English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Genesis Chapters

Genesis 50 Verses

1 இதைக் கண்டு சூசை, தந்தையின் முகத்தின் மேல் விழுந்து அழுது, அவனை முத்தமிட்டுக் கொண்டிருந்தார்.
2 பின், தந்தையின் சடலத்தில் வாசனைப் பொருட்களைப் பூசும்படி தமக்குச் சேவை செய்து வந்த மருத்துவர்களுக்குக் கட்டளையிட்டார்.
3 அவர்கள் அதன்படி செய்து முடிக்க நாற்பது நாட்கள் சென்றன. உண்மையிலேயே, சவங்களுக்குப் பரிமளமிட்டுப் பாடம் பண்ண அத்தனை நாட்கள் செல்லும். எகிப்தியர் அவனுக்காக எழுபது நாள் துக்கம் கொண்டாடினார்கள்.
4 துக்க காலம் முடிந்த பின், சூசை பாரவோனின் குடும்பத்தாரை நோக்கி: உங்கள் முன்னிலையில் எனக்குத் தயவு கிடைத்தால், நீங்கள் பாரவோன் காது கேட்கச் சொல்ல வேண்டியதாவது:
5 என் தந்தை எனக்கு ஆணையிட்டு: இதோ, நான் சாகப் போகிறேன் கானான் நாட்டில் நான் எனக்காக வெட்டி தயார் செய்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம் செய்வாய் என்று சொன்னார் ஆகையால், நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவர விழைகிறேன் என்றார்.
6 அதற்குப் பாரவோன்: உம் தந்தை உம்மிடம் ஆணையிட்டுக் கேட்டபடியே நீர் போய் அவரை அடக்கம் செய்து விட்டு வாரும் என்றான்.
7 அவர் அப்படியே புறப்பட்டுப் போகையில், பாரவோனின் மேலாளர்கள் அனைவரும் எகிப்து நாட்டிலிருந்த எல்லாப் பெரியோர்களும் அவரோடு போனார்கள்.
8 மேலும், சூசை வீட்டார் யாவரும் அவர் சகோதரர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஆனால், அவர்கள் தங்கள் குழந்தைகளையும் ஆடு மாடு முதலிய மந்தைகளையும் யேசேன் நாட்டிலே விட்டுவிட்டுப் போனார்கள்.
9 அன்றியும், தேர்களும் குதிரை வீரர்களும் பலரும் அவரோடு போயினமையால், பரிவாரக் கூட்டம் பெரிதாய் இருந்தது.
10 அவர்கள் யோர்தானுக்கு அக்கரையில் இருக்கும் அத்தாத் என்னும் களத்தை அடைந்து அங்கே ஏழு நாட்களாகப் புலம்பி அழுது இழவு கொண்டாடினார்கள்.
11 கானான் நாட்டுக் குடிகள் அதைக் கண்டு: இது எகிப்தியர்களுக்குப் பெரிய துக்கமே என்றார்கள். அதனால் அவ்விடத்திற்கு எகிப்தியர் அழுகை என்ற பெயர் உண்டாயிற்று.
12 பின் யாக்கோபின் புதல்வர் தந்தையின் கட்டளைப்படியே,
13 அவனைக் கானான் நாட்டிற்குக் கொண்டு போய், மம்பிறேய்க்கு எதிரே இருக்கும் நிலத்தில் தனக்குச் சொந்தக் கல்லறை நிலமாக ஏத்தையனான எபிரோனிடமிருந்து ஆபிரகாம் வாங்கியிருந்த இரட்டைக் குகையிலே அடக்கம் செய்தனர்.
14 சூசை தந்தையை அடக்கம் செய்த பின், அவனும் அவன் சகோதரர்களும் அவனோடு போன யாவரும் எகிப்துக்குத் திரும்பிச் சென்றனர்.
15 யாக்கோபின் மரணத்திற்குப் பின் சூசையின் சகோதரர்கள் தமக்குள்: நாம் அவனுக்குச் செய்த அநியாயத்தை அவன் ஒருவேளை நினைத்தாலும் நினைக்கலாம். அப்போது அவனுக்கு நாம் செய்த எல்லாத் தீங்குகளுக்கும் அவன் பழிக்குப் பழி வாங்கினாலும் வாங்கலாம் என்று அச்சமுற்று, அவனிடம் ஆளனுப்பி:
16 உம் தந்தையார் இறக்குமுன் எங்களுக்குக் கட்டளையிட்டு, உம்மிடம் சொல்லச் சொன்னதாவது:
17 உன் சகோதரர்கள் செய்த துரோகத்தையும் தீங்கையும் அவர்கள் உன் மேல் பகை வைத்துச் செய்த அக்கிரமத்தையும் நீ தயவு செய்து மறந்து விடு என்று சொல்லச் சொன்னார்கள். அதன்படியே உம் தந்தையின் கடவுளுக்கு ஊழியர்களாகிய நாங்களும் அவ்வக் கிரமத்தை மன்னிக்கும்படி உம்மை மன்றாடுகிறோம் என்று சொல்லச் சொன்னார்கள் என்பதாம். இந்த வார்த்தைகளைக் கேட்டு சூசை அழுதார்.
18 மேலும் அவர் சகோதரர்கள் அவரிடம் போய்க் குப்புற விழுந்து வணங்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றனர்.
19 அவர் அவர்களை நோக்கி: அஞ்சாதீர்கள். கடவுளின் திருவுளத்தைத் தடுப்பது நம்மால் ஆகுமோ?
20 நீங்கள் என்னைக் கெடுக்கச் சதியாலோசனை செய்தீர்களே; ஆனால், கடவுள் தீமையை நன்மையாக மாற்றி, பல இனத்தாரைக் காப்பாற்றத் தக்கதாக, நீங்கள் இந்நேரம் தெளிவாய்க் கண்டறிந்தபடி என்னை உயர்த்தினார்.
21 அஞ்சாதீர்கள். நானே உங்களையும் உங்கள் சிறுவர்களையும் காப்பாற்றி வருவேன் என்றார். பின் அவர்களக்கு ஆறுதல் சொல்லி, அன்போடும் இனிமையாகவும் அவர்களுடன் உரையாடி வந்தார்.
22 சூசையும் அவர் தந்தையின் குடும்பத்தார் அனைவரும் எகிப்திலே குடியிருந்தனர். அவர் நூற்றுப் பத்தாண்டுகள் உயிர் வாழ்ந்து, எபிராயிமின் புதல்வர்களை மூன்றாம் தலைமுறை வரை கண்டார்.
23 மனாசேயின் மகனாகிய மக்கீருடைய புதல்வர்களும் சூசையின் மடியில் வளர்க்கப்பட்டனர்.
24 இதன்பின் ஒரு நாள் சூசை தம் சகோதரர்களை நோக்கி: நான் மரணமடைந்த பின் கடவுள் உங்களைச் சந்தித்து, உங்களை இந்நாட்டிலிருந்து தாம் ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு ஆகியோர்க்கு வாக்களித்திருக்கும் நாட்டிற்குப் போகச் செய்வார் என்றார்.
25 மேலும்: கடவுள் உங்களைச் சந்திப்பார். நீங்கள் இவ்விடத்திலிருந்து புறப்படும் போது என் எலும்புகளைக் கொண்டு போகக் கடவீர்கள் என்று ஆணையிட்டுச் சொன்னார்.
26 தமது நூற்றுப்பத்தாம் வயதில் (சூசை) உயிர் துறந்தார். அவர் சடலத்தில் பரிமள வகைகளைப் பூசிப் பாடம் பண்ணி அதை ஒரு பெட்டியில் வைத்து எகிப்திலேயே அடக்கம் செய்தனர்.
×

Alert

×