Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezra Chapters

Ezra 8 Verses

1 அரசன் அர்தக்சேர்செசின் ஆட்சியின் போது என்னோடு பபிலோனிலிருந்து வந்த குலத்தலைவர்களும் அவர்களது தலைமுறை அட்டவணையுமாவது:
2 பினேஸ் மக்களில் கெர்சோம்; ஈத்தமார் மக்களில் தானியேல்;
3 தாவீதின் மக்களில் ஆத்தூஸ்; பாரோசின் சந்ததியைச் சேர்ந்த செக்கெனியாசின் மகன் சக்காரியாசும், மற்றும் நூற்றைம்பது ஆடவரும்;
4 பாஹாத்மோவாப் மக்களில் ஜரெகேயின் மகன் ஏலியோனாயியும், அவரோடு இருநூறு ஆடவரும்;
5 செக்கெனியாசின் மக்களில் எசெக்சியேலின் மகனும், அவரோடு முந்நூறு ஆடவரும்;
6 ஆதான் மக்களில் யோனாத்தாசின் மகன் ஆபேத்தும், அவரோடு ஐம்பது ஆடவரும்;
7 அலாமின் மக்களில் அத்தாலியாசின் மகன் இசயாசும், அவரோடு எழுபது ஆடவரும்;
8 சபாத்தியாவின் மக்களில் மிக்காயேலின் மகன் ஜெபெதியாவும், மற்றும் எண்பது ஆடவரும்;
9 யோவாபின் மக்களில் யாகியேலின் மகன் ஒபெதியாவும், மற்றும் இருநூற்றுப் பதினெட்டு ஆடவரும்;
10 செலோமித்தின் மக்களில் யொஸ்பியாவின் மகனும், மற்றும் நூற்றறுபது ஆடவரும்;
11 பேபாயின் மக்களில் பேபாயின் மகன் சக்காரியாசும், மற்றும் இருபத்தெட்டு ஆடவரும்;
12 ஆஸ்காத்தின் மக்களில் எக்சேத்தானின் மகன் யோகனானும், அவரோடு நூற்றுப்பத்து ஆடவரும்;
13 அதோனிக்காமின் மக்களில் கடைசிப் புதல்வரான ஏலிபெலேத், யெகியேல், சமாயாஸ் என்பவர்களும், இவர்களோடு அறுபது ஆடவரும்;
14 பெகுயின் மக்களில் உத்தாயியும், ஜக்கூரும் மற்றும் எழுபது ஆடவருமே.
15 அஹாவா செல்லும் ஆற்றருகில் அவர்களை நான் ஒன்று சேர்த்தேன். அங்கே மூன்று நாள் நாங்கள் தங்கியிருந்தோம். அவர்களுள் குருக்கள், பொதுமக்களே அன்றி லேவியர் ஒருவரும் இல்லை.
16 ஆகையால் எலியெசார், ஆறியேல், செமேயியா, எல்நாத்தான், யாரீபு, வேறொரு எல்நாத்தான், நாத்தான், சக்காரியாஸ், மொசொல்லாம் ஆகிய மக்கள் தலைவர்களையும் ஞானிகளாகிய யொயியாரீபு, எல்நாத்தான் ஆகியோரையும் என்னிடம் அழைத்தேன்;
17 கஸ்பியா மாநிலத் தலைவன் எதோனிடம் அவர்களை அனுப்பி வைத்தேன். நம் கடவுளின் ஆலயத் திருப்பணிக்கென ஆட்களை அனுப்பி வைக்குமாறு, கஸ்பியாவில் வாழ்ந்து வந்த எதோனையும் அவன் சகோதரரான ஆலய ஊழியரையும் கேட்கும்படி அவர்கள் மூலம் செய்தி அனுப்பினேன்.
18 அவர்களும் சென்றனர். நம் கடவுளின் அருட்கரம் நம்மோடு இருந்ததால், இஸ்ராயேலுக்குப் பிறந்த லேவியின் மகன் மொகோலியின் மக்களிலே மிகவும் கற்றறிந்த ஒருவனையும் சராபியாவையும் அவனுடைய புதல்வரும் சகோதரருமான பதினெட்டுப் பேரையும்;
19 ஹசபியாவையும், அவனோடு மெராரி மகன் இசயாசையும், இவனுடைய சகோதரரும் மக்களுமான இருபது பேரையும்,
20 லேவியருக்கு உதவி செய்யும் பொருட்டுத் தாவீதும் அவர் அலுவலரும் நியமித்திருந்த ஆலய ஊழியர்களில் இரு நூற்றிருபது பேரையும் நம்மிடம் கூட்டிக் கொண்டு வந்தனர். இவர்கள் எல்லாரும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.
21 நான் அஹாவா ஆற்றருகே இருந்தபோது, நம் கடவுளான ஆண்டவர் திருமுன் எங்களையே தாழ்த்தி, நானும் நம் மக்களும் நம் உடைமைகளோடு நல்லமுறையிலே (யெருசலேம்) போய்ச் சேரும்படியாக ஆண்டவரை வேண்டிக் கொண்டதோடு, அனைவரும் நோன்பு காக்கக் கட்டளையிட்டேன்.
22 ஏனெனில், வழியில் எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்படி காலாட் படையினரையும் குதிரைப் படையினரையும் எங்களோடு அனுப்பி வைக்குமாறு அரசனிடம் கேட்க எனக்கு வெட்கமாய் இருந்தது. இதற்குக் காரணம்: நாங்கள் அரசரை நோக்கி, "எங்கள் கடவுளின் அருட்கரம் தம்மை நேர்மையுடன் தேடுகிற அனைவர் மீதும் இருக்கிறது என்றும், அவரைப் புறக்கணிப்பவர்கள் அவரது வலிமைக்கும் கோபத்துக்கும் ஆளாவார்கள்" என்றும் சொல்லியிருந்தோம்.
23 எனவே நாங்கள் நோன்பு காத்து, எங்கள் கடவுளிடம் வேண்டிக் கொண்டோம். அவரும் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளினார்.
24 பின்னர், தலைமைக் குருக்கள் பன்னிருவரையும் சறாபியா, ஹசபியா ஆகியோரோடு அவர்கள் சகோதரர்களில் பத்துப்பேரையும் தேர்ந்தெடுத்தோம்.
25 அரசரும் அவருடைய ஆலோசகரும் மக்கள் தலைவர்களும் அங்கு இருந்த இஸ்ராயேலர் அனைவரும் ஒப்புகொடுத்திருந்த வெள்ளியையும் பொன்னையும் எங்கள் கடவுளின் ஆலயத்திற்கென அர்ப்பணிக்கப் பட்டிருந்த பாத்திரங்களையும் அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தேன்.
26 நான் அவர்கள் கையில் நிறுத்துக் கொடுத்தது அறுநூற்றைம்பது தாலந்து நிறையுள்ள வெள்ளி, நூறு வெள்ளிப் பாத்திரங்கள், நூறு தாலந்து நிறையுள்ள பொன்,
27 ஆயிரம் பொற்கட்டி நிறையுள்ள இருபது பொற்கிண்ணங்கள், பொன் போன்ற இரண்டு நல்ல வெண்கலப் பாத்திரங்கள் ஆகிய இவையே.
28 பின் அவர்களைப் பார்த்து, "நீங்கள் ஆண்டவரின் பரிசுத்தர். இப்பாத்திரங்களும் இவ்வெள்ளியும் இப் பொன்னும் நம் முன்னோரின் கடவுளான ஆண்டவருக்கு விரும்பி ஒப்புக்கொடுக்கப்பட்டதாகையால், அவையும் பரிசுத்தமானவையே.
29 நீங்கள் குருக்கள், லேவியர்களின் தலைவர்கள் முன்பாகவும், இஸ்ராயேல் குலத்தலைவர்கள் முன்பாகவும், ஆண்டவரின் ஆலயக் கருவூலத்திற்கு இவற்றைக் கொடுக்கும் வரை, பத்திரமாய்ப் பாதுகாத்து வாருங்கள்" என்று சொன்னேன்.
30 ஆகையால், குருக்களும் லேவியர்களும் நிறுக்கப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் பாத்திரங்களையும் யெருசலேமிலுள்ள நம் கடவுளின் ஆலயத்திற்குக் கொண்டு போகும்படி பெற்றுக் கொண்டனர்.
31 பிறகு முதன் மாதம் பன்னிரண்டாம் நாள், அஹாவா ஆற்றை விட்டு யெருசலேமுக்குப் புறப்பட்டோம். போகும் வழியில் நம் கடவுளின் அருட்கரம் எங்களோடு இருந்ததால், நாங்கள் எங்கள் பகைவர் கையினின்றும் திருடர் கையினின்றும் பாதுகாக்கப்பட்டோம்.
32 நாங்கள் யெருசலேமை அடைந்து அங்கு மூன்று நாட்கள் தங்கினோம்.
33 நான்காம் நாள் நம் கடவுளின் ஆலயத்தில், குரு உறியாவின் மகன் மெறெமோத்துடைய கையால் வெள்ளியும் பொன்னும் பாத்திரங்களும் நிறுக்கப்பட்டன. பினேயெசின் மகன் எலியெசாரும், லேவியரான யோசுவாவின் மகன் யோசபாத்தும், பென்னோயின் மகன் நோவதியாவும் அங்கு இருந்தனர்.
34 அவை ஒவ்வொன்றையும் நிறுத்து அவற்றின் எண்ணிக்கையையும் எடையையும் அன்று அவர்கள் குறித்து வைத்துக் கொண்டனர்.
35 அப்பொழுது, அடிமைத்தனத்தினின்று திரும்பியிருந்தோர் இஸ்ராயேலின் கடவுளுக்குத் தகனப்பலிகளைச் செலுத்தினர். இஸ்ராயேலின் எல்லா மக்களுக்காகவும், பன்னிரு இளங்காளைகளையும் தொண்ணுற்றாறு செம்மறியாட்டுக் கடாக்களையும் எழுபத்தேழு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பாவத்திற்காகப் பன்னிரு வெள்ளாட்டுக் கடாக்களையும் ஆண்டவருக்குத் தகனப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
36 மேலும் அரசரின் ஆணையைச் சிற்றரசர்களுக்கும் நதிக்கு அக்கரையில் இருந்த ஆளுநர்களுக்கும் அறிவித்தனர். ஆணையைக் கேட்ட அவர்களோ கடவுளின் மக்களுக்கும் ஆலய வேலைக்கும் மிகவும் உறுதுணையாய் இருந்து வந்தனர்.
×

Alert

×