எங்கள் சிறை வாழ்வின் இருபத்தைந்தாம் ஆண்டின் தொடக்கத்தில், மாதத்தின் பத்தாம் நாளில், யெருசலேம் நகரம் பிடிபட்ட பதினான்காம் ஆண்டின் நிறைவு நாளாகிய அன்று ஆண்டவரின் கரம் என் மேல் இருந்தது.
கடவுள் தந்த காட்சிகளில், அவர் என்னை இஸ்ராயேல் நாட்டுக்குக் கொணர்ந்து, மிக உயரமான ஒரு மலை மேல் நிறுத்தினார்; ஆங்கே தென்முகமாய் நோக்கும் நகரம் போன்ற ஓர் அமைப்பு இருந்தது.
அவர் என்னை அதனுள் அழைத்துச் சென்றார்; இதோ, அங்கே ஓரு மனிதரைக் கண்டேன். அவருடைய தோற்றம் வெண்கல மயமாய் இருந்தது; தமது கையில் சணல் பட்டுக் கயிறும், ஓர் அளவு கோலும் வைத்துக் கொண்டு வாயிலில் நின்று கொண்டிருந்தார்.
அவர் என்னை நோக்கி, "மனிதா, கண்ணாரப் பார், காதாரக் கேள்; நான் உனக்குக் காட்டுவதையெல்லாம் உன் மனத்தில் பதியவை; அதைப் பார்க்கும்படியே நீ இங்குக் கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ராயேல் வீட்டார்க்குத் தெரிவிக்கவேண்டும்" என்றார்.
அப்போது இதோ, கோயிலுக்கு வெளியில் கோயிலைச் சுற்றி ஒரு மதிலிருக்கக் கண்டேன்; அந்த மனிதர் தாம் கையில் வைத்திருந்த ஆறு முழம் நான்கு விரற்கடை நீளமுள்ள கோலால் மதிலை அளந்தார்; அதன் அகலம் ஒரு கோல்; அதன் உயரம் ஒரு கோல்.
பிறகு அவர் கிழக்கு வாயிலுக்கு வந்து அதன் படிக்கட்டுகள் வழியாக ஏறி வாயிற்படியை அளந்தார்; அதன் அகலம் ஒரு கோல்; அதாவது வாயிற்படிக்கு இப்பக்கமும் அப்பக்கமும் ஒரு கோல் அளவு இருந்தது;
பின்பு அம்மனிதர் என்னை வெளிப் பிராகாரத்திற்குக் கூட்டிக்கொண்டு போனார்; அங்குக் கருவூல அறைகளைக் கண்டேன்; பிராகாரத்தைச் சுற்றிலும் தளவரிசை கல்லால் அமைக்கப்பட்டிருந்தது; பிராகாரத்தின் நான்கு பக்கங்களிலும் முப்பது கருவூல அறைகள் இருந்தன.
அதற்கு இருபக்கமும் மும்மூன்று அறைகள் இருந்தன; முதல் வாயிலின் அளவுக்கு இவ்வாயிலின் அளவு சரியாக இருந்தது. அதாவது: நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
அதன் பலகணிகளும், தாழ்வாரமும், சித்தரிக்கப்பட்ட சிற்ப வேலைகளும் கீழ்த் திசைக்கு எதிரான வாயிலின் இருந்தவற்றின் அளவுக்கு இணையாக இருந்தன; அதில் ஏறிப்போவதற்கு ஏழு படிகளிருந்தன; அதன் முன்புறத்தில் மண்டபமொன்று இருந்தது.
வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாயிலுக்கும் எதிராக உட்பிராகாரத்திலும் வாயில்கள் இருந்தன; அவர் ஒரு வாயில் துவக்கி மறுவாயில் வரைக்கும் அளந்தார்; நூறு முழம் இருந்தது.
பின்னும் அவர் என்னைத் தெற்கே கூட்டிச் சென்றார்; அங்கே தென்திசைக்கு நேர்முகமாய் இருந்த வாயிலொன்றைக் கண்டேன்; அவர் அதன் புடைநிலையையும் அதன் தாழ்வாரத்தையும் அளந்தார்; இவற்றின் அளவு முன்சொன்னவற்றின் அளவுக்குச் சரியாய் இருந்தது.
அதில் ஏறிப்போக ஏழு படிகள் இருந்தன; கதவுகளுக்கு முன்பாகத் தாழ்வாரங்கள் இருந்தன; வாயிலின் புடைநிலையில் இரு புறமும் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன.
அதன் பக்க அறைகளையும் புடைநிலைகளையும் மண்டபத்தையும் பலகணிகளையும், சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தையும் அளந்து பார்த்தார்; மேற்சொன்னவற்றின் அளவாகவே இருந்தது; அதாவது, நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
அதன் அறைகளையும் புடைநிலையையும் மண்டபத்தையும் பலகணிகளையும், சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தையும் அளந்தார். மேற்சொன்னவற்றின் அளவாகவே இருந்தது; அதாவது, நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
தாழ்வாரத்தின் வழியாய் வெளிப் பிராகாரத்திற்குப் போகலாம்; புடைநிலையில் பேரீச்ச மரங்கள் இருபுறமும் சித்திரிக்கப்பட்டிருந்தன; மேலேறிப் போக எட்டுப் படிகள் இருந்தன.
அதன் பக்க அறைகளையும் புடைநிலையையும் மண்டபத்தையும் பலகணிகளையும், சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தையும் அளந்தார்; மேற் சொன்னவற்றின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதாவது நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
வாயில் மண்டபத்தின் இரு புறமும் இரண்டிரண்டு பீடங்கள் உண்டு; அவற்றின் மேல் தகனப் பலிகளும், பாவப் பரிகாரப் பலிகளும், குற்றப் பரிகாரப் பலிகளும் செலுத்தப்படும்.
தகனப் பலிக்குரிய நான்கு பீடங்கள் சதுரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன; அவற்றின் அளவு: நீளம் ஒன்றரை முழம்; அகலம் ஒன்றரை முழம்; உயரம் ஒரு முழம்; அவற்றின் மேல் தகனப் பலிகளையும், சாதாரண பலிகளையும் இடுவதற்கான கருவிகள் வைக்கப்படும்.
வடக்கு நோக்கியிருக்கும் அறை பலி பலிபீடத்தைக் காவல்காக்கும் அர்ச்சகர்களின் அறை; லேவியின் வழிவந்த சதோக்கின் புதல்வர்களான இவர்கள் ஆண்டவருக்கு வழிபாடு செய்ய வருவார்கள்" என்றார்.
அப்பொழுது அவர் என்னைக் கோயில் மண்டபத்திற்கு அழைத்துக்கொண்டு போய் அம்மண்டபத்தின் புடைநிலைகளை அளந்தார்; அவற்றின் அளவு இருபக்கமும் அவ்வைந்து முழம் இருந்தது; வாயிலின் அகலம் மும்மூன்று முழம் இருந்தது.