எகிப்து நாட்டுக்கு எதிராகக் கூறப்பட்ட இறைவாக்கு: இதோ, விரைந்து செல்லும் கார்மேகத்தில் ஏறிக் கொண்டு, ஆண்டவர் எகிப்துக்கு வருகின்றார்; எகிப்து நாட்டின் சிலைகள் அவர் முன்னிலையில் அஞ்சி நடுங்கும், எகிப்தியரின் இதயம் உள்ளுக்குள் பாகாய் உருகும்.
எகிப்தியரின் ஆற்றல் அவர்களுக்குள்ளே வற்றிப் போகும், அவர்களுடைய திட்டங்களை நாம் குழப்பி விடுவோம்; சிலைகளையும் குறிசொல்பவர்களையும் ஆலோசனை கேட்பார்கள்; மை வித்தைக்காரரையும் மந்திரவாதிகளையும் வழி கேட்பார்கள்.
அதனுடைய கால்வாய்கள் நாற்றம் வீசும், எகிப்து நாட்டின் நைல் ஆற்றுக் கிளை நதிகள் நீர் குறைந்து மௌ;ள மௌ;ள வற்றிப் போகும், கோரைகளும் நாணல்களும் வதங்கிப் போகும்.
தானீஸ் பட்டணத்துத் தலைவர்கள் அறிவிலிகள், பார்வோனின் ஞானமிக்க மந்திரிகள் மடமையான ஆலோசனை கொடுத்தார்கள்; "நான் ஞானிகளின் புதல்வனல்லனோ? பழங்கால மன்னர்களின் மைந்தன் அல்லனோ?" என்று நீங்கள் பார்வோனிடம் எவ்வாறு சொல்லக்கூடும்?
தானீஸ் பட்டணத்துத் தலைவர்கள் அறிவிலிகள் ஆனார்கள், மெம்பீஸ் நகரத்துத் தலைவர்கள் ஏமாந்து போனார்கள்; எகிப்து மக்களுக்கு மூலைக்கல் போல் இருந்தவர்களே எகிப்தைத் தவறான நெறியில் நடத்தினார்கள்.
ஆண்டவர் அதன் நடுவில் மனக்குழப்பத்தை உண்டாக்கினார், போதை வெறி கொண்டவன் வாந்தியெடுத்துத் தள்ளாடுவது போல், எகிப்தை அதனுடைய செயல்களிலெல்லாம் தள்ளாடச் செய்தனர்.
யூதா நாடு எகிப்து நாட்டுக்கொரு திகிலாய் இருக்கும்; யூதா என்னும் பெயரைக் கேட்பவர் அனைவரும், சேனைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராகக் தீட்டியுள்ள திட்டத்தை முன்னிட்டு அஞ்சுவார்கள்.
அந்நாளில் கானான் நாட்டின் மொழியைப் பேசும் நகரங்கள் எகிப்து நாட்டில் ஐந்து இருக்கும்; அவை சேனைகளின் ஆண்டவர் பேரால் ஆணையிடும்; அவற்றுள் ஒன்று சூரியபட்டணம் எனச் சொல்லப்படும்.
அது எகிப்து நாட்டில் சேனைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சாட்சியாகவும் விளங்கும்; கொடியவர்கள் ஒடுக்கும் போது ஆண்டவரை நோக்கி அவர்கள் கூக்குரலிடுவார்கள்; அவரோ அவர்களுக்கு மீட்பர் ஒருவரை அனுப்பி, அவர்களை விடுவித்துக் காப்பாற்றுவார்.
அப்போது ஆண்டவர் தம்மை எகிப்தியருக்கு வெளிப்படுத்துவார்; எகிப்தியர் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வர்; பலிகளும் தகனப் பலிகளும் தந்து அவரை வழிபடுவார்கள்; ஆண்டவருக்கு நேர்ச்சிக் கடன் வைத்துக் கொண்டு, அவற்றை நிறைவேற்றுவார்கள்.
ஆண்டவர் எகிப்தியரைத் துன்பத்தால் வதைப்பார்; வதைத்தாலும் துன்பத்தை ஆற்றிடுவார்; அவர்களும் ஆண்டவரிடம் திரும்புவர்; அவர் அவர்களுடைய மன்றாட்டுகளைக் கேட்டு அவர்களை நலமாக்குவார்.
அந்நாளில் எகிப்துக்கும் அசீரியாவுக்கும் ஒரு நெடுஞ்சாலை அமைக்கப்படும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் தாராளமாய்ப் போய் வருவார்கள்; எகிப்தியரும் அசீரியரும் சேர்ந்து வழிபாடு செய்வார்கள்.
அதையே சேனைகளின் ஆண்டவர் ஆசீர்வதித்து, "நம் மக்களாகிய எகிப்தும், நமது கைவேலைப்பாடாகிய அசீரியாவும், நமது உரிமைச் சொத்தாகிய இஸ்ராயேலும் ஆசிர்வதிக்கப்படுவனவாக!" என்று சொல்லி யிருக்கிறார்.