இதோ, ஆண்டவர் அனுப்பிய ஆற்றலும் வல்லமையுமுள்ள ஒருவன், அவன் ஆலங்கட்டி மழை போலும், அழித்துப் பாழாக்கும் புயல் போலும், கரை புரண்டு பாயும் வெள்ளப்பெருக்குப் போலும், தன் கை வன்மையால் அவர்களைத் தரையில் வீழ்த்துவான்.
செழிப்பான பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்ற அதன் மகிமை மிக்க அழகாகிய வாடிப்போகும் மலர், கோடைக்காலம் வருமுன் பருவந் தப்பிப்பழுத்த அத்திப்பழம் போலாகும்; அதைக் கண்டவன் கையால் பறித்து அப்பொழுதே உண்டு விடுவான்.
யாருக்கு அவன் அறிவைப் புகட்டுவான்? யாருக்குச் செய்தியை விளக்கிக் கூறுவான்? பால் மறக்கடிக்கப்பட்ட சிறிய குழந்தைகளுக்கா? தாய் மார்பினின்று நீக்கப்பட்ட குழந்தைகளுக்கா?
ஆண்டவரின் வாக்கு அவர்களுக்கு இதுவே: "கட்டளை மேல் கட்டளை, கட்டளை மேல் கட்டளை, ஒழுங்கு மேல் ஒழுங்கு, ஒழுங்கு மேல் ஒழுங்கு, இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்." அவ்வாறே அவர்களும் புறப்பட்டுப் போய்ப் புறங்காட்டி வீழ்வர், நொறுக்கப்பட்டுக் கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
நாங்கள் சாவோடு ஓர் உடன்படிக்கை செய்துள்ளோம், பாதாளத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டோம், தீமை மடை புரண்டு வந்தாலும், அது எங்கள்மேல் வராது; ஏனெனில் பொய்மையில் நாங்கள் நம்பிக்கை வைத்தோம், பொய்மையாலேயே நாங்கள் காப்பாற்றப்பட்டோம்" என்று நீங்கள் சொன்னீர்களே.
ஆதலால் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, சீயோனில் ஓர் அடிப்படைக் கல்லை- பரிசோதித்து உறுதியானது எனக் கண்ட ஒரு கல்லை, விலையுயர்ந்த மூலைக்கல்லாய், உறுதியான அடிப்படையாய் நாம் நாட்டுவோம்: அது 'விசுவாசிக்கிறவன் இடறி விழ மாட்டான்' எனப்படும்.
அப்போது, சாவோடு நீங்கள் செய்த உடன்படிக்கை உடைபடும், பாதாளத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தம் ஒழிந்துபோம்; தீமை மடைபுரண்டு வரும் பொழுது, நீங்கள் அதனால் அடித்து நொறுக்கப்படுவீர்கள்.
தீமை பெருக்கெடுத்து வரும் போதெல்லாம் உங்களை அது வாரிக்கொண்டு போகும்; அதுவும் வைகறையிலே கிளம்பி, பகலிலும் இரவிலும் பெருக்கெடுத்தோடும்; இந்தச் செய்தியைக் கேட்டுக் கண்டு பிடிப்பதே ஒரு பெருந்திகிலாக இருக்கும்.
பெராசீம் மலை மீது நின்றது போல் ஆண்டவர் உங்களுக்கு விரோதமாய் எழுந்து நிற்பார்; கபாவோன் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டது போல், அவர் கோபங்கொள்வார். அவர் தமது செயலைச் செய்வார்; அச்செயல் புதுமையானதே! வேலையைச் செய்வார்; அவ்வேலை விந்தையானதே!
ஆகையால் இப்பொழுது ஏளனம் செய்வதை நிறுத்துங்கள்; இல்லையேல் உங்கள் தளைகள் இறுகிப்போகும்; ஏனெனில் நாடு முழுவதையும் அழிக்கும்படியாகச் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் இட்ட ஆணையை நான் கேட்டிருக்கிறேன்.
நிலத்தின் மேல்பரப்பை நிரவிய பின், சதகுப்பையை விதைத்துச் சீரகத்தைத் தெளிப்பானன்றோ? அதற்குரிய இடத்தில் கோதுமை, வாற் கோதுமை, துவரை, பயறு இவற்றை முறைப்படி விதைப்பானன்றோ?
அப்பத்திற்குரிய கோதுமை இடிக்கப்படுமோ? படாது; அதை இடைவிடாமல் புணையடித்துக்கொண்டே இருக்கிறதில்லை. வண்டி உருளையையும் குதிரைகளையும் அதன் மேல் செலுத்தும் போது, அதை நொறுக்கி விடுவதில்லை.