செல்லுமிடமெல்லாம் வெற்றி எதிர்கொள்ளும் வீரரைக் கீழ்த்திசையில் எழுப்பியவர் யார்? அவருக்கு மக்களினங்களைக் கையளித்து, அரசர்களை அவருக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்? அவருடைய வாள் அவர்களை தவிடு பொடியாக்குகிறது, அவரது வில் அவர்களைப் புயலில் அகப்பட்ட வைக்கோலைப் போலச் சிதைக்கிறது.
கன்னான் தட்டானுக்கு ஊக்கமூட்டுவான், சுத்தியால் தட்டுபவன் சம்மட்டியால் அடிப்பவனிடம், பொருந்தும்படி பற்ற வைத்து, "நன்று" என்று சொல்லி உற்சாகப்படுத்துவான்; அசையாதபடி அதை ஆணிகளால் இணைப்பான்.
நீ அஞ்சாதே, ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம்; நம்பிக்கையில் தளராதே, ஏனெனில் நாம் உன் கடவுள்; உன்னை உறுதிப்படுத்துவோம், உனக்கு உதவி செய்வோம்; நம்முடைய வலக்கை உன்னைத் தாங்கிக் கொள்ளும்.
ஏழைகளும் எளியவரும் தண்ணீர் தேடுகின்றனர், ஆனால் கிடைக்கவில்லை; தாகத்தால் அவர்கள் நாக்கு வறண்டுள்ளது; ஆண்டவராகிய நாம் அவர்கள் மன்றாட்டைக் கேட்போம், இஸ்ராயேலின் கடவுளாகிய நாம் அவர்களைக் கைவிட மாட்டோம்.
மொட்டைக் குன்றுகளைப் பிளந்து ஆறுகளையும், பள்ளத் தாக்குகள் நடுவில் ஊற்றுகளையும் புறப்படச் செய்வோம்; பாலை நிலத்தை நீர் நிலைகளாகவும், வறண்ட பூமியை நீரோடைகளாகவும் ஆக்குவோம்.
அப்போது, ஆண்டவருடைய கையே இதைச் செய்தது, இஸ்ராயேலின் பரிசுத்தரே இதை உண்டாக்கினார் என்பதை எல்லாரும் பார்த்துத் தெரிந்து கொள்வர், சிந்தித்து ஒருங்கே கண்டுபிடிப்பர்.
அவர்களே வரட்டும், வந்து நடக்கப் போவதை நமக்கு எடுத்துச் சொல்லி அறிவிக்கட்டும்; முன்னே நிகழ்ந்தவற்றை எடுத்துச் சொல்லுங்கள், நாம் சிந்தித்து அவற்றின் விளைவுகளை அறிந்துகொள்வோம்; அல்லது நிகழப் போவதை நீங்களே நமக்குக் கூறுங்கள்.
நீங்கள் தெய்வங்களென நாம் அறியும் பொருட்டு, எதிர்காலத்தில் நடக்கப் போவதை அறிவியுங்கள்; நன்மையோ தீமையோ முடிந்தால் செய்யுங்கள், நாமே பார்த்து ஒருங்கே பேசிக்கொள்வோம்.
இதோ, நீங்கள் வெறுமையினின்று புறப்பட்டவர்கள், உங்கள் செயல் ஒன்றுமில்லாமையிலிருந்து செய்யப்பட்டது, உங்களைத் தேர்ந்து கொள்பவன் அருவருப்பானதைச் செய்கிறான்.
நாம் அறியும் பொருட்டுத் தொடக்கத்திலிருந்து அறிவித்தவன் யார்? "நீ சொன்னது சரி" என்று நாம் ஒப்புக் கொள்ளும்படி முதலிலிருந்தே கூறியவன் யார்? அவ்வாறு அறிவித்தவனோ, முன்னுரைத்தவனோ யாருமில்லை, உங்கள் சொற்களைக் கேட்டவனோ எவனுமில்லை