விசுவாசத்தைத் தொடங்கி வைத்தவரும், அதை நிறைவுபெறச் செய்பவருமான இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைப்போம். அவர் தம் முன்னே வைத்திருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, நிந்தையைப் பொருட்படுத்தாமல், சிலுவையைத் தாங்கினார். இப்பொழுது கடவுளது அரியணையின் வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார்.
தம் பிள்ளைகளிடம் பேசுவது போல் இறைவன் உங்களுக்குத் தந்த அறிவுரையை நீங்கள் மறந்து விட்டீர்களோ? "என் மகனே, ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்தும் போது, அதைப் பொருட்படுத்தாமலிராதே. அவர் தண்டிக்கும் போது, தளர்ந்து போகாதே.
தகப்பன் கண்டித்துத் திருத்தாத மகன் உண்டோ? இறைவன் தம் பிள்ளைகள் எல்லாரையும் கண்டித்துத் திருத்தி வந்திருக்கிறார். நீங்கள் அவ்வாறு திருத்தப்படாவிடின், உண்மையான பிள்ளைகளல்ல, வேசிப் பிள்ளைகளே.
உடலை நமக்களித்த தந்தையர் நம்மைக் கண்டித்துத் திருத்தினார்கள். அவர்களை நாம் மதித்து வந்தோம். அப்படியானால் ஆவியை நமக்களித்த தந்தைக்கு நாம் எவ்வளவோ பணிந்து நடக்கவேண்டும் அன்றோ? அப்பொழுது தான் வாழ்வு பெறுவோம்.
மேலும் அவர்கள் தங்கள் விருப்பம்போல் கண்டித்துத் திருத்தினார்கள்; அது சொற்பக் காலத்துக்கே பயன்பட்டது. இறைவனோ நம்மைத் தம் பரிசுத்தத்தில் பங்கு பெறும்படி, நம் நன்மைக்காகவே, கண்டித்துத் திருத்துகிறார்.
கண்டித்துத் திருத்தம் பெறுவது இப்பொழுது இன்பமாயிராமல் துன்பமாகத் தான் தோன்றும். ஆனால், அவ்வாறு பயிற்றப் பட்டவர்கள் பின்னர் அமைதியையும் நீதி வாழ்வையும் பயனாகப் பெறுவர்.
உங்களுள் யாரும் கடவுளின் அருளை இழந்து போகாமலும், கசப்பான நச்சு வேர் எதுவும் உங்களுக்குள் முளைத்துக் கேடு விளைவிக்காதபடியும், அதனால் பலர் கெட்டுப் போகாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுள் யாரும் காமுகராகவோ, ஏசாவைப் போல் உலகப் பற்றுள்ளவராகவோ இராதபடி கவனமாயிருங்கள். இந்த ஏசாவு ஒரு வேளை உணவுக்கு ஈடாகத் தன் தலைப்பேற்றுரிமையை விற்றுப்போட்டான்.
பின்னர் அவன் தனக்குரிய ஆசியைப் பெற்றுக் கொள்ள விரும்பியும் தள்ளி விடப்பட்டான். கண்ணீர் சிந்தி அதைக் கேட்டும், தந்தையின் மனத்தை மாற்றுவதற்கு வழியில்லாமல் போயிற்று. இது உங்களுக்குத் தெரியுமன்றோ?
அங்கே எரிகின்ற நெருப்பும், இருண்ட மேகமும் காரிருளும் சூழ்ந்திருந்தன; சுழல் காற்று வீசியது; எக்காளம் முழங்கியது; பேசும் குரலொன்று ஒலித்தது; அதைக் கேட்டு நின்றவர்கள், அக்குரல் அதற்கு மேல் பேச வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார்கள்.
வானகத்தில் பெயர் எழுதியுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை அங்கே விழாக் கூட்டமெனக் கூடியுள்ளது. நிறைவுபெற்ற நீதிமான்களின் ஆவிகளோடு சேர்ந்து அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும்,
புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளரான இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள்; ஆபேலின் இரத்தத்தை விட மேலான முறையில் கூக்குரலிடும் இரத்தத் தெளிப்பின் பயனைப் பெற வந்திருக்கிறீர்கள்.
எனவே, இறைவனின் குரலொலியைச் செவிமடுக்க மறுத்துவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வுலகில் தேவ வார்த்தையைப் பேசியவருக்குச் செவிசாய்க்க மறுத்த அவர்கள் தப்பிக்க முடியவில்லையென்றால், விண்ணிலிருந்து பேசுபவரைப் புறக்கணித்தால் நாம் எப்படித்தான் தப்பமுடியும்?
யார் தம்முடைய குரலால் அன்று வையகத்தை அசைந்தாடச் செய்தாரோ, அவர் இன்று "இன்னுமொரு முறை வையகத்தை நடுக்கமுறச் செய்வேன். வையகத்தை மட்டுமன்று, வானகத்தையும் நடுக்கமுறச் செய்வேன்" என உறுதி கூறுகிறார்.
ஆதலால் அசையாத அரசைப் பெற்றுக் கொண்ட நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோமாக. இந்நன்றியுணர்ச்சியில் பயபக்தியோடும், அச்சத்தோடும் கடவுளுக்கு ஏற்ற முறையில் வழிபாடு செய்வோமாக.