ஆண்டவராகிய கடவுளால் படைக்கப்பட்ட எல்லாப் பிராணிகளிலும் பாம்பு அதிகத் தந்திரமுள்ளதாய் இருந்தது. அது பெண்ணை நோக்கி: இன்ப வனத்திலுள்ள எல்லா மரங்களின் கனிகளையும் உண்ண வேண்டாமென்று உங்களைக் கடவுள் ஏன் தடுத்தார் என்று கேட்டது.
ஆனால், இன்ப வனத்தின் நடுவிலிருக்கிற மரத்தின் கனியைத் தின்ன வேண்டாம் தொடவும் வேண்டாம் என்று கடவுள் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்; தின்றால் சாவோம் என்றாள்.
நீங்கள் எப்போது அக்கனியைத் தின்பீர்களோ அந்நேரமே உங்கள் கண்கள் திறக்கப்படும். அதனால் நீங்கள் தெய்வங்கள் போல் ஆகி நன்மையும் தீமையும் அறிவீர்கள்; இது கடவுளுக்குத் தெரியும் என்று சொல்லிற்று.
அப்பொழுது பெண் அந்த மரத்தின் கனி தின்பதற்கு நல்லது, பார்வைக்கு இனியது, அறிவைப் பெறுவதற்கு விரும்பத் தக்கது எனக் கண்டு, அதைப் பறித்துத் தானும் உண்டாள்; தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் அதைத் தின்றான்.
மேலும், மாலையில் தென்றல் வீசும் வேளையிலே இன்ப வனத்தில் உலாவிக் கொண்டிருந்த ஆண்டவராகிய கடவுளின் குரலொலியைக் கேட்டார்கள். கேட்டதும், ஆதாமும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் முன்னிலையில் நில்லாதவாறு இன்ப வனத்து மரங்களிடையே ஒளிந்து கொண்டார்கள்.
அப்போது ஆண்டவராகிய கடவுள் பெண்ணை நோக்கி: நீ ஏன் அவ்வாறு செய்தாய்? என்று கேட்டார். அவள்: பாம்பு என்னை வஞ்சித்ததால் தின்று விட்டேன் என்று பதில் சொன்னாள்.
அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் பாம்பைப் பார்த்து: நீ அவ்வாறு செய்ததால் பூமியிலுள்ள எல்லாப் பிராணிகளிலும் சபிக்கப்பட்டதாய், உன் வயிற்றினால் ஊர்ந்து, உயிரோடிருக்கும் வரை மண்ணைத் தின்பாய்;
உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்.
அவர் பெண்ணை நோக்கி: துன்பங்களையும் கருப்ப வேதனைகளையும் உனக்கு அதிகப்படுத்துவோம்; வேதனையோடு நீ பிள்ளைகளைப் பெறுவாய்; கணவனின் அதிகாரத்துக்கு நீ அடங்கி இருப்பாய்; அவன் உன்னை ஆண்டு கொள்வான் என்றார்.
பின் கடவுள் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் சொல்லுக்குச் செவிசாய்த்து, உண்ண வேண்டாமென்று நாம் விலக்கியிருந்த மரத்தின் கனியைத் தின்றதினாலே உன் பொருட்டு பூமி சபிக்கப்பட்டிருக்கும்; நீ உழைத்துத் தான் உன் வாழ்நாளெல்லாம் அதன் பலனை உண்பாய்.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உண்பாய். இறுதியில், நீ எந்தப் பூமியினின்று எடுக்கப் பட்டாயோ அந்தப் பூமிக்கே திரும்பிப் போவாய்; ஏனென்றால், நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய் என்றார்.நி98
பின்: இதோ ஆதாம் நன்மை தீமை அறிந்தவனாய் நம்மில் ஒருவரைப் போல் ஆகிவிட்டானே! இனி அவன் தன் கையை நீட்டி வாழ்வளிக்கும் மரத்தின் கனியைப் பறித்துத் தின்று, என்றென்றும் உயிர் வாழ்வானோ என்று சொல்லி,
அப்படி ஆதாமை வெளியே துரத்திவிட்ட பின் கடவுள் இன்ப வனத்தின் வாயிலில், சுடர் விட்டெரியும் வாளை ஏந்தி எப்பக்கமும் சுழற்றுகின்ற கெரூபிமை வைத்து, வாழ்வளிக்கும் மரத்திற்குப் போகும் வழியைக் காவல் செய்யச் சொன்னார்.