அவர்களுக்குச் சொல்: அம்மோன் மக்களே, ஆண்டவராகிய இறைவன் சொல்வதைக் கேளுங்கள்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நமது பரிசுத்த இடம் பங்கப்படுத்தப்பட்ட போதும், இஸ்ராயேல் நாடு பாழாக்கப்பட்ட போதும், யூதா மக்கள் சிறைப்பட்ட போதும், நீங்கள், 'ஆம், அது சரியே!' என்று சொல்லி அக்களித்தீர்கள் .
ஆகையால் உங்களைக் கீழ்த்திசையாரின் கையில் ஒப்படைப்போம்; அவர்கள் உங்கள் நடுவில் தங்கள் பாளையங்களை அமைத்துக் கூடாரங்களை அடிப்பார்கள்; உங்கள் கனிகளை உண்டு, பாலைப் பருகுவார்கள்.
ஆகையால் நமது கரத்தை உங்கள் மீது நீட்டிப் புறவினத்தார்க்கு உங்களைக் கொள்ளைப் பொருளாகக் கையளிப்போம்; உங்களை உலகத்தில் இல்லாதபடி கொன்று பூண்டோடு அழிப்போம்; அப்பொழுது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்.
மோவாப் நாட்டின் மலைப் பகுதியைத் திறப்போம்; அதன் மகிமையாயுள்ள எல்லைப் புறத்து பட்டணங்களாகிய பேத்தியேசிமோத், பேயேல்மியோன், காரியாத்தாயீம் ஆகியவற்றையும் அழிப்போம்.
ஆண்டவராகிய இறைவன் தீர்ப்புக் கூறிச் சொல்லுகிறார்: இதோ இதுமேயா நாட்டுக்கு எதிராக நமது கரத்தை நீட்டுவோம்; அதிலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழித்துக் காடாக்குவோம்; வடக்கில் உள்ள தேமான் முதல் தேதான் வரையுள்ள எல்லா மக்களும் வாளால் வெட்டுண்டு வீழ்வர்.
நம் மக்களாகிய இஸ்ராயேலரைக் கெண்டே இதுமேயரைப் பழிவாங்கி அழிப்போம்; அவர்கள் இதுமேயாவில் நமது கோபத்தின்படியும் ஆத்திரத்தின்படியும் செய்து, இதுமேயரைத் தண்டிப்பார்கள்; அப்போது நாம் பழிதீர்ப்பதை இதுமேயா நாட்டு மக்கள் அறிந்து கொள்வார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
"ஆண்டவராகிய இறைவன் மீண்டும் கூறுகிறார்: பிலிஸ்தியர் தங்கள் பழைய பகைமையை மனத்தில் கொண்டு இஸ்ராயேலரை அழிக்கத்தேடி தங்களால் இயன்றவாறெல்லாம் பழிவாங்கினபடியால்,
கடுமையான தண்டனைகளை அவர்களுக்குக் கொடுத்து, ஆத்திரத்தோடு அவர்களைப் பழிவாங்கி நீதிசெலுத்துவோம்; அவ்வாறு அவர்களைப் பழிவாங்கும் போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள். "