நீடித்த பகைமையை நீ விரும்பினாய் அன்றோ? இஸ்ராயேல் மக்களை அவர்களுடைய துன்ப நாட்களில்- அவர்கள் கொடிய தண்டனை அடைந்த நாட்களில்- நீ வாளின் வலிமைக்குக் கையளித்தாய்;
ஆதலால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்; நம் உயிர்மேல் ஆணை! நாம் உன்னை இரத்தப்பழிக்கு உட்படுத்துவோம்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும்; நீ இரத்தம் சிந்திக் குற்றம் செய்ததால், இரத்தப்பழி உன்னைவிடாது தொடரும்.
ஆண்டவர் அங்கே குடியிருந்ததை அறிந்திருந்தும், நீ, 'இந்த இரண்டு இனத்தாரும், இரண்டு நாடுகளும் எனக்கு உரித்தாகும்; இவ்விரண்டையும் நானே உரிமையாக்கிக் கொள்வேன்' என்று சொல்லத் துணிந்தாய்;
ஆதலால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர் மேல் ஆணை! நீ அவர்களுக்கு எதிராக வர்மம் கொண்டு அவர்கள் மேல் கோபமும் பொறாமையும் காட்டி நடத்தியது போலவே நாமும் உன்னை நடத்துவோம்; உன் மீது தீர்ப்புச் செலுத்தும் போது நாம் யாரென்பதை உன் நடுவில் வெளிப்படுத்துவோம்.
இஸ்ராயேல் மலைகளுக்கு எதிராக, 'அவை பாழாக்கப்பட்டன, ஆதலால் அவை எங்களுக்கு இரையாகத் தரப்பட்டன' என்று நீ சொன்ன இழிச்சொற்களையெல்லாம் ஆண்டவராகிய நாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம் என்பதை அப்போது நீ அறிந்து கொள்வாய்.
இஸ்ராயேல் வீட்டாரின் உரிமைச் சொத்து பாழான போது, அதைக் கண்டு நீ அக்களித்ததால் உனக்கும் அவ்வாறே நடக்கச் செய்வோம்; செயீர் மலையே, நீ பாழாவாய்; ஏதோம் முழுவதும் பாழாகும்; அப்பொழுது நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்."