"கோத்திரங்களின் பெயர்கள் இவையே: வடக்கு எல்லை துவக்கி ஆமாத்துக்குப் போகும் வழிப்போக்கில் எத்தாலோன் வழி ஓரத்துக்கும், ஏனால் எல்லையிலிருந்து ஏமாத்துக்குப் போகும் திசையில் வடக்கிலிருக்கும் தமஸ்குவின் எல்லைக்கும் இடைப்பட்ட நாடு, கீழ்த்திசை துவக்கி மேற்றிசை மட்டும் தாண் கோத்திரத்துக்குச் சொந்தம்; இது ஒரு பங்கு.
யூதாவின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கிக் கடலோரம் வரைக்கும் உள்ள நாடு நீங்கள் ஒதுக்கி வைக்க வேண்டிய பகுதி; அது மற்ற ஒவ்வொரு பங்கு போலக் கடலோரம் வரை நீளத்திலும் அகலத்திலும் இருபத்தையாயிரம் கோலாக இருக்கும்; பரிசுத்த இடம் அதன் நடுவில் இருக்கும்.
இந்தப் பரிசுத்த பங்கு- அதாவது வடக்கே இருபத்தையாயிரம் கோல் நீளம், மேற்கே பதினாயிரம் கோல் அகலம், கிழக்கே பதினாயிரம் கோல் அகலம், தெற்கே இருபத்தையாயிரம் கோல் நீளம் கொண்ட அந்த நிலம் பரிசுத்த இடத்தின் அர்ச்சகர்களுக்கு உரியது; ஆண்டவருடைய பரிசுத்த இடம் அதன் நடுவில் இருக்கும்.
இஸ்ராயேல் மக்கள் வழிதவறி நடந்தபோதும், லேவியர் கூட நெறி தவறி நடந்த போதும், வழி தவறாமல் நம்முடைய நீதி முறைமைகளைக் கடைப்பிடித்திருந்த அர்ச்சிக்கப்பட்ட குருக்களாகிய சாதோக்கின் மக்களுக்கு இந்தப் பகுதி உரியதாகும்,
அர்ச்சகர்களுடைய எல்லைக்கு அடுத்தாற்போல லேவியர்களுக்கு இருக்க வேண்டிய பங்கு இருபத்தையாயிரம் கோல் நீளமும், பதினாயிரங் கோல் அகலமும் இருக்கும்; முழு நீளம் இருபத்தையாயிரம் கோலும், முழு அகலம் பதினாயிரம் கோலும் இருக்க வேண்டும்.
அவர்கள் அந்நிலத்திலே ஒன்றையும் விற்கலாகாது; ஒன்றையும் மாற்றலாகாது; ஒன்றையும் மற்றவர்களுக்குக் கொடுக்கலாகாது; ஏனெனில் அவை அனைத்தும் ஆண்டவருக்குப் பரிசுத்தமானவை என அர்ப்பணிக்கப்பட்டவை.
இருபத்தையாயிரம் கோல் நீளமும், ஐயாயிரம் கோல் அகலமும் உள்ள மீதி இடம் பொதுவானது; நகரத்தின் குடியிருப்புக்கும், இதன் வெளி நிலம் தோட்டங்களுக்கும் விடப்படும்; நகரம் அதன் நடுவில் கட்டப்படும்.
அதன் அளவுகள்: வடக்கே நாலாயிரத்து ஐந்நூறு கோல், தெற்கே நாலாயிரத்து ஐந்நூறு கோல், கிழக்கே நாலாயிரத்து ஐந்நூறு கோல், மேற்கே நாலாயிரத்து ஐந்நூறு கோலாக இருக்கும்.
நகரத்தின் வெளி நிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாய் இருக்க வேண்டும்.
பரிசுத்த நிலத்துக்கு எதிரே மீதியாயிருக்கும் நீளத்தில் கிழக்கே பதினாயிரம் கோலும், மேற்கே பதினாயிரம் கோலுமான பகுதி பரிசுத்த நிலத்தோடு ஒட்டியிருக்கும்; அதன் வருமானம் நகரத்தில் ஊழியம் செய்வோரின் உணவுக்காகும்.
மானிய நிலமனைத்தும் இருபத்தையாயிரம் கோல் நீளமும் இருபத்தையாயிரம் கோல் அகலமுமாய் இருக்க வேண்டும்; அதிலே பரிசுத்த இடத்தின் பங்கும், நகரத்துக்குரிய பங்கும், இவ்விரு பங்குகளாகப் பிரிக்கப்படும்.
பரிசுத்த இடத்திற்கும் நகரத்துக்கும் ஒதுக்கப்பட்ட பங்கின் நான்கு புறத்திலும்- கீழ்த்திசை முனை வரையில் இருபத்தையாயிரம் கோலும், கடல் திசையில் கடல் முனை வரையில் உள்ள இருபத்தையாயிரம் கோலும் போக, மீதியான இடமெல்லாம் தலைவன் பங்காகும்; பரிசுத்த இடத்தின் பங்கும், கோயிலின் தூயகமும் அதன் நடுவிலிருக்கும்.
தலைவன் பங்கின் நடுவிலிருக்கும் லேவியர்களின் பகுதியும், நகரத்துக்குக் குறிக்கப்பட்ட பகுதியும் போக, யூதா, பென்யமீன் இவர்களுடைய எல்லைகளுக்குட்பட்ட நிலங்கள் தலைவனுக்குச் சேர வேண்டும்.