ஒவ்வொருவரும் காற்றிலிருந்து காப்பாற்றும் ஒதுக்கிடமாகவும், புயலுக்கு மறைந்து கொள்ளும் புகலிடமாகவும், வறட்சியான இடத்திலே நீரோடை போலவும், பாலை நிலத்தில் கற்குகையின் நிழல் போலவும் இருப்பர்.
ஏனெனில் அறிவிலி மடமையானவற்றைப் பேசுவான், அவன் உள்ளம் அக்கிரமத்தைச் சிந்திக்கும்: அவனுடைய சிந்தனையெல்லாம் அக்கிரமம் செய்வதும், ஆண்டவரைக் குறித்துக் கபடமாய்ச் பேசுவதும், பசியுற்றவனின் ஆவலை நிறைவு செய்யாமலே விடுவதும், தாகமுற்றவனுக்கு நீர் தராமல் மறுத்து விடுவதுமே.
கயவனின் கயமைச் செயல்கள் பொல்லாதவை; ஏனெனில் எளியவனின் வழக்கு நீதியானதாலும், இவன் அந்த ஏழையைப் பொய் வார்த்தைகளால் கெடுக்கும்படி வஞ்சகத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுகிறான்.
ஓராண்டும் சில நாட்களும் கடந்த பின்னர், மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த நீங்கள் கலக்க மடைவீர்கள்; ஏனெனில் திராட்சை அறுவடை முடிந்து விட்டது, கனி கொய்தலும் இனி வராது.
முட்களும் முட்புதர்களும் கிளம்புகின்ற நம் மக்களின் நிலத்தைப் பற்றியும், மகிழ்ச்சி பொங்கிய நகரத்தின் இன்பம் நிறைந்த வீடுகள் அனைத்தைப் பற்றியும் புலம்புங்கள்.
ஏனெனில் அதன் அரண்மனை கைவிடப்படும், மக்கள் மலிந்த நகரம் வெறுமையாய் விடப்படும்; ஒப்பெல் குன்றும் காவல் கோட்டைகளும் என்றென்றைக்கும் குகைகளாய் மாறி விடும்; காட்டுக் கழுதைகளுக்கு உல்லாச இடமாகவும், மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாகவும் ஆகிவிடும்.