மனிதா, எகிப்து நாட்டின் அரசனாகிய பார்வோனைக் குறித்து நீ ஒரு புலம்பல் தொடங்கி அவனுக்குச் சொல்: "உலக மக்களுள் நீ ஒரு சிங்கம் என உன்னைப்பற்றிக் கருதுகிறாய்; ஆனால் நீ கடலில் உலவும் மகர மீனுக்கு ஒப்பானவன்; நீ உன் கடலில் கிளர்ந்தெழுந்து தண்ணீரை உன் கால்களின் ஆட்டத்தால் கலக்கிக் குழப்பிக் கொண்டிருக்கிறாய்.
உன்னைக் கரைக்கு இழுத்துத் தரையில் எறிவோம்; வானத்துப் பறவையெல்லாம் உன்மேல் உட்காரச் செய்வோம்; பூமியின் மிருகங்களையெல்லாம் உன்னைக் கொண்டு நிறைவு செய்வோம்;
பல்வேறு இனத்தார் உன்னைக் கண்டு திகைத்துக் கலங்கும்படி செய்வோம்; அவர்களுடைய அரசர்கள் நமது வாள் தங்கள் முன் மின்னல் போலப் பளிச்சிடுவதைக் கண்டு திகிலடைவார்கள்; நீ அழியும் நாளில் அவர்கள் தத்தம் உயிருக்குப் பயந்து திடுக்கிட்டு மயங்குவார்கள்.
வலிமை மிக்கவர்களின் வாளால் உன் திரளான மக்களை வெட்டி வீழ்த்துவோம்; நாடுகளில் எல்லாம் அவர்கள் மிகவும் கொடியவர்கள்: "எகிப்தின் செருக்கை அறவே ஒழிப்பார்கள், எகிப்தின் ஏராளமான படையை முறியடிப்பார்கள்;
மிகுதியான கால்வாய்களின் கரையில் இருக்கும் அதன் மிருகங்கள் அனைத்தையும் அழிப்போம்; இனி மனிதர்களின் கால்கள் அங்கே நடமாடுவதில்லை; மிருகங்களின் குளம்புகள் அவ்விடத்தை மிதிக்கவுமாட்டா.
எகிப்து நாட்டை நாம் பாழாக்கும் போது, அதன் திரண்ட செல்வங்களை நாம் அழிக்கும் போது, அதில் வாழ்கின்ற அனைவரையும் கொலை செய்யும் போது, நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்.
அழ வேண்டிய காலம் வந்திருக்கிறது; எகிப்து நாட்டின்மேல் புலம்பல் கேட்கும்; பல நாட்டுப் பெண்கள் ஒப்பாரி பாடி எகிப்தைக் குறித்தும், அதில் வாழும் மக்களைக் குறித்தும் புலம்பி அழுவார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
மனிதா, எகிப்து நாட்டின் ஏராளமான மக்களைக் குறித்துப் புலம்பி அழு; எகிப்து என்னும் மங்கையையும், மகிமை மிகுந்த மற்ற நாடுகளாகிய அதன் புதல்வியரையும், ஆழ்குழியில் இறங்குகிறவர்களோடு கீழுலகுக்குத் தள்ளு:
அந்நாட்டு மக்கள் வாளுக்கு இரையான மக்கள் நடுவில் வெட்டுண்டு வீழ்வார்கள்: அதுவும், அதனைச் சார்ந்த எல்லா மக்களும் வெட்டுண்டு படுகுழியில் தள்ளப்படுவார்கள்.
படுகுழியின் நடுவிலிருந்து வல்லமை மிகுந்த தலைவர்கள் தங்களுக்குத் துணை செய்தவர்களுடன் சேர்ந்து, 'விருத்தசேதனம் செய்யாதவர்கள் வாளால் வெட்டுண்டு படுகுழியில் வீழ்ந்தனர்; வீழ்ந்து அங்கேயே கிடக்கின்றனர்' என்று குரலுயர்த்திக் கூவுவார்கள்.
அசூரும், அவனைச் சார்ந்தவர்களும் அங்கே கிடக்கிறார்கள்; இவர்களுடைய பிணக்குழிகள் அவனது கல்லறையைச் சூழ்ந்துள்ளன; விருத்தசேதனம் செய்து கொள்ளாத அவர்கள் அனைவரும் வாளால் வெட்டுண்டவர்கள்.
ஏலாமும், ஏலாமின் கூட்டத்தார் அனைவரும் அங்கே கிடக்கிறார்கள்; அவர்கள் எல்லாரும் வாளால் வெட்டுண்டு விழுந்தனர்; விருந்தசேதனம் செய்து கொள்ளாமல் பாதாளத்தில் இறங்கினார்கள்; முன்பு வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்தார்கள்; இப்பொழுது குழியில் இறங்கினவர்களோடு இழிவாகச் செத்தார்கள்;
வெட்டுண்டு விழுந்த குடிமக்களோடு ஏலாம் அரசனைக் கிடத்தினார்கள்; அவன் குடிகளின் கல்லறை அவன் கல்லறைக்கு நாற்புறமும் சூழ்ந்துள்ளது; விருத்தசேதனம் செய்யப்படாத இவர்கள் எல்லாரும் வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்து வந்ததால் வாளுக்கு இரையாகிச் செத்துக் குழியில் இறங்கினார்கள்; தங்கள் இழிவைச் சுமந்து கொண்டு, கொலை செய்யப்பட்டவர்களோடு சேர்ந்தார்கள்.
அங்கே மொசோக்கும் தூபாலும் கிடக்கிறார்கள்; அவர்களுடைய திரளான ஆட்களும் அவர்கள் இருவரின் கல்லறையைச் சுற்றிப் புதைக்கப்பட்டார்கள்; விருத்தசேதனம் செய்து கொள்ளாத இவர்கள் வாழ்வோரின் நாட்டில் அச்சம் கொடுத்து வந்ததால் வாளுக்கு இரையாகி மாண்டார்கள்.
விருத்தசேதனமில்லாதவர்களுள் வல்லமை மிக்கவர் சிலர் படைக்கலந் தாங்கியவர்களாய் விழுந்து பாதாளத்தில் இறங்கினார்கள்; இவர்கள் தங்கள் வாளைத் தலையணையாக வைத்துத் தூங்குகிறார்கள்; ஏனெனில் இவர்கள் வாழ்வோரின் நாட்டை அச்சத்தால் கலங்கச் செய்தார்கள்; மொசோக்கும் தூபாலும் இவர்களோடு இல்லை.
இதுமேய மன்னர்களும், அதன் தலைவர்களும், மக்களும் அங்கே கிடக்கிறார்கள்; வல்லவர்களாய் இருந்தாலும் வாளால் கொல்லப்பட்டவர்களோடு புதைக்கப்பட்டனர்; படுகுழிக்குள் இறங்கும் விருத்தசேதனம் இல்லாதவர்களோடு கிடக்கிறார்கள்.
வட நாட்டு மன்னர்களும் சீதோனியர்களும் இருக்கிறார்கள்; தங்கள் வல்லமையால் அச்சத்தைக் கொடுத்ததினால் வெட்டுண்டு செத்து தங்கள் இழிவைத் தாங்கியவர்களாய்ப் படுகுழியில் இறங்கினார்கள்; விருத்தசேதனமில்லாதவர்களாய் வாளால் கொலையுண்டவர்களோடு கிடக்கிறார்கள்; படுகுழிக்குள் இறங்குகிறவர்களோடு தங்கள் இழிவைத் தாங்குகிறார்கள்.
பார்வோன் அவர்களைப் பார்த்து, வாளால் வெட்டுண்ட தன் ஏராளமான மக்களைப் பற்றிய துயரம் ஆறியிருப்பான்; அவனோடு அவன் சேனைகள் யாவும் தேறியிருப்பர், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
ஏனெனில் அவன் வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்தான் ஆகவே, விருத்தசேதனம் இல்லாதவர்களாய் வாளால் வெட்டுண்டவர்களோடு பார்வோனும் அவன் மக்களும் கிடப்பார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."