கூட்டங் கூடுங்கள், ஆலோசனை செய்யுங்கள்; நண்பகலில் இரவு போல நிழல் உண்டாக்குங்கள், துரத்தப்பட்டவர்களுக்குப் புகலிடம் கொடுங்கள், தப்பியோடுகிறவர்களைக் காட்டிக் கொடுக்காதீர்கள்.
மோவாபிலிருந்து தப்பி வந்தவர்கள் உங்கள் நடுவில் தங்கியிருக்கட்டும்; அழிக்க வருபவனிடமிருந்து தப்புவதற்கு நீங்கள் அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்" என்கிறார்கள். ஒடுக்குபவன் ஒழிந்த பிறகு, அழிவு முடிவெய்திய பின்பு காலால் மிதித்துக் கொடுமை செய்பவன் நாட்டினின்று ஒழிந்து போன பின்னர்,
நிலையான அன்பினால் ஓர் அரியணை அமைக்கப்படும்; அதன் மேல் தாவீது மன்னனின் கூடாரத்தில் உண்மையுள்ள ஒருவர் அமர்வார்; அவர் தீர்ப்புக் கூறுவார், நீதியை நாடுவார், நியாயம் வழங்குவதில் காலந்தாழ்த்த மாட்டார்.
மோவாபின் செருக்கு எவ்வளவெனக் கேள்வியுற்றோம், பெரிதே அதன் இறுமாப்பு! அதன் இறுமாப்பும் செருக்கும் திமிரும் பற்றிக் கேள்விப் பட்டோம், அதனுடைய தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்.
எசேபோனின் வயல்கள் வாடுகின்றன, சபாமா திராட்சைக் கொடிகள் உலருகின்றன; அவற்றின் திராட்சைக் குலைகள் பல நாட்டு மன்னர்களைப் போதையால் கீழே விழத்தாட்டின; அந்தத் திராட்சைக் கொடிகள் ஒரு பக்கத்தில் யாசேர் வரையிலும் மறுபக்கத்தில் பாலை நிலம் வரையிலும் எட்டின; அவற்றின் தளிர்கள் கடலுக்கப்பாலும் படர்ந்து சென்றன.
ஆதலால் யாசேரைப் போலவே நானும் சபாமா திராட்சைக் கொடிக்காகப் புலம்பியழுவேன்; எசேபோனே, ஏலயாலே, உங்களை என் கண்ணீரால் நனைத்திடுவேன்; ஏனெனில் உன் கனிகள் மேலும், அறுவடை மேலும் போர்க்களத்தின் ஆரவாரம் கேட்டதே.
ஆனால் இப்பொழுது ஆண்டவர் கூறுகிறார்: "கூலியாள் கணக்கின்படி, இன்னும் மூன்று ஆண்டுகளில் மோவாபின் மகிமை நாசமாகும்; திரளான மக்கட் கூட்டம் இருந்தும் அதைக் காக்க முடியாது; அவர்களுள் எஞ்சியிருப்போர் மிகச் சிலரே ஆவர்; அவர்களும் வலுவிழந்திருப்பர்.