எக்காளத்தை எடுத்து உன் வாயிலே வை! ஆண்டவருடைய வீட்டின் மேல் கழுகுவட்டமிடுகிறது, ஏனெனில் நம் உடன்படிக்கையை அவர்கள் மீறினார்கள், நம் திருச்சட்டத்தை மீறி நடந்தார்கள்.
அவர்களே தங்களுக்கு அரசர்களை ஏற்படுத்திக் கொண்டனர், ஆனால், அதுபற்றி அவர்கள் நம் ஆலோசனை கேட்கவில்லை. அவர்களே தலைவர்களை வைத்துக் கொண்டார்கள், நாமோ அதைப் பற்றி ஒன்றுமறியோம்; தங்களது வெள்ளி, பொன் கொண்டு சிலை செய்து கொண்டார்கள், தாங்கள் அழிந்து போகவே அவற்றைச் செய்து கொண்டார்கள்.
புறவினத்தார் நடுவில் துணைவர்களைக் கைக்கூலி கொடுத்து அமர்த்தினாலும், விரைவில் அவர்களைச் சிதறடிப்போம்; அரசனையும் தலைவர்களையும் அபிஷுகம் செய்யாமல் கொஞ்ச காலத்திற்கு ஓய்ந்திருப்பார்கள்.
அவர்கள் பலியை விரும்புகிறார்கள், பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்; ஆயினும் ஆண்டவர் அவற்றில் விருப்பம் கொள்ளவில்லை; அதற்கு மாறாக அவர்களுடைய அக்கிரமத்தை நினைவில் கொண்டு, அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை தருவார்; அவர்களோ எகிப்து நாட்டுக்குத் திரும்புவார்கள்.
தன்னைப் படைத்தவரை இஸ்ராயேல் மறந்துவிட்டு அரண்மனைகளைக் கட்டினான்; யூதாவோ அரண் சூழ் பட்டணங்கள் பலவற்றை எழுப்பினான், நாமோ அவன் பட்டணங்கள்மேல் தீயனுப்புவோம், அவன் அரண்களை அது பொசுக்கி விடும்.