அதன் ஒரு பக்கத்தில் இருபது முழமுள்ள ஒரு அந்தரமான இடம் உட்பிராகாரத்திற்கும், மற்றொரு பக்கத்தில் கல்லால் செய்யப்பட்ட தளவரிசை வெளிப் பிராகாரத்திற்கும் இருந்தன; அங்கே மூன்று நடைப் பந்தல்களையுடைய தாழ்வாரம் ஒன்றிருந்தது.
அதன் அறைகளுள் மேல்மாடியிலுள்ளவை கீழ்மாடியிலுள்ளவற்றினும் குறைந்த அகலமுள்ளவை; ஏனெனில் மேல்அறைகளுக்கு முன் நடைப்பந்தல்கள் அதிக இடம் கொண்டன; கீழ் அறைகளுக்கும் நடு அறைகளுக்கும் முன் அவ்வளவு இடங்கொள்ளவில்லை.
தென்திசை அறைகளுக்கு வாயில் இருந்தது போலவே, இப்பக்கத்திலும் ஒருவாயில் இருந்தது; இது தனிப்பட்டதாய் இருந்த மண்டபத்துக்கு எதிரே இருந்தது; கீழ்த்திசையிலிருந்து வருபவர்களுக்கு இது உதவியாயிருந்தது.
அந்த மனிதர் என்னைப் பார்த்து: "தனியாய்ப் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் மாளிகைக்கு முன்னால் இருக்கும் வடபுற அறைகளும், தென்புற அறைகளும் பரிசுத்த அறைகள்; ஆண்டவருடைய திருத்தூயகத்துள் சென்று ஆண்டவர் திருமுன் பணிபுரியும் அர்ச்சகர்கள் பரிசுத்த காணிக்கைகளை உண்ணும் இடங்கள் அவை; அவர்கள் மிகவும் பரிசுத்தமானவற்றையும் பாவப்பரிகாரப் பலியையும், குற்றப் பரிகாரக் காணிக்கைகளையும் அங்கே வைக்கிறார்கள்; ஏனெனில் அந்த இடம் பரிசுத்தமான இடம்.
அர்ச்சகர்கள் இவ்வாறு நுழைந்த பின்னர் பரிசுத்த இடங்களிலிருந்து வெளிப் பிராகாரத்துக்கு வரக்கூடாது; பணிபுரியும் போது அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகள் பரிசுத்தமானவை; ஆகையால் அவற்றை அங்கேயே கழற்றி வைத்து விட்டு வேறு உடைகளை உடுத்திக் கொண்டு தான் பொது மக்களுக்குரிய இடத்திற்குப் போவார்கள்" என்று சொன்னார்.
உட்புறத்து மாளிகையை அளந்து முடித்தபின், அவர் என்னைக் கிழக்கு வழியை நோக்கும் வாயில் வழியாய் வெளியே அழைத்துக் கொண்டு போய், முற்றத்தை முழுதும் அளக்கத் தொடங்கினார்:
நாற்புறமும் சுற்றிச் சுற்றிப் போய்ச் சுவர்களை அளந்தார்; தூயகத்திற்கும் பொதுமக்கள் முற்றத்திற்கும் உள்ள அந்தச் சுவரின் நீளம் ஐந்நூறு முழம்; அகலம் ஐந்நூறு முழம்.