மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள், ஒவ்வொருவனும் தன் அயலானைத் துன்புறுத்துவான், இளைஞர் முதியோரை அவமதிப்பார்கள், கீழ்மக்கள் மேன்மக்களை அசட்டை செய்வார்கள்.
ஒருவன் தன் தந்தை வீட்டில் வாழும் சகோதரன் ஒருவனைப் பிடித்து, "உனக்கு ஆடையிருக்கிறது, ஆகவே நீ எங்கள் தலைவனாய் இருக்க வேண்டும்; பாழடைந்து கிடக்கும் இந்த அரசு உன் ஆட்சியில் இருக்கட்டும்" என்று சொல்வான்.
அப்போது அந்த மனிதன் மறுமொழியாக, "நான் மருத்துவனாய் இருக்கமாட்டேன்; என் வீட்டில் உணவோ ஆடையோ ஒன்றுமில்லை; என்னை மக்களுக்குத் தலைவனாய் வைக்க வேண்டாம்" என்று சொல்லி மறுத்து விடுவான்.
யெருசலேம் இடறித் தடுமாறுகிறது, யூதா கீழே விழுகிறது; ஏனெனில், அவர்களுடைய சொல்லும் செயலும் ஆண்டவருக்கு எதிராயுள்ளன, அவர் மகிமையின் கண்களுக்குச் சினமூட்டின.
அவர்களின் ஓரவஞ்சனையே அவர்களுக்கெதிராய்ச் சாட்சி கூறுகிறது, சோதோமைப் போல் தங்கள் பாவத்தைப் பறைசாற்றுகின்றனர், அதை மறைத்து வைப்பதில்லை. அவர்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் தங்கள் மேல் தீமையைத் தாங்களே வருவித்தனர்.
எம் மக்களே, சிறுவன் ஒருவனால் நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்கள், பெண்கள் உங்களை ஆளுகிறார்களே! எம் மக்களே, உங்களை ஆள்பவர்களே தவறான நெறியைக் காட்டுகிறார்கள், உங்கள் நெறிகளின் போக்கைக் குழப்புகிறார்கள்.
மூப்பரோடும் தம் மக்களின் தலைவர்களோடும் ஆண்டவர் முதற்கண் வழக்காடுகிறார்: "திராட்சைத் தோட்டக் கனிகளைத் தின்றவர்கள் நீங்களே, எளியவர்களைக் கொள்ளையிட்டப் பொருட்கள் உங்கள் வீடுகளில் நிறைந்துள்ளன;
யெருசலேம் பெண்களுக்கு எச்சரிக்கை: ஆண்டவர் தொடர்ந்து கூறினார்: சீயோனின் மங்கையர் அகந்தை கொண்டவர்கள், கழுத்தை நீட்டி நீட்டி நடக்கிறார்கள், கண் வீச்சுகளை வீசித் திரிகிறார்கள், நடக்கும் போது காற்சிலம்பு ஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து உலவுகிறார்கள்;
நறுமணத்திற்குப் பதிலாக நாற்றமும், பொன் ஒட்டியாணத்திற்குப் பதிலாகக் கயிறும், வாரி முடித்த கூந்தலுக்குப் பதிலாய் வழுக்கையும் இருக்கும். ஆடம்பர உடைகளுக்குப் பதில் கோணி ஆடையும், அழகுக்குப் பதிலாக சூட்டுத் தழும்பும் இருக்கும்.