மனிதா, தீர் நகரம் யெருசலேமைக் குறித்து, 'ஆ, ஆ, மக்கள் நிறைந்த நகரத்தின் கதவுகள் உடைபட்டன; அந்நகரம் எனக்குத் திறந்துள்ளது. அது குடிகளில்லா நகரமாகும், நானோ மக்களால் நிரப்புவேன்' என்று சொல்லிற்று; அதனால்,
ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, அரசர்க்கு அரசனாகிய நபுக்கோதனசார் என்னும் பபிலோன் அரசனை, வடக்கிலிருந்து தீருக்கெதிராய் வரச்செய்வோம்: அவன், குதிரைகளோடும் தேர்களோடும், குதிரை வீரர்களோடும் பெருங் கூட்டத்தோடும், திரளான படைகளோடும் பாய்ந்து வருவான்.
அது கிளப்பும் புழுதி உன்னை மூடி மறைக்கும் அளவுக்கு, அவனது குதிரைப்படை பெரிதாய் இருக்கும்; இடித்துத் திறக்கப்பட்ட பட்டணத்தில் நுழைவது போல், அவன் உனக்குள் நுழையும் போது, குதிரைகளும் வண்டிகளும் தேர்களும் செய்யும் பேரிரைச்சல் உன் மதில்களை அதிரச் செய்யும்.
உன் செல்வத்தைக் கொள்ளையிடுவார்கள், உன் சரக்குகளைப் பறிப்பார்கள், உன் மதில்களை இடிப்பார்கள், அழகிய வீடுகளை அழிப்பார்கள், உன்னிலுள்ள கற்களையும் மரங்களையும் மண்ணையும் தண்ணீரில் எறிவார்கள்.
நீ வெறுங் கற்பாறை போல் ஆவாய்; வலைகள் காயும் இடமாய் இருப்பாய்; இனி மீண்டும் கட்டப்படமாட்டாய்; ஏனெனில் ஆண்டவராகிய நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
ஆண்டவராகிய இறைவன் தீர் நகருக்குக் கூறுகிறார்: நீ வீழ்ச்சியுற்று, உன் மக்கள் கொன்று குவிக்கப்படும் போது, உன்னில் காயம் பட்டவர்கள் பயங்கரமாய் அலறி ஒலமிடும் ஒசையால் தீவுகள் அதிருமல்லவா?
கடற்கரை வாசிகளின் தரைவர்கள் அனைவரும், தங்கள் இருக்கைகளை விட்டிறங்கித் தங்கள் மகிமையின் அடையாளமான ஆடைகளைக் கழற்றி விட்டுச் சித்திர உடைகளை உரிந்து போடுவார்கள்; திகில் பிடித்தவர்களாய் மயங்குவார்; தரையிலே உட்கார்ந்து, நீ திடீரென வீழ்ச்சியுற்றதை எண்ணி எண்ணி வியப்படைவார்கள்.
அவர்கள் புலம்பி அழுது உனக்குச் சொல்வார்கள்: 'பேர்பெற்ற பட்டினமே, கடலின் அரசியே, நீயும் உன் குடிகளும் கடலில் வலிமை காட்டி, கடற்கரை நாடுகளுகெல்லாம் அச்சம் தந்தாயே, நீ இப்படி வீழ்ச்சியுற்றது எவ்வாறு?
ஆழ்ந்த பாதாளத்தில் இறங்கிய பண்டைய மக்களுடன் உன்னையும் தள்ளி, அங்கே அந்தப் பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு நீயும் பாழடைந்த படுகுழியிலே வாழச் செய்வோம்; உன்னில் மக்கள் வாழமாட்டார்கள்; வாழ்வோர் நாட்டில் உனக்கு இடமிருக்காது.