நான் சாமக் காவலனாய் நிற்பேன், காவற் கோட்டை மேல் இருந்து காவல் புரிவேன்; எனக்கு அவர் என்ன சொல்லப் போகிறார் என்றும், என் முறையீட்டுக்கு என்ன விடை தருவார் என்றும் பார்ப்பதற்காகக் காத்திருப்பேன்.
இன்னும் குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி காத்திருக்கிறது, ஆயினும் முடிவை நோக்கி விரைந்து போகிறது, பொய்யாகாது; காலந்தாழ்த்துவதாகத் தெரிந்தால், எதிர்பார்த்திரு; அது நிறைவேறியே தீரும், தவணை மீறாது.
செல்வம் நம்ப முடியாதது, இறுமாப்புக் கொண்டவன் நிலைத்திருக்கமாட்டான்; அவனது பேராசை பாதாளத்தைப்போலப் பரந்து விரிந்தது, சாவைப்போல் அவனும் போதுமென்று அமைவதில்லை. எல்லா நாட்டினரையும் தன் பக்கம் சேர்த்துக் கொள்ளுகிறான், மக்களினங்களையெல்லாம் தன்னிடம் கூட்டிக் கொள்ளுகிறான்.
இவர்கள் அனைவரும் அவன் மேல் வசைப்பாடல்களும், வஞ்சப் புகழ்ச்சியாய் ஏளன மொழிகளும் புனைவார்களன்றோ? அவர்கள் இவ்வாறு சொல்வார்கள்: தன்னுடையன அல்லாதவற்றைத் தனக்கெனக் குவித்து அடைமானங்களைத் தன் மேல் சுமத்திக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ கேடு! இன்னும் எத்துணைக் காலத்திற்குச் செய்வான்?
நீ பலநாட்டு மக்களைச் சூறையாடினபடியால், மக்களினங்களுள் எஞ்சினோர் யாவரும் உன்னைச் சூறையாடுவர்; ஏனெனில் நீ மனித இரத்தத்தைச் சிந்தி, நாட்டுக்கும் நகரத்திற்கும், அதில் வாழ்வோர் அனைவருக்கும் கொடுமைகள் செய்தாய்.
மகிமையால் நிரப்பப்படாமல் நீ நிந்தையால் தான் நிரப்பப்படுவாய். நீயும் குடி, குடி வெறியில் தள்ளாடு; ஆண்டவரின் வலக்கையிலுள்ள கிண்ணம் உன்னிடம் வரும், அப்போது மானக்கேடு உன் மகிமையை மூடி மறைக்கும்.
நீ லீபானுக்குச் செய்த கொடுமை உன்னையே தாக்கும்; திகிலுற்ற மிருகங்களை நீ செய்த படுகொலையும் அவ்வாறே செய்யும்; ஏனெனில் நீ மனித இரத்தத்தைச் சிந்தி, நாட்டுக்கும் நகருக்கும், அதில் வாழ்வோர் அனைவருக்கும் கொடுமைகள் செய்தாய்.
சிற்பி செதுக்கிய சிலையாலும், வார்ப்படத்தில் வடித்தெடுத்த பொய்ப் படிமத்தாலும் பயனென்ன? ஆயினும் தான் செய்த ஊமைச் சிலைகளாகிய கைவேலைகளிலே சிற்பி நம்பிக்கை வைக்கிறான்.
படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; 'அந்நாளில் செயல்தியேலின் மகனும் என் ஊழியனுமான செருபாபேலே! உன்னைத் தேர்ந்தெடுப்பேன்,' என்கிறார் ஆண்டவர். 'உன்னை என் அரச இலச்சினையாய் அணிந்துகொள்வேன். ஏனெனில் உன்னையே நான் தெரிந்து கொண்டேன்,' என்கிறார் படைகளின் ஆண்டவர்."