எகிப்தின் மேலே வாளொன்று விழும்; எகிப்திலே கொலையுண்டு வீழ்ந்தார்கள், அதன் செல்வமெல்லாம் பறிபோயிற்று, அதன் அடிப்படைகள் அழிந்து போயின என்று எத்தியோப்பியர் கேட்டுத் திகைத்து மயங்குவர்.
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: எகிப்தை ஆதரித்தவர்கள் வீழ்ச்சி அடைவார்கள், அதன் வல்லமையின் செருக்கு தாழ்ந்து நாசமாகும்; மிக்தோல் முதல் சியேனே வரை வாழ்பவர்கள் வாளால் வெட்டுண்டு வீழ்வார்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவராகிய இறைவன்.
அந்நாளில் எத்தியோப்பியர்களுடைய இறுமாப்பை அழிக்க நாம் தூதர்களை அனுப்புவோம்; அப்பொழுது அவர்கள், எகிப்தின் அழிவு நாள் வந்தது, தங்களுக்கும் அது வந்தே தீரும்" எனக் கண்டு அஞ்சித் திகைப்பார்கள்.
வேற்றினத்தாரில் மிகக் கொடுமையான அவனையும் அவன் சேனைகளையும் கொண்டு வந்து, எகிப்து நாட்டை அழிக்கச் செய்வோம்; அவர்கள் தங்கள் வாளை உருவி, எகிப்தியர் மேல் பாய்ந்து கொன்று, கொலையுண்ட உடல்களால் நாட்டை நிரப்புவார்கள்.
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாம் சிலைகளை அழிப்போம்; மெம்பீஸ் நகரத்தில் இருக்கும் படிமங்களை ஒழிப்போம்; இனி எகிப்து நாட்டில் தலைவன் இரான்; எகிப்து நாட்டில் திகில் பரவி இருக்கும்.
எகிப்துக்குத் தீ வைப்போம். பிரசவிக்கும் பெண்ணைப் போலப் பெலுஸ் நகரம் மிகுந்த வேதனைப்படும்; அலெக்சாந்திரியா நகரம் பாழாகும்; மெம்பீஸ் நகருக்கு நாடோறும் நெருக்கமிருக்கும்.
தப்னீஸ் நகரத்திலே எகிப்தின் அதிகாரத்தை முறித்து, அதன் செருக்கெல்லாம் அற்றுப்போக நாம் செய்யும் போது, அங்கே கதிரவன் மங்கிப்போகும்; அழகிய வானமும் இருண்டு போகும்; பெண்கள் அடிமைகளாக்கப்படுவர்.
மனிதா, எகிப்தின் அரசனான பார்வோனின் புயத்தை நாம் முறித்துவிட்டோம்; ஆனால் அது நலமடையும்படி காயத்துக்கு வேண்டிய மருத்துவம் செய்வாரில்லை; அவன் வாளேந்த சக்தி பெறும்படி புயத்திற்குத் துணி சுற்றி நாடாவால் கட்டுப்போடவுமில்லை.
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் எகிப்தின் அரசனான பார்வோனுக்கு எதிராகச் செல்வோம்; சென்று அவனது நன்றாயிருக்கும் கையையும், ஏற்கெனவே முறிந்த கையையும் முற்றிலும் ஒடித்து, அவன் கையிலிருக்கும் வாளை விழச் செய்வோம்;
பபிலோன் மன்னனின் புயங்களை நாம் பலப்படுத்தி, அவன் கையிலே நம் வாளைக் கொடுப்போம்; பார்வோனின் புயங்களை முறிப்போம்; அப்பொழுது குற்றுயிராய்க் கிடப்பவன்போல், அவன் முன் கிடந்து தவிப்பான்.
நாம் பபிலோன் அரசனின் புயங்களை வலுப்படுத்துவோம்; பார்வோனின் புயங்கள் வலுவற்று வீழும்; நமது வாளைப் பபிலோன் அரசனின் கையில் கொடுத்தால், அவன் அதை எகிப்து நாட்டின்மேல் நீட்டுவான்; அப்போது அவர்கள் நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.