நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "எகிப்துக்கு அரசனாகிய பார்வோனே, ஆறுகளின் நடுவிலே படுத்துக் கொண்டு, 'நைல் என்னுடைய ஆறு, நானே அதை எனக்கென உண்டாக்கினேன் ' என்று இறுமாந்து சொல்லும் பெரிய முதலையே, இதோ, நாம் உனக்கு எதிராளியாய் இருக்கிறோம்.
உன் வாயிலே தூண்டில்களை மாட்டி, உன் ஆறுகளின் மீன்கள் யாவும் உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வோம்; உன் செதிள்களில் ஒட்டியிருக்கும் மீன்களோடு ஆறுகளின் நடுவினின்று உன்னை இழுத்துப் போடுவோம்.
உன்னையும் உன்னில் ஒட்டியுள்ள மீன்களையும் பாலை நிலத்தில் வீசி எறிவோம்; கட்டாந் தரையிலே விழுந்து சாவாய்; உன்னை வாரி எடுத்துப் புதைப்பார் யாரும் இருக்க மாட்டார்; பூமியின் மிருகங்களுக்கும் வானத்துப் பறவைகளுக்கும் உணவாக உன்னைத் தந்தோம்.
உன்னை அவர்கள் பற்றிப் பிடித்த போது, நீ முறிந்தாய், அவர்கள் தோளைக் கிழித்தாய், ஊன்றுகோலாகிய உன்மேல் சாய்ந்த போது, நீ துண்டு துண்டாய் ஒடிந்தாய்; அவர்கள் இடுப்பு நொறுங்கச் செய்தாய்.
எகிப்து நாடு பாழடைந்த பாலை நிலமாகும்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள் ஏனெனில், 'நைல் என்னுடைய ஆறு, நானே அதை உண்டாக்கினேன்' என்று சொன்னாய்.
ஆகையால், இதோ, நாம் உனக்கும் உன் ஆறுகளுக்கும் எதிராய் வருவோம்; வந்து மிக்தோல் முதல் சினேயே வரை எத்தியோப்பியா எல்லை முடிய எகிப்து நாட்டை அழித்துப் பாலையாக்குவோம்.
பாழான நாடுகள் நடுவில் பாழடைந்த நாடாய் எகிப்தை ஆக்குவோம்; அழிந்து போன பட்டணங்களின் நடுவில் அழிந்து போன பட்டணங்களாக அதன் பட்டணங்களை ஆக்குவோம்; நாற்பது ஆண்டுகளுக்குப் பாலையாயிருக்கும்; எகிப்து நாட்டினரை வேற்றினத்தார் நடுவில் சிதறடித்து, பல்வேறு நாடுகளுக்கு விரட்டி விடுவோம்.
எகிப்தின் செல்வங்களைத் திரும்பக் கொடுப்போம்; அவர்களுடைய பிறந்த நாடாகிய பாத்துரேஸ் என்னும் நாட்டுக்கு அவர்களைக் கொணர்ந்து நிலைநாட்டுவோம்; அங்கே அவர்கள் ஒரு சிற்றரசாய் இருப்பார்கள்.
மற்ற அரசுகளை விட அதுவே சிறியதாய் இருக்கும்; வேற்றினத்தாரை விடத் தன்னையே உயர்வாகக் கருதமாட்டாது; வேற்றினத்தார் மேல் அதிகாரம் செலுத்த முடியாதபடி அவர்களை மிகவும் சிறிய அரசாக்குவோம்.
இனி எகிப்தியர் இஸ்ராயேல் வீட்டார்க்கு ஆதரவாகவோ நம்பிக்கையாகவோ இருக்க மாட்டார்கள்; அவர்களிடம் உதவி கோரி தங்கள் பழைய அக்கிரமத்தை நினைப்பூட்ட மாட்டார்கள். அப்போது நாமே ஆண்டவராகிய இறைவன் என்பதை அறிவார்கள்."
மனிதா, பபிலோன் மன்னாகிய நபுக்கோதனசார் தீர் பட்டண முற்றுகையில் தன் படைகளுடன் வருந்தி முயன்றான்; தலைகள் எல்லாம் மொட்டையாயின; தோள்கள் யாவும் நொறுங்கின; ஆனால், தீர் பட்டணத்தில் அவனும், அவன் படைகளும் நமக்குச் செய்த முயற்சிக்கு யாதொரு கைம்மாறும் பெறவில்லை.
ஆதலால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பபிலோன் மன்னனாகிய நபுக்கோதனசாருக்கு எகிப்து நாட்டைக் கொடுப்போம்; அதன் செல்வங்களையெல்லாம் அவன் கைப்பற்றிக் கொள்ளையிட்டு, அந்தக் கொள்ளைப் பொருட்களைப் பங்கிடுவான்; அது அவன் சேனைக்குப் பலனும் கூலியுமாகும்.