கொழுப்பானதை நீங்கள் உண்டு, ஆட்டு மயிரை ஆடையாக்கி உடுத்தினீர்கள்; கொழுத்து வளர்ந்த ஆட்டை அடித்துச் சாப்பிட்டீர்கள்; ஆனால் ஆடுகளையோ நீங்கள் மேய்க்கவில்லை.
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! மேய்ப்பன் இல்லாததால் நம்முடைய ஆடுகள் கொள்ளையிடப்பட்டன, காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின; நம் ஆயர்களோ நமது மந்தையைக் கண்காணிக்கவில்லை; மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்துக் கொண்டார்கள்.
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் நம்முடைய மேய்ப்பர்களுக்கு எதிராக வந்து, நமது மந்தையை அவர்கள் கையிலிருந்து மீட்டுக் கொண்டு, ஆடுகளை மேய்க்கும் வேலையிலிருந்து அவர்களை நீக்கிவிடுவோம்; அவர்கள் இனி மேல் தங்களையே மேய்த்துக் கொள்ள முடியாது. அவர்கள் வாயினின்று நம்முடைய ஆடுகளை மீட்போம்; அவை இனி அவர்களுக்கு இரையாகா.
மேய்ப்பன் தன் ஆடுகளுள் சில சிதறுண்டு போனால் எவ்வாறு அவற்றைத் தேடுவானோ, அவ்வாறே நாமும் நம்முடைய ஆடுகளைத் தேடுவோம். மப்பும் மந்தாரமுமான நாளில் அவை சிதறுண்டிருக்கும் எல்லா இடங்களிலுமிருந்து அவற்றை நாம் மீட்டுக்கொண்டு வருவோம்;
வேற்றினத்தாரிடமிருந்து வெளிநடத்தி, வெளிநாடுகளிலிருந்து கூட்டி வந்து தங்களுடைய சொந்த நாட்டுக்கு அவற்றைத் திரும்பிக் கொண்டு வருவோம்; இஸ்ராயேலின் மலைகளிலும், நீரூற்றுகளின் ஓரத்திலும், நாட்டில் மக்கள் குடியிருக்கும் இடங்களிலெல்லாம் அவற்றை மேய்ப்போம்.
வளமான புல்வெளியில் அவற்றை மேய்ப்போம்; இஸ்ராயேலில் மலையுச்சிகளில் அவை மேய்ச்சலுக்குப் போகும்; அங்கே செழிப்பான புல் தரையில் அவை படுத்திருக்கும்; இஸ்ராயேலின் மலைகளில் உள்ள வளமான புல்லை அவை மேயும்.
காணாமற் போனதைத் தேடுவோம்; வழி தவறியதைத் திரும்பக் கொண்டு வருவோம்; எலும்பு முறிந்ததற்குக் கட்டுப் போடுவோம்; வலுவில்லாததைத் தேறும்படி செய்வோம்; கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் கண்காணிப்போம் நமது நீதி விளங்கும் வகையில் அவற்றை மேய்ப்போம்.
வலுவற்ற ஆடுகளை நீங்கள் விலாப் பக்கத்தாலும் தோள் பட்டையாலும் இடித்து, இவற்றைப் பலவிடங்களிலும் சிதறடிக்கும் வரை கொம்புகளால் முட்டித் தள்ளிக் கொண்டு போனதால், நமது மந்தையை நாமே மீட்போம்;
அவற்றை மேய்க்கும்படி நம் ஊழியனாகிய தாவீதென்னும் ஒரே மேய்ப்பனை ஏற்படுத்துவோம்; அவனே அவற்றை மேய்ப்பான்; அவனே அவற்றுக்கு மேய்ப்பனாய் இருந்து அவற்றை மேய்த்துக் கண்காணிப்பான்.
நாம் அவற்றுடன் சமாதான உடன்படிக்கை செய்வோம்; கொடிய மிருகங்களை நாட்டினின்றே விரட்டி விடுவோம்; இனி இவை பாலை நிலத்தில் அச்சமின்றி வாழும்; காடுகளில் கவலையற்று உறங்கும்.
வயல் வெளியில் உள்ள மரங்கள் தங்கள் கனிகளைக் கொடுக்கும்; பூமி தன் விளைவைத் தரும்; அவர்கள் தங்கள் நாட்டில் நலமாக இருப்பார்கள். அவர்களின் நுகத்தடிகளை முறித்து, அவர்களை அடிமையாக்கினவர்களின் கைகளினின்று அவர்களை விடுவிக்கும் போது,
நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள். இனி மேல் வேற்றினத்தார்க்கு அவர்கள் இரையாகமாட்டார்கள்; நாட்டில் வாழும் கொடிய மிருகங்கள் அவர்களை அடித்துத் தின்னமாட்டா; அவர்கள் அச்சமின்றி வாழ்வார்கள்; அவர்களை மிரட்டுவார் யாரும் இருக்க மாட்டார்கள்.
அப்பொழுது அவர்களுடைய கடவுளும் ஆண்டவருமாகிய நாம் அவர்களோடு இருக்கிறோம் என்பதையும், இஸ்ராயேல் வீட்டாராகிய அவர்கள் நம் மக்களாய் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் அறிவார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.