உன்னிலுள்ள நீதிமானையும் அக்கிரமியையும் நாம் கொல்லப் போவதால், தெற்கு முதல் வடக்கு வரை உள்ள எல்லா மனிதர்களுக்கும் எதிராக நமது வாள் உறையினின்று புறப்படும்.
ஏன் பெருமூச்சு விட்டு அழுகின்றாய்?' என அவர்கள் உன்னைக் கேட்டால், நீ சொல்: 'தீய செய்திகளை நான் கேட்டதால் அழுகிறேன்; ஏனெனில், வாள் புறப்படும் போது உள்ளமெல்லாம் உருகும், கைகள் தளரும், புத்தி மயங்கும், நீர் அலம்புவதைப்போலத் தொடைகள் நடுங்கும்; இதோ அது வந்து நிறைவேறியே தீரும்" என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
படுகொலைக்காக அது கூர்மையாக்கப்பட்டது, மின்னுவதற்கெனத் துலக்கப்பட்டுள்ளது! அது நமக்கு மகிழ்ச்சி தருவதா?அது என் மகனைத் திருத்தும் கோல், அதற்குமுன் நிற்கும் மரம் எதுவுமில்லை.
மனிதா, நீ அலறிக் கதறு; அந்த வாள் நம் மக்களுக்கு எதிராகவும்,இஸ்ராயேலின் தலைவர்கள் அனைவர்க்கும் எதிராகவும் எழுந்துள்ளது. நம் மக்களுடன் அவர்கள் அனைவரும் வாளுக்கு இரையாவார்கள்; ஆகையால் மாரடித்துக்கொள்.
நீயோ, மனிதா, கையோடு கைதட்டு, வாள் கொடுமை இரட்டிக்கட்டும்; ஆம் கொல்லப்பட வேண்டியவர்களுக்காக அது மும்முறையாகட்டும். அனைவரையும் கொலை செய்யும் வாள் அதுவே; யாவரையும் நடுங்கச் செய்யும் வாள் அதுவே;
மனிதா, பபிலோன் அரசனின் வாள் வருவதற்காக இரண்டு வழிகள் உண்டாக்கு; அவ்விரண்டு வழிகளும் ஒரே நாட்டிலிருந்து புறப்படும்; ஒரு கைகாட்டியைச் செய்து வை; நகரத்திற்குப் பிரியும் வழியின் துவக்கத்தில் அதைச் செய்து வை.
ஏனெனில், பபிலோன் அரசன், இரண்டு வழிகளும் பிரியும் இடத்தில் சகுனம் பார்ப்பதற்காக நிற்கிறான்; அம்புகளைக் கலந்து குலுக்குகிறான், சிலைகளின் ஆலோசனையைக் கேட்கிறான், ஈரலிலே சகுனம் பார்க்கிறான்.
அவனுடைய வலக்கையில் யெருசலேமுக்காகத் திருவுளச்சீட்டு விழுகிறது; அவனோ, எவ்விடத்தில் மதில்களையிடிக்கும் கடாக்களை வைக்கலாம், தான் எப்பக்கத்தில் நின்று போருக்கு ஆணை தரலாம், எங்கிருந்து ஆர்ப்பரிக்கலாம், எந்த வாயில்களைத் தாக்கலாம், எவ்விடத்தில் கொத்தளங்களையும் அரண்களையும் கட்டலாம் என்று குறி கேட்டு யோசனை செய்கிறான்.
எவ்வளவு தான் ஆணைகள் இடப்பட்டாலும் இது அவர்களுக்கு வீண் சகுனமாகத் தோன்றுகிறது; ஆனால், அரசன் அவர்களைப் பிடிப்பதற்காக ஆலோசனை செய்கிறான்; அவர்களுடைய அக்கிரமங்களை நினைவு படுத்துவான்.
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீங்கள் உங்கள் குற்றத்தை நினைக்கச் செய்வதாலும், உங்கள் செயல்களிலெல்லாம் பாவங்களே காணப்பட்டு உங்கள் அக்கிரமங்கள் வெளியாவதாலும், அவற்றை நமக்கு நினைவுபடுத்துவதாலும், நீங்கள் பிடிபடுவீர்கள்.
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உன் தலைப்பாகையை எடு, மணிமுடியைக் கழற்று; இப்பொழுது இருப்பது போலவே யாவும் இருக்க மாட்டா; தாழ்ந்ததை உயர்த்து, உயர்ந்திருப்பதைத் தாழ்த்து.
நாம் யூதாவை அழிப்போம், அழிப்போம், அழிப்போம்; ஆயினும் தீர்ப்பிடுவதற்கு யாருக்கு உரிமை இருக்கிறதோ, அவர் வரும் வரையில் அதன் அடையாளமே இராது. அவர் வந்த பின் அவருக்கே அதைக் கொடுப்போம்.
"மனிதா, நீ இறைவாக்குரைத்துக் கூறு: அம்மோன் மக்கள் சொல்லிய நிந்தையான வார்த்தைகளைப் பற்றி ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ வாள்! வாள் உருவப்பட்டுள்ளது. கொலை செய்யக் கூராக்கப்பட்டுள்ளது. வெட்டி வீழ்த்த துலக்கப்பட்டுள்ளது.
உனக்காக வீணான காட்சிகளைக் கண்டு, நல்ல காலம் வருகிறதென்று பொய் சொல்லுகிறார்களே, அதற்குள் இதோ, அக்கிரமிகளின் பிணங்களுடன் நீயும் கொலையுண்டு வீழ்வாய். ஏனெனில் அவர்களின் அக்கிரமங்கள் தண்டிக்கப்படும் நாள் வந்து விட்டது.