உன்னுடைய உள்ளம் பண்டைய திகிலையே இன்னும் நினைத்து, "நாம் செலுத்தும் திறையைக் கணக்குப் பார்ப்பவன் எங்கே? திறைப் பொருளை நிறுத்துப் பார்ப்பவன் எங்கே? நகைகளைச் சோதித்து வாங்குபவன் எங்கே?" என்று வியக்கும்.
இனித் திமிர்பிடித்த மக்களைக் காணமாட்டாய்; விளங்காத மொழி பேசுகிறவர்களையும், புரிந்து கொள்ள முடியாதபடி தெற்றித் தெற்றிப் பேசுகிறவர்களையும் நீ பார்க்க மாட்டாய்.
நாம் திருவிழாக்கள் கொண்டாடும் நகரமாகிய சீயோனைப் பார்! உன் கண்கள் யெருசலேமைப் பார்க்கும், அது அமைதியான இருப்பிடம், அசைக்க முடியாத கூடாரம்; அதனுடைய முளைகள் எக்காலத்தும் பிடுங்கப்பட மாட்டா, அவற்றில் பிணைத்துள்ள கயிறுகள் அறுந்து போகவு மாட்டா.
ஏனெனில் அங்கு தான் நம் ஆண்டவர் மகிமையோடு விளங்குவார்; அகலமான ஆறுகளையும் விரிந்த நீரோடைகளையும் உடைத்தான இடம் அது; துடுப்புகளால் செலுத்தப்படும் படகு அங்கே போகாது, போர்க்கப்பல் அவ்விடத்தில் நுழையாது.
உன்னுடைய கப்பற் கயிறுகள் தளர்ந்து போயின, பாய் மரத்தைக் கெட்டியாய் அவை பிடித்திருக்கவில்லை, அதில் உங்களால் பாயைப் பரப்பவும் முடியாது. உன் திரளான கொள்ளைப் பொருட்கள் பங்கிடப்படும், முடவர்களும் அதில் பாகம் பெறுவார்கள்.