ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்களைக் குறித்து உங்கள் பகைவர்கள், 'ஆகா, நன்று! பண்டைக்காலத்திய மலைகள் எங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கப்பட்டன' என்று சொன்னார்கள்.
ஆதலால் நீ இறைவாக்குக் கூறு: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் மலைகளே, நீங்கள் பாழாக்கப்பட்டு, நான்கு பக்கத்திலுமுள்ள அந்நியர்களால் மிதிக்கப்பட்டு, மற்றுமுள்ள மக்களால் கைப்பற்றப்பட்டு வேற்றினத்தாரின் அவதூறுக்கும், கேவலமான பேச்சுக்கும் உள்ளானீர்கள்;
ஆதலால் இஸ்ராயேல் மலைகளே, ஆண்டவராகிய இறைவன் வார்த்தையைக் கேளுங்கள்: மலைகள், குன்றுகள், அருவிகள், பள்ளத்தாக்குகள், பாலை நிலங்கள், சுற்றிலுமுள்ள மற்ற நாடுகளுக்கு இரையாகவும் பரிகாசமாகவும் ஆகிவிட்ட குடிகளில்லாப் பட்டணங்கள் ஆகியவற்றுக்கு ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்;
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாம் கோபத்தோடும் பொறாமையோடும் இதுமேயா முழுவதற்கும், மற்றெல்லா இனத்தார்க்கும் எதிராகப் பேசுகிறோம்: அவர்கள் நமது நாட்டைக் கைப்பற்றி உரிமையாக்கிக் கொள்ளவும், அதைக் கொள்ளையிடவும் எண்ணி நிறைந்த மகிழ்ச்சியோடு அதைத் தங்களுக்கு உரிமைச் சொத்தாகத் தாங்களே கொடுத்துக் கொண்டு நம்மை அலட்சியம் செய்தார்கள்.
ஆதலால் இஸ்ராயேல் நாட்டைக் குறித்து, மலைகள், குன்றுகள், அருவிகள், பள்ளத்தாக்குகள் ஆகியவற்றுக்கு இறைவாக்குரை: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீங்கள் புறவினத்தாரின் வசைமொழிக்கு இலக்கானதால் இதோ, நாம் ஆத்திரத்தோடு பேசுகிறோம்
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்களைச் சுற்றியுள்ள புறவினத்தார் தத்தம் அவமானத்தைத் தாங்களே சுமந்து கொள்ளும்படி, நாம் அவர்களுக்கு எதிராக நமது கையுயர்த்தி ஆணையிடுகிறோம்.
ஆனால் இஸ்ராயேல் மலைகளே, நீங்கள் இளங்கிளைகளைப் படரவிட்டு உங்கள் கனிகளை நம் மக்களாகிய இஸ்ராயேலுக்குக் கொடுப்பீர்கள்; ஏனெனில் அவர்கள் சீக்கிரம் தாய் நாட்டுக்குத் திரும்புவார்கள்.
உங்களில் வாழும் மனிதர்கள் பெருகிப் பலுகச் செய்வோம்; இஸ்ராயேல் வீட்டார் அனைவரையும் பலுகச் செய்வோம்; பட்டணங்கள் குடியிருக்கும் இடங்களாகும்; பாழடைந்த இடங்கள் புதிதாய்க் கட்டப்படும்,
உங்களில் மனிதர்களையும் மிருகங்களையும் அதிகமாக்குவோம்; அவர்களைப் பெருகிப் பலுகச் செய்வோம்; உங்களுடைய பண்டைய நிலைமையில் உங்களைத் திரும்பவும் நாம் நிலைநாட்டுவோம்; அதுமட்டுமன்று; முந்திய சிறப்பை விட மிகுந்த சிறப்பு உங்களுக்குக் கிடைக்கச் செய்வோம். அப்பொழுது, நாமே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
உங்களிடத்தில் நம் மக்களாகிய இஸ்ராயேலரைக் குடியேறச் செய்வோம்; அவர்கள் உங்களை உரிமையாக்கிக் கொள்வார்கள்; நீங்கள் அவர்களுடைய உரிமைச் சொத்தாய் இருப்பீர்கள்; இனி அவர்கள் உங்களை விட்டு அகலவேமாட்டார்கள்.
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: புறவினத்தார் உங்களைக் குறித்து, 'நீங்கள் மனிதர்களை விழுங்குகிறீர்கள், உங்கள் இனத்தாரின் பிள்ளைகளையே அழிக்கிறீர்கள்' என்று சொல்லுகிறார்கள்.
புறவினத்தாரின் பழிச் சொல்லை இனி நீங்கள் கேட்கும்படி விடமாட்டோம்; அவர்களுடைய ஏளனத்துக்கு நீங்கள் உள்ளாகாமல் பார்த்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் குடிகளை இனிமேல் இழக்கவே மாட்டீர்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
மனிதா, இஸ்ராயேல் வீட்டார் தங்கள் சொந்த நாட்டில் குடியிருந்த காலத்தில், அதைத் தங்கள் தீய நடத்தையாலும் தீய செயல்களாலும் தீட்டுப்படுத்தினார்கள்: அவர்களுடைய செயல்கள் விலக்கமான பெண்ணின் அசுத்தம் போல நம் கண்களுக்கு அசுத்தமாய் இருந்தன.
அவர்கள் புறவினத்தாரிடம் போன போது இந்தப் புறவினத்தார் அவர்களைக் குறித்து, 'இவர்கள் கடவுள் மக்களாம்; அப்படியிருந்தும் அவரது நாட்டிலிருந்து வெளியேற வேண்டி வந்ததாம்' என்று சொன்னார்கள்; அவ்வாறு அவர்கள் நமது திருப்பெயரின் பரிசுத்தம் கெடுவதற்குக் காரணமாய் இருந்தனர்;
ஆதலால் இஸ்ராயேல் வீட்டாரிடம் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாரே, உங்களை முன்னிட்டு நாம் செயலாற்ற முற்படவில்லை; ஆனால் புறவினத்தாரின் நடுவில் நீங்கள் பங்கப்படுத்திய நமது திருப்பெயரை முன்னிட்டே செயலாற்றப் போகிறோம்.
புறவினத்தாரின் நடுவில் நமது திருப்பெயரின் பரிசுத்தத்தை நீங்கள் பங்கப்படுத்தினீர்கள்; பங்கப்படுத்தப்பட்ட மகத்தான நமது திருப்பெயரை நாம் பரிசுத்தமாக்குவோம்; இவ்வாறு நாம் உங்கள் வழியாய் அவர்கள் கண் முன் நமது பரிசுத்தத்தை நிலைநாட்டும் போது, நாமே ஆண்டவர் என்பதைப் புறவினத்தார் அறிந்து கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்.
ஏனெனில் புறவினத்தாரிடமிருந்து நாம் உங்களை மீட்போம்; எல்லா நாடுகளிலிருந்தும் உங்களைக் கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பக் கொண்டு வருவோம்.
நாம் உங்கள்மேல் தூய நீரைத் தெளிப்போம்; உங்கள் அழுக்குகள் எல்லாம் போய்விட, நீங்கள் தூய்மையாய் இருப்பீர்கள்; சிலைவழிபாட்டுத் தீட்டுகளிலிருந்து உங்களைத் தூய்மையாக்குவோம்.
உங்களுக்குப் புதிய இதயத்தை அருளுவோம்; உங்கள் உள்ளத்தில் புதிய ஆவியை ஊட்டுவோம்; உங்கள் உடலிலிருந்து கல்லான இதயத்தை எடுத்துவிட்டு, உணர்ச்சியுள்ள இதயத்தை உங்களுக்குக் கொடுப்போம்.
உங்கள் எல்லா அசுத்தங்களிலிருந்தும் உங்களை நாம் தூய்மையாக்குவோம்; தானியம் முளைக்கச் செய்து மிகுதியாக விளையச் செய்து, உங்கள் மேல் பஞ்சம் வராதபடி பார்த்துக் கொள்வோம்.
அப்போது உங்கள் தவறான நெறிகளையும் தீயசெயல்களையும் நினைத்துப் பார்த்து உங்கள் அக்கிரமங்களுக்காகவும், அருவருப்பான செயல்களுக்காகவும் உங்களையே நீங்கள் வெறுப்பீர்கள்.
உங்களை முன்னிட்டு நாம் செயலாற்ற முற்படவில்லை, என்கிறார் ஆண்டவராகிய இறைவன். இது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும். இஸ்ராயேல் வீட்டாரே, உங்கள் தீய நெறிகளை எண்ணி வெட்கி நாணுங்கள்.
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உங்கள் எல்லா அக்கிரமங்களினின்றும் உங்களை நாம் தூய்மையாக்கும் நாளில், நகரங்களில் மனிதர் குடியேறச் செய்வோம்; பாழான இடங்கள் திரும்பக் கட்டப்படும்.
அப்பொழுது மக்கள், 'பாலையாய்க்கிடந்த இந்த நிலம் சிங்காரச் சோலையாகி விட்டதே; இடிந்து பாழாகிக் குடிகளற்றுப் போயிருந்த இந்நகரங்கள் இப்பொழுது மக்கள் குடியிருக்கும் நகரங்களாகவும், அரண் சூழ்ந்த பட்டணங்களாகவும் ஆகிவிட்டனவே' என்று வியப்பார்கள்.
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாருக்கு இன்னுமொரு நன்மையும் நாம் செய்வதை அவர்கள் காண்பார்கள்: அதாவது மந்தை போல் அவர்களைப் பெருகச் செய்வோம்.
அவர்கள் பலிகளுக்காக வரும் மந்தைகள் போல- குறிப்பிட்ட திருவிழாக்களில் யெருசலேமில் கூடி வரும் மந்தைகள் போல- மனிதர்கள் பலுகி, பாழான பட்டணங்களை நிரப்புவார்கள்."