என் ஆன்மா இரவில் உம்மேல் ஆவல் கொள்ளுகிறது, என் ஆவி எனக்குள்ளே ஏக்கத்தோடு உம்மைத் தேடுகிறது; உம்முடைய நீதித்தீர்ப்புகளை நீர் பூமியின் மேல் செலுத்தும் போது, பூமியின் மக்கள் நீதி என்ன என்பதை அறிகின்றனர்.
இறைப்பற்றில்லாதவனுக்கு இரக்கம் காட்டினாலும் அவன் நீதியைக் கற்றுக் கொள்ளமாட்டான்; பரிசுத்தர்களின் நாட்டில் அவன் பாவங்களைச் செய்தான், ஆண்டவருடைய மகிமையை அவன் காணவில்லை.
ஆண்டவரே, உமது கை ஓங்கியுள்ளது, அவர்களோ அதைப் பார்க்கவில்லை. உம் மக்கள் மேல் உமக்குள்ள ஆர்வத்தைக் கண்டு, அவர்கள் வெட்சி நாணட்டும். உம்முடைய எதிரிகளுக்கென மூண்ட தீ அவர்களை விழுங்கட்டும்.
இறந்த கொடுங்கோலர் வாழ்வு பெறமாட்டார்கள், அரக்கரையொத்த அவர்கள் உயிர்த்தெழமாட்டார்கள்; ஏனெனில் அவர்களைத் தண்டித்து நொறுக்கினீர், அவர்களைப்பற்றிய ஞாபகமே இராதபடி அழித்தீர்.
நாங்களும் கர்ப்பமானோம், வேதனைப்பட்டோம், ஆனால் காற்றைப் பெற்றவர்களைப் போலத் தான் இருக்கிறோம்; நாட்டுக்கு எங்களால் மீட்பு கிட்டவில்லை, உலகத்தின் மக்கள் வீழ்ச்சியடையவில்லை.
இறந்து போன உம் மக்கள் வாழ்வு பெறுவார்கள், கொலையுண்ட என் இனத்தார் உயிர்தெழுவர். புழுதியில் குடியிருப்பவர்களே, விழித்தெழுங்கள், மகிழ்ச்சியினால் புகழ்பாடுங்கள்; ஏனெனில் நீர் பெய்யும் பனி ஒளி வீசும் பனி, கீழ் உலகமானது உயிர் கொடுக்கும்.
ஏனெனில், இதோ தம்முடைய இடத்திலிருந்து ஆண்டவர் வெளியே வருகிறார்; உலக மக்கள் அவருக்கெதிராய்ச் செய்த அக்கிரமத்துக்காக அவர்களைத் தண்டிக்க வருகிறார்; தன்மேல் சிந்தப்பட்ட இரத்தத்தை நிலம் வெளிப்படுத்தும்; கொலையுண்டவர்களை மறைத்து வைக்காது.