவில்லை.
பணம் போட்டு நமக்காக நீங்கள் நறுமணப் பொருள் வாங்கவில்லை, பலி மிருகங்களின் கொழுப்பால் நம்மை நிறைவுபடுத்தவில்லை; அதற்கு மாறாக உங்கள் பாவங்களால் நம்மை வருத்தினீர்கள், உங்கள் அக்கிரமங்களால் நமக்கு வேதனை தந்தீர்கள்.