ஆண்டவரே, நீரே என் கடவுள்; உம்மை நான் மகிமைப் படுத்துவேன், உமது திருப்பெயரைப் போற்றிப் புகழ்வேன்; ஏனெனில் நீர் வியத்தகு செயல்களைச் செய்தீர்; பழங்காலத்திலேயே வகுத்திருந்த உம் திட்டங்களைப் பிரமாணிக்கமாகவும் திண்ணமாகவும் செய்து முடித்தீர்.
ஏனெனில் அந் நகரத்தை நீர் மண்மேடாக்கினீர், அரண் சூழ்ந்த பட்டணத்தைப் பாழாக்கினீர்; திமிர் கொண்டவர்களின் கோட்டையாய் இருந்த அது இனி ஒரு நகரமாயிராது; மீண்டும் கட்டப்படாது.
ஏனெனில் எளியவனுக்கு நீர் அரணாய் இருந்தீர், ஏழைக்கு அவன் துன்பத்தில் அரணாய் இருந்தீர்; கடும் புயலில் புகலிடமாகவும், கொடிய வெப்பத்தில் குளிர் நிழலாகவும் விளங்கினீர். ஏனெனில் முரடர்களின் சீற்றம் மதிலைத் தாக்கும் புயல் போலும், வறண்ட நிலத்தின் வெப்பம் போலும் இருக்கிறது.
சேனைகளின் ஆண்டவர் இந்த மலை மேலே எல்லா மக்களுக்கும் விருந்தொன்று தயாரிப்பார்; அறுசுவை உணவும் சிறந்த பழ ரசமும், கொழுப்பு நிறைந்த இறைச்சியும், வடிகட்டிச் சுத்தம் செய்த திராட்சை இரசமும் அவ்விருந்திலே பரிமாறப்படும்.
என்றென்றைக்கும் சாவை அழித்து விடுவார், கடவுளாகிய ஆண்டவர் எல்லா முகங்களினின்றும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்; உலகத்தில் எங்குமே இராதபடி தம் மக்களின் நிந்தையை அகற்றிவிடுவார்; ஏனெனில் ஆண்டவரே இதைச் சொல்லியிருக்கிறார்.
அந் நாளில் மக்கள் அனைவரும், "இதோ, இவரே நம் கடவுள், இவரையே நாம் எதிர்பார்த்திருந்தோம், இவரே நம்மை மீட்பார், இவரே ஆண்டவர், இவரையே நாம் எதிர்ப்பார்த்திருந்தோம், இவர் தரும் மீட்பைக் குறித்து அகமகிழ்ந்து அக்களிப்போம்" என்பார்கள்.
நீந்துபவன் நீந்தத் தன் கைகளை விரிப்பது போல மோவாப் அதன் நடுவில் தன் கைகளை விரிப்பான்; ஆயினும் ஆண்டவர் அவன் ஆணவத்தையும், கையினால் செய்யும் முயற்சிகளையும் தாழ்த்துவார்.