ஆண்டவருடைய கரம் என் மேல் இருந்தது; ஆண்டவருடைய ஆவி என்னைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் விட்டது; அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன.
பின்னும், உங்கள் மேல் நரம்புகளை வைப்போம், உங்கள் மேல் சதை பிடிக்கச் செய்வோம்; உங்களைத் தோலால் மூடுவோம்; உங்களில் ஆவியை ஊட்டுவோம்; நீங்கள் உயிர் பெற்று வாழ்வீர்கள். அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்" என்று சொல் எனக் கூறினார்.
அவர் கட்டளையிட்டவாறே நான் இறைவாக்குச் சொன்னேன்; அவ்வாறு நான் இறைவாக்குரைக்கும் போது, ஓர் ஒலி கேட்டது; இதோ, அசைவும் உண்டாயிற்று; ஒவ்வொரு எலும்பும் மற்றொரு எலும்பை அணுகி ஒன்றோடொன்று சேர்ந்து கொண்டன.
நான் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, இதோ, அவற்றின் மேல் நரம்புகள் காணப்பட்டன; அவற்றில் சதை பிடித்திருந்தது; அவற்றைத் தோல் மூடியிருந்தது; ஆயினும் அவற்றில் உயிர் இல்லை.
அப்பொழுது அவர் என்னை நோக்கி, "ஆவிக்கு இறைவாக்குக் கூறு, மனிதா, இறைவாக்குச் சொல்; ஆவிக்கு நீ சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: ஆவியே, நாற்றிசையிலிருந்தும் வா; வந்து உயிரிழந்த இவர்கள் மீது ஊதி, இவர்கள் உய்யும்படி செய்" என்றார்.
அவர் எனக்குக் கட்டளையிட்டவாறே நான் இறைவாக்குரைத்தேன்; அவர்களுள் ஆவி புகுந்தது; அவர்கள் உயிர் பெற்றுத் தரையில் காலூன்றி நின்றனர்; அவர்கள் மாபெரும் சேனை போல் இருந்தனர்.
பின்னும் அவர் என்னிடம் சொன்னார்: "மனிதா, இந்த எலும்புகள் இஸ்ராயேல் வீட்டாரனைவரும். இதோ, அவர்கள், 'எங்கள் எலும்புகள் முற்றிலும் உலர்ந்து போயின; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் முற்றிலும் அறுபட்டோம்' என்கிறார்கள்.
ஆகையால் நீ அவர்களுக்கு இறைவாக்குக் கூறு: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: எம் மக்களே, இதோ நாம் உங்கள் கல்லறைகளைத் திறப்போம்; கல்லறைகளிலிருந்து உங்களை எழுப்புவோம்; இஸ்ராயேல் நாட்டுக்கு உங்களைத் திரும்பக் கூட்டிவருவோம்.
உங்களுக்குள் நம் ஆவியைப் புகுத்துவோம்; நீங்கள் உயிர் பெறுவீர்கள். உங்கள் சொந்த நாட்டில் உங்களை வாழ வைப்போம்; அப்போது, ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம், நாமே இதைச் செய்து முடித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள், என்கிறார் ஆண்டவர்."
மனிதா, நீ ஒரு கோலை எடுத்து அதில், 'யூதாவும், அவனோடு சேர்ந்திருக்கும் இஸ்ராயேல் மக்களும்' என்று எழுது; பிறகு வேறொரு கோலை எடுத்து, அதில், 'எப்பிராயீம் கோலாகிய யோசேப்பும், அவனோடு சேர்ந்திருக்கும் இஸ்ராயேல் வீட்டாரனைவரும்' என்று எழுது.
நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, எப்பிராயீமின் கையிலிருக்கும் யோசேப்பின் கோலையும், அவனோடு சேர்ந்துள்ள இஸ்ராயேல் கோத்திரங்களையும் எடுத்து, யூதாவின் கோலோடு ஒன்று சேர்த்து, அவற்றை ஒரே கோலாகச் செய்வோம்; அவை நம் கையில் ஒரே கோலாய் இருக்கும்.
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் இஸ்ராயேல் மக்களை அவர்கள் போயிருக்கும் புறவினத்தாரிடமிருந்து அழைத்து, எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்களைச் சேர்த்து, அவர்களுடைய சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவோம்;
இஸ்ராயேல் மலைகளின் மேல் அவர்களை அந்த நாட்டில் ஒரே இனத்தவராய் ஆக்குவோம்; அவர்கள் அனைவருக்கும் ஒரே அரசன்தான் இருப்பான்; இனி அவர்கள் இரண்டு இனத்தவராய் இருக்கமாட்டார்கள், இரண்டு அரசுகளாய்ப் பிரிந்திருக்கமாட்டார்கள்.
இனி மேல் அவர்கள் தங்கள் சிலைகளாலும், அருவருப்பான பொருட்களாலும், யாதொரு குற்றத்தாலும் தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளமாட்டார்கள்; ஆனால் அவர்கள் நடந்துவந்த பிரமாணிக்கமில்லாத நெறியிலிருந்து அவர்களை மீட்போம்; அவர்களைத் தூய்மைப்படுத்துவோம்; அப்போது அவர்கள் நம் மக்களாய் இருப்பார்கள்; நாம் அவர்கள் கடவுளாய் இருப்போம்.
நம் ஊழியனாகிய தாவீது அவர்களுக்கு அரசனாயிருப்பான்; அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பன் தான் இருப்பான்; அவர்கள் நம் நீதிமுறைகளைப் பின்பற்றுவார்கள்; நம் கற்பனைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருப்பார்கள்.
நம் ஊழியனாகிய யாக்கோபுக்கு நாம் தந்ததும், உங்கள் தந்தையர் வாழ்ந்ததுமான நாட்டில் அவர்கள் வாழ்வார்கள்; அவர்களும், அவர்கள் பிள்ளைகளும், அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் என்றென்றும் அங்கே வாழ்வார்கள்; நம் ஊழியனாகிய தாவீது என்றென்றும் அவர்களுக்குத் தலைவனாய் இருப்பான்.
நாம் அவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்வோம்; அது அவர்களோடு முடிவில்லா உடன்படிக்கையாய் இருக்கும்; அவர்களை நாம் ஆசீர்வதித்துப் பலுகச் செய்வோம்; அவர்கள் நடுவில் நமது பரிசுத்த இடத்தை என்றென்றும் நிலைக்கச் செய்வோம்.
நமது பரிசுத்த இடம் அவர்கள் நடுவில் என்றென்றும் நிலைக்கும் போது, ஆண்டவராகிய நாமே இஸ்ராயேலைப் பரிசுத்தப்படுத்துபவர் என்பதைப் புறவினத்தார் அறிந்துகொள்வர்."