மனிதா, தீர் நகரத்துத் தலைவனுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உன் இதயம் செருக்குற்று, ' நானே கடவுள்; நடுக்கடலில் தெய்வங்களின் இருக்கையில் வீற்றிருக்கிறேன்' என்று நீ சொன்னாய்; நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணினாலும், நீ மனிதன் தான்.
வேற்று நாட்டவருள் மிகக் கொடியவர்களான அந்நியர்களை உனக்கெதிராய் எழுப்புவோம்; அவர்கள் கையிலேந்திய வாளோடு வருவர்; வந்து உன் ஞானத்தின் பெருமையைப் போக்குவர்; அதனுடைய பேரழகைக் கெடுப்பார்கள்.
கடவுளின் சோலையில், இன்பத் தோட்டத்தில் இருந்தாய்; விலையுயர்ந்த கற்களால் அழகு பெற்றிருந்தாய்; பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்குக் கல், கோமேதகம், படிகப்பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் முதலியவற்றை அணிந்திருந்தாய்; பொன்னான உன் உடுபாவனை உன் அழகை வெளிக்காட்டிற்று; நீ பிறந்த அன்றே இவை தயாரிக்கப்பட்டன.
நீ உன் அழகின் காரணமாய்ச் செருக்குற்றாய், உன் மாட்சியை முன்னிட்டு உன் ஞானத்தைக் கெடுத்தாய். உன்னைத் தரையில் குப்புறத் தள்ளினோம்; மன்னர்கள் முன் வைத்து அவர்கள் உன்னைப் பார்த்துப் பரிகசிக்கச் செய்தோம்.
உன் அக்கிரமங்களின் மிகுதியினாலும், வியாபாரத்தில் செய்த அநீதியாலும் உன் பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தினாய்; ஆகையால் உன் நடுவிலிருந்தே அக்கினியை வரப் பண்ணினோம்; அது உன்னைச் சுட்டெரித்தது. உன்னைப் பார்த்தவர்களின் கண்கள் காண, முற்றிலும் உன்னைச் சாம்பலாக்கினோம்.
நீ அதற்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "சீதோனே, இதோ, நாம் உனக்கு எதிராய் இருக்கிறோம்; உன் நடுவில் நமது மகிமையை வெளிப்படுத்துவோம்; அதன் நடுவில் வந்து நீதித் தீர்ப்பு வழங்கும் போது, நம்முடைய பரிசுத்தத்தை அங்கே காண்பிக்கும் போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
நாம் அதில் கொள்ளைநோயை அனுப்புவோம், தெருக்களில் இரத்த வெள்ளம் ஓடச் செய்வோம்; நாற்புறமும் வாளால் வெட்டப்படுவார்கள்; வெட்டுண்டவர்கள் அதன் நடுவில் செத்து வீழ்வார்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
"இஸ்ராயேல் நாட்டார்க்கு, அவர்கள் நிந்தித்து நடத்திய எதிரி நாட்டார்கள் காலில் குத்துகிற முள்ளாகவும், தைத்து நோவு கொடுக்கும் நெரிஞ்சிலாகவும் இனி மேல் இருக்க மாட்டார்கள் அப்போது நாமே இறைவன் என்பதை அறிவார்கள்.
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாரை நாம் அவர்கள் சிதறிவாழும் நாடுகளிலிருந்து சேர்த்துக் கொண்டு வந்து, அவர்கள் வழியாய்ப் புறவினத்தார் முன் நம் பரிசுத்தத்தை விளங்கச் செய்யும் போது, நாம் நம் அடியான் யாக்கோபுக்குக் கொடுத்திருந்த அவர்களுடைய சொந்த நாட்டில் வாழ்வார்கள்.
அவர்கள் அதில் அச்சமின்றிக் குடியிருப்பார்கள்; வீடுகள் கட்டுவார்கள்; திராட்சைத் தோட்டங்கள் அமைப்பார்கள். அவர்களைச் சூழ்ந்திருந்து அவர்களை இழிவாக நடத்தியவர்கள் மீது நாம் நீதித்தீர்ப்புச் செலுத்திய பிறகு, அச்சமின்றி வாழ்வார்கள்; அப்பொழுது, நாமே அவர்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை அறிவார்கள்."