அஹாவா செல்லும் ஆற்றருகில் அவர்களை நான் ஒன்று சேர்த்தேன். அங்கே மூன்று நாள் நாங்கள் தங்கியிருந்தோம். அவர்களுள் குருக்கள், பொதுமக்களே அன்றி லேவியர் ஒருவரும் இல்லை.
ஆகையால் எலியெசார், ஆறியேல், செமேயியா, எல்நாத்தான், யாரீபு, வேறொரு எல்நாத்தான், நாத்தான், சக்காரியாஸ், மொசொல்லாம் ஆகிய மக்கள் தலைவர்களையும் ஞானிகளாகிய யொயியாரீபு, எல்நாத்தான் ஆகியோரையும் என்னிடம் அழைத்தேன்;
கஸ்பியா மாநிலத் தலைவன் எதோனிடம் அவர்களை அனுப்பி வைத்தேன். நம் கடவுளின் ஆலயத் திருப்பணிக்கென ஆட்களை அனுப்பி வைக்குமாறு, கஸ்பியாவில் வாழ்ந்து வந்த எதோனையும் அவன் சகோதரரான ஆலய ஊழியரையும் கேட்கும்படி அவர்கள் மூலம் செய்தி அனுப்பினேன்.
அவர்களும் சென்றனர். நம் கடவுளின் அருட்கரம் நம்மோடு இருந்ததால், இஸ்ராயேலுக்குப் பிறந்த லேவியின் மகன் மொகோலியின் மக்களிலே மிகவும் கற்றறிந்த ஒருவனையும் சராபியாவையும் அவனுடைய புதல்வரும் சகோதரருமான பதினெட்டுப் பேரையும்;
லேவியருக்கு உதவி செய்யும் பொருட்டுத் தாவீதும் அவர் அலுவலரும் நியமித்திருந்த ஆலய ஊழியர்களில் இரு நூற்றிருபது பேரையும் நம்மிடம் கூட்டிக் கொண்டு வந்தனர். இவர்கள் எல்லாரும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.
நான் அஹாவா ஆற்றருகே இருந்தபோது, நம் கடவுளான ஆண்டவர் திருமுன் எங்களையே தாழ்த்தி, நானும் நம் மக்களும் நம் உடைமைகளோடு நல்லமுறையிலே (யெருசலேம்) போய்ச் சேரும்படியாக ஆண்டவரை வேண்டிக் கொண்டதோடு, அனைவரும் நோன்பு காக்கக் கட்டளையிட்டேன்.
ஏனெனில், வழியில் எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்படி காலாட் படையினரையும் குதிரைப் படையினரையும் எங்களோடு அனுப்பி வைக்குமாறு அரசனிடம் கேட்க எனக்கு வெட்கமாய் இருந்தது. இதற்குக் காரணம்: நாங்கள் அரசரை நோக்கி, "எங்கள் கடவுளின் அருட்கரம் தம்மை நேர்மையுடன் தேடுகிற அனைவர் மீதும் இருக்கிறது என்றும், அவரைப் புறக்கணிப்பவர்கள் அவரது வலிமைக்கும் கோபத்துக்கும் ஆளாவார்கள்" என்றும் சொல்லியிருந்தோம்.
அரசரும் அவருடைய ஆலோசகரும் மக்கள் தலைவர்களும் அங்கு இருந்த இஸ்ராயேலர் அனைவரும் ஒப்புகொடுத்திருந்த வெள்ளியையும் பொன்னையும் எங்கள் கடவுளின் ஆலயத்திற்கென அர்ப்பணிக்கப் பட்டிருந்த பாத்திரங்களையும் அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தேன்.
பின் அவர்களைப் பார்த்து, "நீங்கள் ஆண்டவரின் பரிசுத்தர். இப்பாத்திரங்களும் இவ்வெள்ளியும் இப் பொன்னும் நம் முன்னோரின் கடவுளான ஆண்டவருக்கு விரும்பி ஒப்புக்கொடுக்கப்பட்டதாகையால், அவையும் பரிசுத்தமானவையே.
நீங்கள் குருக்கள், லேவியர்களின் தலைவர்கள் முன்பாகவும், இஸ்ராயேல் குலத்தலைவர்கள் முன்பாகவும், ஆண்டவரின் ஆலயக் கருவூலத்திற்கு இவற்றைக் கொடுக்கும் வரை, பத்திரமாய்ப் பாதுகாத்து வாருங்கள்" என்று சொன்னேன்.
ஆகையால், குருக்களும் லேவியர்களும் நிறுக்கப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் பாத்திரங்களையும் யெருசலேமிலுள்ள நம் கடவுளின் ஆலயத்திற்குக் கொண்டு போகும்படி பெற்றுக் கொண்டனர்.
பிறகு முதன் மாதம் பன்னிரண்டாம் நாள், அஹாவா ஆற்றை விட்டு யெருசலேமுக்குப் புறப்பட்டோம். போகும் வழியில் நம் கடவுளின் அருட்கரம் எங்களோடு இருந்ததால், நாங்கள் எங்கள் பகைவர் கையினின்றும் திருடர் கையினின்றும் பாதுகாக்கப்பட்டோம்.
நான்காம் நாள் நம் கடவுளின் ஆலயத்தில், குரு உறியாவின் மகன் மெறெமோத்துடைய கையால் வெள்ளியும் பொன்னும் பாத்திரங்களும் நிறுக்கப்பட்டன. பினேயெசின் மகன் எலியெசாரும், லேவியரான யோசுவாவின் மகன் யோசபாத்தும், பென்னோயின் மகன் நோவதியாவும் அங்கு இருந்தனர்.
மேலும் அரசரின் ஆணையைச் சிற்றரசர்களுக்கும் நதிக்கு அக்கரையில் இருந்த ஆளுநர்களுக்கும் அறிவித்தனர். ஆணையைக் கேட்ட அவர்களோ கடவுளின் மக்களுக்கும் ஆலய வேலைக்கும் மிகவும் உறுதுணையாய் இருந்து வந்தனர்.