ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பெரிய இறக்கைகளையும் நீண்ட இறகுகளையும், பல வண்ணத் தூவிகளையும் பெரும் உடலையும் கொண்ட பெரிய கழுகு ஒன்று பறந்து வந்தது; அது லீபானுக்கு வந்து ஒரு கேதுரு மரத்தின் நுனிக் கிளையைப் பிடித்தது;
அது துளிர்த்து வளர்ந்து குட்டையான ஒரு படர்ந்த திராட்சைச் செடியாயிற்று; அதன் கிளைகளோ அக்கழுகுக்கு நேராக இருந்தன; ஆனால் வேர்கள் அதன் கீழாக இருந்தன; இவ்வாறு அது திராட்சைச் செடியாகிக் கிளைகளை விட்டுப் பலுகத் தொடங்கிற்று.
பெரிய இறக்கைகளையும் நீண்ட இறகுகளையும் நிறைந்த தூவிகளையும் உடைய வேறொரு பெரிய கழுகும் இருந்தது; இதோ, இந்தத் திராட்சைச் செடி தனக்குத் தண்ணீர் பாய்ச்சும்படி தன் வேர்களை அதன் பக்கமாய் ஒடச் செய்து, தன் கிளைகளையும் அதன் பக்கமாய்த் திருப்பிற்று.
கிளைகளை விட்டு, கனிகளைக் கொடுக்கும் சிறந்த ஒரு திராட்சைச் செடியாய் இருக்கும் பொருட்டு, அது முன்னிருந்த இடத்திலிருந்து பிடுங்கித் தண்ணீர் நிரம்ப உள்ள இடத்தில் நடப்பட்டது.
(இப்போது) பேசு: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அந்தத் திராட்சைச் செடி செழிக்குமா? யாராவது வந்து அதன் வேர்களைப் பிடுங்கி, கிளைகளை வெட்டினால், ஏற்கனவே துளிர்த்திருந்த கிளைகளும் இலைகளும் எல்லாமே பட்டுப் போகாதோ? அந்தச் செடியை வேரோடு பிடுங்க, மிகுந்த புயபலமும், மக்கள் பலரின் முயற்சியும் தேவையில்லை.
இதோ இடம் மாற்றி நடப்பட்டிருக்கிறது; ஆனால் அது செழித்து வளருமா? கீழைக்காற்று அதன் மேல் வீசும் போது செடி முற்றிலும் வாடிவிடாதா? முளைத்திருக்கும் பாத்தியிலேயே உலர்ந்து போகாதோ?"
இவை யாவும் எதைக் குறிக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா என்று அந்தக் கலகக்காரர்களைக் கேள். மேலும் அவர்களுக்குச் சொல்: இதோ பபிலோன் அரசன் யெருசலேமுக்கு வந்து, அதன் அரசனையும் பெருங்குடி மக்களையும் சிறை பிடித்துத் தன் நாடாகிய பபிலோனுக்குக் கொண்டு போனான்.
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! தன்னை அரசனாக்கிய மாமன்னனுக்குச் செய்த சத்தியத்தை அசட்டை செய்து, அவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்த இந்தப் புதிய அரசன் அந்த மாமன்னனின் நகராகிய பபிலோன் நடுவிலே சாவான்.
அவன், மக்கள் பலரை அழிக்கும்படி படையெடுத்து வந்து மண்மேடுகள் போட்டுக் கொத்தளங்களைக் கட்டும் போது, பார்வோன் பெரிய சேனையோடும் திரளான மக்கட்கூட்டத்தோடும் போரில் உதவி செய்ய வரவே மாட்டான்.
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! அவன் நமக்குச் செய்த சத்தியத்தை மீறி, நம் உடன்படிக்கையை முறித்தமையால் அவன் பாதகத்தை அவன் தலைமீது வரச் செய்வோம்;
அன்றியும் நமது கண்ணியில் சிக்குமாறு அவன் மேல் நாம் வலை வீசிப் பிடித்துப் பபிலோனுக்குக் கொண்டு போய், நமக்கெதிராய்ச் செய்த துரோகத்துக்காக அங்கே நாம் அவனைத் தீர்ப்பிடுவோம்.
அவனுடைய வீரர்களுள் தலைமையானவர்கள் வாளுக்கு இரையாகி வீழ்வார்கள்; எஞ்சியிருப்பவர்கள் நாலாபக்கமும் சிதறடிக்கப்படுவார்கள்; அப்போது ஆண்டவராகிய நாமே பேசினோம் என்பதை அறிவீர்கள்.
ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளையொன்றை நாமே எடுப்போம்; அதன் நுனிக் கொப்புகளிலிருந்து இளங்கொழுந்து ஒன்றைக் கொய்து ஒங்கி உயர்ந்த மலை மேல் நாமே நாட்டுவோம்;
இஸ்ராயேல் என்னும் உயர்ந்த மலை மீது நாம் அதை நாட்டுவோம்; அது கிளைத்து வளர்ந்து கனிதரும் பெரிய கேதுரு மரமாகும்; பறப்பன யாவும் அதன்கீழ் வந்தடையும்; எல்லா வகையான பறவைகளும் அதன் இலைகளின் நிழலில் வந்து கூடு கட்டும்.