பின்னர் என்னிடம்: "மனிதா, நாம் உனக்குக் கொடுக்கும் இந்த ஒலைச்சுருளை உண்டு உன் வயிற்றை நிரப்பு" என்றார். நானும் அவ்வாறே அதை உண்டேன்; அது என் வாய்க்குத் தேனைப் போலத் தித்தித்தது.
ஆனால் இஸ்ராயேலர் நாம் சொல்வதைக் கேட்பதில்லை; ஆகவே நீ சொல்வதையும் கேட்க மாட்டார்கள்; ஏனெனில் இஸ்ராயேல் வீட்டார் அனைவரும் முரட்டுக் குணமும் கல் நெஞ்சமும் உள்ளவர்கள்.
உன் முகத்தை வச்சிரம் போலவும், கல்லை விடக் கெட்டியானதாகவும் ஆக்கினோம்; அவர்கள் கலகக்காரராய் இருக்கிறார்களென்று நீ அவர்களுக்கு அஞ்சி விடாதே; அவர்கள் முகத்தைப் பார்த்துப் பயப்படாதே" என்று கூறினார்.
சிறைப்பட்டிருக்கும் உன் இனத்தாரிடம் சென்று பேசு: 'இது ஆண்டவராகிய இறைவன் வாக்கு' என்று சொல்; அதை அவர்கள் கேட்கிறார்களா, கேட்க மறுக்கிறார்களா என்பது பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்றார்.
அப்போது, ஆவி என்மீதிறங்கிற்று; அதிக அதிர்ச்சியுடன் என்பின்னால் கேட்ட ஒரு குரலொலி, "தமது இருப்பிடத்தில் இலங்கிய ஆண்டவரின் மாட்சி வாழ்த்தப்படுவதாக!" என்று சொல்லிற்று.
பின்னும் ஆவி என்னைத் தூக்கி உயர எழுப்பிற்று; நானோ மனக்கசப்பும் உள்ளக் கொதிப்பும் நிறைந்தவனாய்ச் சென்றேன்; ஆயினும் ஆண்டவரின் கரம் என் மேலிருந்து என்னைப் பலப்படுத்திற்று.
பின்பு கேபார் நதியருகில் தெல் அபிப் (புதிய தானியக் குவியல்) என்னுமிடத்தில் வசித்துக் கொண்டிருந்த சிறைப்பட்டவர்களிடம் வந்தேன்; அவர்கள் குடியிருந்த இடத்தில் நானும் அவர்கள் நடுவில் ஏழு நாட்கள் மதிமயங்கியவன் போல் உட்கார்ந்திருந்தேன்.
மனிதா, இஸ்ராயேல் வீட்டார்க்கு உன்னைச் சாமக் காவலனாக வைத்திருக்கின்றோம். நீ நம் வாயினின்று புறப்படும் வார்த்தையைக் கேட்டு அதனை எம் பெயரால் அவர்களுக்கு எச்சரிக்கை செய்.
தீயவன் ஒருவனிடம், 'நீ கண்டிப்பாய்ச் சாவாய்' என்று நாம் சொல்ல, நீ அவனுக்கு எச்சரிக்கை செய்யாமலும், அவன் தன் தீய வழியினின்று திருந்தி வாழ்வு பெறும்படி நீ அவனிடம் அறிவிக்காமலும் விடுவாயாகில், அந்தத் தீயவன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; அவனது இரத்தப் பழியை உன் மேலேயே சாற்றுவோம்.
அதற்கு மாறாக, நீ அந்தத் தீயவனுக்கு எச்சரிக்கை செய்தும், அவன் தன் அக்கிரமத்துக்காக மனம் வருந்தாமலும், தீய வழியினின்று திரும்பாமலும் இருந்தானாயின், அவன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; ஆனால் உன்னையே நீ காத்துக் கொள்வாய்.
அவ்வாறே, நீதிமான் ஒருவன் தன் நீதி நெறியை விட்டு அக்கிரமத்தைச் செய்வானாயின், நாம் அவன் வழியில் இடறலை வைத்து அவனை விழச் செய்யும் போது, அவன் சாவான்; நீ அவனுக்கு எச்சரிக்கை செய்யாவிடில், அவன் தன் பாவத்திலேயே சாவான்; அவன் செய்த புண்ணியங்களை எண்ணிப்பார்க்க மாட்டோம்; ஆனால் அவனது இரத்தப்பழியை உன் மேலேயே சாற்றுவோம்.
ஆனால் நீதிமான் ஒருவனைப் பாவஞ் செய்யாதிருக்கும்படி நீ எச்சரித்து, அவனும் பாவம் செய்யாதிருப்பானாயின், அவன் கண்டிப்பாய் வாழ்வான்; அவன் வாழ்வது உன் எச்சரிக்கையின் காரணத்தால் தான்; நீயும் உன்னையே காத்துக் கொண்டவனாவாய்."
அவ்வாறே நான் எழுந்து சமவெளியான இடத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்: இதோ, கேபார் நதியருகில் எனக்குத் தோன்றிய மகிமைக்கு இணையாக, ஆண்டவரின் மகிமை அங்கேயும் காணப்பட்டது; நானோ முகங்குப்புற விழுந்தேன்.
ஆயினும் நாம் உன்னோடு பேசும் போது, உன் வாயைத் திறப்போம்; அப்பொழுது நீ அவர்களிடம், 'இது ஆண்டவராகிய இறைவன் வாக்கு' என்று சொல்வாய். கேட்கிறவன் கேட்கட்டும்; கேட்க மறுப்பவன் மறுக்கட்டும்; ஏனெனில் அவர்களோ கலகக்காரர்கள்.