English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Ezra Chapters

Ezra 7 Verses

1 பாரசீக அரசனான அர்தக்சேர்செசின் ஆட்சிக்காலத்தில், சாராயியாசின் மகன் எஸ்ரா யெருசலேமுக்கு வந்தார். சாராயியாஸ் அஜாரியாசின் மகன்; இவனோ ஹெல்கியாசின் மகன்;
2 இவன் செல்லுமின் மகன்; செல்லும் சாதோக்கின் மகன்; இவன் அக்கித்தோபின் மகன்;
3 இவன் அமாரியாசின் மகன்; அமாரியாஸ் அஜாரியாசின் மகன்; இவன் மரயோத்தின் மகன்;
4 மரயோத் ஜாராகியாசின் மகன்; ஜாராகியாஸ் ஓஜியின் மகன்;
5 இவன் பொக்சியின் மகன்; பொக்சியோ அபிசூயேயின் மகன்; இவன் பினேசின் மகன்; பினேஸ் எலியெசாரின் மகன்; இவன் தலைமைக் குருவான ஆரோனின் மகன்.
6 அந்த எஸ்ரா பபிலோனிலிருந்து திரும்பி வந்தவர்; இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் மோயீசன் மூலம் அருளியிருந்த திருச்சட்டநூலில் அவர் வல்லுநர். அவருடைய கடவுளான ஆண்டவரின் அருட்கரம் அவரோடு இருந்ததால், அவர் கேட்டதையெல்லாம் அரசன் அவருக்குக் கொடுத்து வந்தான்.
7 அவரோடு இஸ்ராயேல் மக்களான குருக்களிலும் லேவியர்களிலும் பாடகரிலும் வாயிற்காவலரிலும் ஆலய ஊழியரிலும் சிலர், அரசன் அர்தக்சேர்செசின் ஏழாம் ஆண்டில் யெருசலேமுக்குப் புறப்பட்டனர்.
8 அவர்கள் அவ்வாண்டு ஐந்தாம் மாதம் யெருசலேமை அடைந்தனர்.
9 அவ்வாண்டு முதன் மாதம் முதல் நாள் பபிலோனிலிருந்து புறப்பட்ட எஸ்ரா ஐந்தாம் மாதம் முதல் நாள் யெருசலேமுக்கு வந்து சேர்ந்தார். ஏனெனில், அவருடைய கடவுளின் அருட்கரம் அவரோடு இருந்தது.
10 அவரோ ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கற்றறிவதிலும் அதன்படி நடப்பதிலும், இஸ்ராயேலருக்கு அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்களையும் பழக்க வழக்கங்களையும் புகட்டுவதிலுமே ஆர்வம் கொண்டிருந்தார்.
11 இஸ்ராயேலருடைய கடவுளின் வாக்கியங்களிலும் கட்டளைகளிலும் வழிபாட்டு முறைகளிலும் வல்லுநரான குரு எஸ்ராவின் கையில் அரசன் அர்தக்சேர்செஸ் கொடுத்திருந்த கட்டளைக் கடிதம் வருமாறு:
12 அரசர்க்கு அரசரான அர்தக்சேர்செசான நாம் விண்ணகக் கடவுளின் திருச்சட்டநூலில் வல்லுநரான குரு எஸ்ராவுக்கு வாழ்த்துக் கூறி எழுதுவதாவது:
13 நமது ஆட்சிக்குட்பட்ட இஸ்ராயேல் மக்களிலும் குருக்களிலும் லேவியர்களிலும் யாருக்கு விருப்பமோ அவர்கள் உம்மோடு யெருசலேமுக்குப் போகலாம் என்று நாம் கட்டளையிடுகிறோம்.
14 ஏனெனில், உமது கையிலிருக்கிற உமது கடவுளின் திருச்சட்டத்தின்படி யூதேயாவையும் யெருசலேமையும் பார்வையிடவும்,
15 அரசரும் அவருடைய ஆலோசகரும் யெருசலேமில் வாழும் இஸ்ராயேலின் கடவுளுக்கு முழு மனத்தோடு ஒப்புக் கொடுத்த பொன்னையும் வெள்ளியையும்,
16 பபிலோன் நாடெங்கணுமிருந்து உமக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உம் மக்களும் குருக்களும் யெருசலேமிலுள்ள தங்கள் கடவுளின் ஆலயத்துக்கு ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகளையும் நீர் கொண்டு போகும்படியும், நம் ஏழு ஆலோசகர்களும் நாமும் உம்மை அனுப்பி வைக்கிறோம்.
17 இப்பணத்தைக் கொண்டு காளைகளையும் ஆட்டுக்கடாக்களையும் செம்மறி ஆட்டுக்குட்டிகளையும் பலிப் பொருட்களையும் இவற்றிற்குத் தேவையான பான உணவுப் பலிகளையும் கவனமாகவும் தாராளமாகவும் வாங்கி, யெருசலேமிலிருக்கிற உங்கள் கடவுளின் ஆலயத்துப் பீடத்தின் மேல் பலியிடும்.
18 மீதியான வெள்ளியையும் பொன்னையும் கொண்டு, உமக்கும் உம்முடைய சகோதரருக்கும் விருப்பமானதை உங்கள் கடவுளின் திருவுளப்படி செய்யும்.
19 உம் கடவுளின் ஆலய வழிபாட்டுக்காக உமக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை யெருசலேமில் உம் கடவுளின் திருமுன் வையும்.
20 மேலும், உம் கடவுளின் ஆலயத்திற்குத் தேவையான மற்ற யாவும், அவ்வப்பொழுது அரசனின் கருவூலத்தினின்று உமக்குக் கொடுக்கப்படும்.
21 நாமும் உமக்குக் கொடுப்போம். அர்தக்சேர்செஸ் அரசரான நாம் நதிக்கு அக்கரைப் பகுதியில் உள்ள பொருளாளர்களுக்கு ஆணையிடுவதாவது: விண்ணகக் கடவுளின் திருச்சட்டத்தில் வல்லுநரான குரு எஸ்ரா உங்களிடம் கேட்பதையெல்லாம் காலம் தாழ்த்தாது கொடுங்கள்.
22 அவருக்கு நூறு தாலந்து வெள்ளி, நூறு மரக்கால் கோதுமை, நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் எண்ணெய் வரை கொடுங்கள். உப்பு வேண்டிய மட்டும் கொடுங்கள்.
23 விண்ணகக் கடவுள் நாட்டை ஆளும் அரசரின்மேலும், அரச புதல்வரின் மேலும் கோபம் கொள்ளாதபடி, விண்ணகக் கடவுளின் ஆலய வழிபாட்டுக்குத் தேவையான எல்லாம் ஒழுங்காய்க் கொடுக்கப்பட வேண்டும்.
24 மேலும், குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காவலர், ஆலய ஊழியர் ஆகிய இக்கடவுளின் ஆலயத் திருப்பணியாளர் அனைவர் மீதும் நீங்கள் எவ்விதத் திறையாவது வரியாவது தீர்வையாவது சுமத்த உங்களுக்கு அதிகாரமில்லை என்றும் உங்களுக்கு அறிவிக்கிறோம்.
25 எஸ்ராவே, கடவுள் உமக்குக் கொடுத்துள்ள ஞானத்தின்படி, நதிக்கு அக்கரையில் வாழ்பவரும், உம் கடவுளின் திருச்சட்டத்தை அறிந்தவருமான மக்கள் அனைவருக்கும் நீதி வழங்க நீதிபதிகளையும் ஆளுநர்களையும் ஏற்படுத்தும். கல்லாதார்க்கும் அதைக் கற்றுக்கொடும்.
26 மேலும் உம் கடவுளின் திருச்சட்டத்தையோ அரச கட்டளைகளையோ கவனமாய்க் கடைப்பிடிக்காதவன் எவனும் மரண தண்டனைக்கு உள்ளாவான்; அல்லது நாடு கடத்தப்படுவான்; அல்லது அவனுடைய சொத்து பறிமுதல் செய்யப்படும்; இல்லை, அவன் சிறைத் தண்டனை பெறுவான்."
27 யெருசலேமிலுள்ள ஆண்டவரின் ஆலயத்தை மகிமைப் படுத்தும்படி அரசனைத் தூண்டிய நம் முன்னோரின் கடவுளான ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக!
28 அவரே அரசன் முன்னும் அவனுடைய ஆலோசகர் முன்னும் அரச அலுவலருள் ஆற்றல் படைத்தோர் முன்னும் எனக்கு இரக்கம் கிடைக்கச் செய்தார். என் கடவுளான ஆண்டவரின் அருட்கரம் என்னோடு இருந்ததால், நான் திடம் கொண்டு, இஸ்ராயேல் தலைவர்களை ஒன்று சேர்த்து, அவர்களை என்னோடு கூட்டி வந்தேன்.
×

Alert

×