அந்தத் தூதுவர்களை எசேக்கியாஸ் அன்போடு வரவேற்றான்; மேலும் அவர்களுக்குத் தன் கருவூல அறையையும், வெள்ளி, பொன், நறுமணப் பொருட்கள், பரிமளத் தைலம் இவற்றையும், படைக்கலங்களின் கொட்டிலையும், தன் கிடங்குகளில் இருந்த எல்லாவற்றையும் காட்டினான். எசேக்கியாஸ் தன் அரண்மனையிலோ தன் ஆதீனத்திலோ அவர்களுக்குக் காட்டாதது ஒன்றுமே இல்லை.
அப்போது இசையாஸ் இறைவாக்கினர் எசேக்கியாஸ் அரசனிடம் வந்து, "இவர்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?" என்று கேட்டார். எசேக்கியாஸ், மிகத் தொலைவிலுள்ள நாடாகிய பபிலோனிலிருந்து என்னைக் காண வந்தனர்" என்று மறுமொழி சொன்னான்.
உன் அரண்மணையில் அவர்கள் என்ன பார்த்தார்கள்?" என்று அவர் கேட்க, எசேக்கியாஸ், "என் வீட்டிலுள்ள யாவற்றையும் பார்த்தார்கள்; அவர்களுக்கு நான் காட்டாதது என் கிடங்குகளில் ஒன்றுமே இல்லை" என விடை கொடுத்தான்.
இதோ நாட்கள் வருகின்றன; அப்போது உன் வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களும், உன் தந்தையர் சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் யாவும் பபிலோனுக்குக் கொண்டு போகப்படும்; ஒன்றும் விடப்படாது என்கிறார் ஆண்டவர்.
எசேக்கியாஸ் இசையாசை நோக்கி, "நீர் கூறிய ஆண்டவருடைய வாக்கு நல்லது தான்" என்றான். மேலும், "என்னுடைய வாழ்நாட்களில் சமாதானமும் உண்மையும் நிலவினால் போதும்" என்று நினைத்துக் கொண்டான்.