ஆண்டவர் கூறுகிறார்: "எதிர்த்துக் கலகம் செய்யும் மக்களுக்கு ஐயோ கேடு! நாம் கொடுக்காத ஆலோசனையை அவர்கள் செயல்படுத்துகிறார்கள்; நம் உள்ளத்திற்கு ஒவ்வாத ஒப்பந்தத்தைச் செய்கிறார்கள், இவ்வாறு பாவத்தின் மேல் பாவம் கட்டிக் கொள்ளுகிறார்கள்.
அவர்களுக்கு உதவிபுரிய இயலாத மக்களைக் குறித்து அனைவரும் வெட்கப் படுவார்கள்; அவர்களால் யாதொரு பயனோ உதவியோ கிடையாது. ஆனால் அவமானமும் அவமதிப்புமே கிடைக்கும்."
தெற்கு நோக்கிப் போகும் மிருகங்களைப் பற்றிய இறைவாக்கு: துன்பமும் நெருக்கடியும் நிறைந்திருக்கும் நாட்டின் வழியாய், ஆண்சிங்கமும் பெண்சிங்கமும், விரியனும் பறவை நாகமும், வெளிவந்து நடமாடும் நாட்டின் வழியாய்ப் பொதி மிருகங்களின் மேல் தங்கள் கருவூலங்களையும், ஒருவகையிலும் பயன் தராத மக்களுக்குக் கொண்டு போகிறார்கள்.
இப்பொழுது நீ போய் அவர்கள் முன்னிலையில் ஒரு பலகையில் எழுதி வை; புத்தகமொன்றில் குறித்து வை. இறுதிக் காலத்தில் அது என்றென்றைக்கும் ஒரு சாட்சியாக விளங்கட்டும்.
அவர்கள் காட்சி காண்பவர்களை நோக்கி, "நீங்கள் காட்சி காணவேண்டா" என்கிறார்கள்; தீர்க்கதரிசிகளிடம், "நேர்மையானவற்றை எங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூற வேண்டா; எங்கள் ஆசைக்கு உகந்தவற்றைப் பேசுங்கள், கற்பனைக் காட்சிகளைப் பார்த்துச் சொல்லுங்கள்.
ஆதலால் இஸ்ராயேலின் பரிசுத்தர் கூறுகிறார்: "நீங்கள் இவ்வாக்கியத்தை இகழ்ந்தீர்கள், அபாண்டத்திலும் கலகத்திலும் நம்பிக்கை வைத்து, அவற்றிலேயே ஊன்றியிருக்கிறீர்கள்.
அதனுடைய உடைப்பு, குயவனின் மண் பாத்திரம் சுக்கு நூறாய் உடைந்து அடுப்பிலிருந்து நெருப்பெடுக்கவோ பள்ளத்திலிருந்து கொஞ்சம் நீர் எடுக்கவோ பயன்படாததற்கு ஒப்ப, நீங்களும் நொறுக்கப்படுவீர்கள்."
ஏனெனில் இஸ்ராயேலின் பரிசுத்தரும் கடவுளுமான ஆண்டவர் கூறுகிறார்: "நீங்கள் திரும்பி வந்து அமைதியாய் இருந்தால் மீட்கப்படுவீர்கள்; அமரிக்கையிலும் நம்பிக்கையிலும் உங்கள் வலிமை இருக்கும்." ஆனால் உங்களுக்கு மனமில்லாமற் போயிற்று.
நீங்கள் "ஒருக்காலும் முடியாது, நாங்கள் குதிரை மேல் ஏறி ஓடிப்போவோம்" என்கிறீர்கள். அவ்வாறே ஓடிப்போங்கள். "விரைந்து செல்லும் வாகனங்களில் ஏறிச் செல்வோம்" என்கிறீர்கள். ஆகவே, உங்களைத் துரத்தி வருகிறவர்களும் உங்களை விட விரைவாக வருவார்கள்.
உங்களுள் ஆயிரம் பேர் ஒருவனுக்குப் பயந்தோடுவர்; ஐந்து பேருக்குப் பயந்து கொண்டு மலையுச்சியில் நிற்கும் கொடி மரம் போலும் குன்றின் மேலிருக்கும் அடையாள மரம் போலும் விடப்படும் வரை நீங்கள் ஓடுவீர்கள்.
யெருசலேமில் குடியிருக்கும் சீயோன் குடிகளே, இனிமேல் நீங்கள் எப்பொழுதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள் மேல் திண்ணமாய் இரக்கம் காட்டுவார்; உங்கள் கூக்குரலுக்கு உடனே செவிசாய்த்து அருள் செய்வார்.
ஆண்டவர் உங்களுக்குத் துன்பம் என்கிற அப்பத்தையும் வேதனை என்கிற நீரையும் கொடுத்தாலும், உங்களுடைய போதகர் இனி உங்களை விட்டு ஒருபோதும் விலக மாட்டார்; உங்கள் கண் முன்னாலேயே உங்கள் போதகர் இருப்பார்.
அப்போது, வெள்ளி முலாம் பூசிய படிமங்களையும், தங்க முலாம் பூசிய சிலைகளையும் வெறுத்து ஒதுக்குவீர்கள்; அசுத்தமானவை என்று சொல்லி அவற்றை வாரி வீசி, "தொலைந்து போங்கள்" என்பீர்கள்.
நீங்கள் நிலத்தில் விதை தெளித்துள்ள இடங்களிலெல்லாம், ஆண்டவர் உங்கள் விதைகளுக்கு மழை தருவார்; நிலம் மிகுதியான விளைவைத் தரச் செய்வார்; உணவுக்குப் பஞ்சமே இராது; அந்நாளில் ஆடுகள் உங்கள் மேய்ச்சல் நிலத்தில் தாராளமாய் மேயும்;
கோட்டைகள் இடிந்து விழுந்த பின்னர், பகைவர்கள் மாய்ந்து விழும் அந்த நாளில், உயர்ந்த மலை ஒவ்வொன்றிலும், ஓங்கிய குன்றுகள் அனைத்திலும் நீரோடைகள் வழிந்தோடும்.
ஆண்டவர் தம் மக்களின் காயங்களைக் கட்டி, அடிகளால் உண்டான புண்களை ஆற்றும் போது, நிலாவின் ஒளி கதிரவனின் ஒளியைப் போலும், கதிரவனின் ஒளி ஏழு நாட்களின் ஒளியெல்லாம் ஒன்று திரண்டாற் போல் ஏழு மடங்காகவும் இருக்கும்.
இதோ, தொலைவிலிருந்து ஆண்டவரின் பெயர் வருகின்றது; பொங்கியெழும் கோபத்தோடும் தாங்க முடியாத வேகத்தோடும் வருகிறது. சினத்தால் அவருடைய உதடுகள் துடிக்கின்றன, நாக்கில் கோபக் கனல் பறக்கின்றது.
கழுத்து வரையில் உயர்ந்து எழும் வெள்ளம் போல் அவருடைய மூச்சானது எழுந்து வருகிறது; மக்களினங்களை ஒன்றுமில்லாமையாய் அழிக்கவும், பொய்யான வழியில் இட்டுச் செல்லும் கடிவாளத்தை மக்களின் வாயில் மாட்டவும் வருகிறது.
அப்போது ஆரவாரமான கொண்டாட்டத்தின் இரவு காலத்திய இசை போலப் பாட்டு பாடுவீர்கள்; உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியானது, இஸ்ராயேலின் கற்பாறையாகிய ஆண்டவரின் மலைக்குத் தொழுகைக்குச் செல்பவன் கொண்டு போகும் இசைக் குழல் முழக்கத்தை ஒத்திருக்கும்.
ஆண்டவர் தமது வல்லமை மிக்க குரல் எங்கும் ஒலிக்கும்படி செய்வார்; அடிப்பதற்கு ஓங்கிய கையைக் கடுங்கோப மிரட்டலிலும், விழுங்கும் நெருப்புத் தழலிலும் காண்பிப்பார்; அப்போது பெருமழையும் சுழற்காற்றும் கல்மழையும் இருக்கும்.
அந்தக் கசை ஓயாமல் அடிக்கும், உங்களுடைய வீணையோசைக்கும் தாளத்திற்கும் ஏற்ப ஆண்டவர் அவர்கள் மேல் கசையால் அடிப்பார். ஓங்கிய கரங்களுடன் அவர்களோடு போர் புரிவார்.
ஏனெனில் ஏற்கனவே அவர்களுக்காக வேள்விக் குண்டம் ஏற்பாடாகியுள்ளது; அதுவே அரசனுக்கும் தயாராக்கப்பட்டுள்ளது; ஆழ்ந்து அகன்ற அக்குழியில் விறகும் வைக்கோலும் நிறைந்துள்ளன; ஆண்டவரின் கோபக் கனல் வீசும் மூச்சு கந்தக மழை போல் அவற்றை பற்ற வைக்கும்.