பொதுமக்களுக்கு எப்படியோ அப்படியே அர்ச்சகருக்கும், ஊழியனுக்கு எவ்வாறோ அவ்வாறே அவன் தலைவனுக்கும், பணிப் பெண்ணுக்கு எங்ஙனமோ அங்ஙனமே அவள் தலைவிக்கும், வாங்குபவனுக்கு எப்படியோ அப்படியே விற்பவனுக்கும், கடன் கொடுப்பவனுக்கு எவ்வாறோ அவ்வாறே கடன் வாங்குபவனுக்கும், வட்டி வாங்குபவனுக்கு எங்ஙனமோ அங்ஙனமே வட்டி தருபவனுக்கும், அனைவர்க்கும் தீர்ப்பு நடக்கும்.
பூமி அதனுடைய குடிமக்களால் தீட்டுப்பட்டு, அசுத்தத்தால் நாறுகிறது; ஏனெனில் அவர்கள் சட்டங்களை மீறினார்கள், கட்டளைகளுக்குக் கட்டுப்படவில்லை, முடிவில்லா உடன்படிக்கையை முறித்து விட்டார்கள்.
ஆதலால் உலகத்தைச் சாபனை விழுங்குகின்றது, அதன் குடிகள் தங்கள் குற்றத்துக்காகத் துன்புறுகிறார்கள். ஆதலால் தான் அதில் வாழ்வோர் வெப்பத்தால் தீய்கிறார்கள், அதிலிருந்து மிகச் சிலரே தப்புவார்கள்.
ஒலிவ மரத்தில் காய்களை அடிக்கும் போது இருப்பது போலும், திராட்சை அறுவடையில் பழம் பறிக்கும் போது இருப்பது போலும், பூமியில் மக்களினங்களின் நடுவிலும் இருக்கும்.
உலகத்தின் இறுதி எல்லைகளினின்று புகழ்ப்பாடல் எழுகின்றது, 'நீதியுள்ளவர்க்கு மகிமை' என்று கேட்கின்றது; அப்போது நான் சொன்னேன்: "ஐயோ ஐயோ, போதும் போதும், துரோகிகள் துரோகம் செய்தனர், துரோகிகள் கொடிய துரோகம் செய்தனர்."
குடியனைப் போல் உலகம் தள்ளாடும், வயல் வெளிக் குடிசை போல் அலைக்கழிக்கப்படும், அதன் அக்கிரமம் அதனை அழுத்தும், அது வீழ்ச்சியுறும்; அது இனி மேல் ஒருநாளும் எழும்பாது.
அப்போது நிலா வெட்கமுறும், கதிரவன் தலை நாணுவான்; ஏனெனில், சேனைகளின் ஆண்டவர் சீயோன் மலை மேலும் யெருசலேமிலும் அரசாளுவார்; அவருடைய மூப்பர்கள் முன்னிலையில் அவர் தமது மகிமையை வெளிப்படுத்துவார்.