அப்போது, ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் பாரவோனுக்குச் செய்வதை நீ இப்பொழுதே காணப்பெறுவாய். உண்மையிலே அவன் (நமது) வலுத்த கையைக் கண்டே அவர்களைப் போகவிட்டு, வற்புறுத்தித் தன் நாட்டிலிருந்து புறப்படும்படி, தானே அவர்களை மன்றாடுவான் என்று அருளினார்.
நாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் எல்லாம் வல்ல கடவுளாய்க் காட்சியளித்தவர். ஆயினும், அதோனாயி என்னும் நமது பெயரை அவர்களுக்குத் தெரிவித்தோமில்லை.
ஆகையால், நீ நம் பெயராலே இஸ்ராயேல் மக்களை நோக்கி: ஆண்டவராகிய நாமே எகிப்தியருடைய சிறையினின்றும் உங்களை விடுதலையாக்கி, அடிமைத்தனத்தினின்றும் மீட்டு, ஓங்கிய கையாலும் பெரும் தண்டனைகளினாலும் உங்கனை நாம் ஈடேற்றுவோம்.
மேலும், உங்களை நம் சொந்த மக்களாகத் தெரிந்து கொள்வோம். அஃதோடு, உங்கள் கடவுளாகவும் இருப்போம். பிறகு, நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமென்று அறிவீர்கள். எந்த அடையாளத்தினால் என்று கேட்டால், உங்களை நாம் எகிப்தியருடைய சிறையினின்று விடுவித்து,
ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு என்பவர்களுக்கு நாம் கொடுப்பதாக ஆணையிட்டு வாக்களித்த நாட்டிலே உங்களைக் குடியேறச் செய்வதனாலே தான். உண்மையில், ஆண்டவராகிய நாம் அதை உங்களுக்கு உடைமையாய்க் கொடுப்போம் என்று சொல்லுவாய் என்றார்.
அவ்வண்ணமே மோயீசன் இஸ்ராயேல் மக்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச் சொன்னார். அவர்களோ, மன வருத்தத்தையும் தாளாத வேலையையும் முன்னிட்டு, அவருக்குச் செவிகொடுக்கவில்லை.
ஆண்டவர் மோயீசனோடும் ஆரோனோடும் அவ்வண்ணமே பேசினார். இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று போக வேண்டிய காரியத்தைப் பற்றி, அந்த மக்களிடத்திலும் எகிப்திய மன்னன் பாரவோனிடத்திலும் அவர் சொன்ன கட்டளைகள் அவையேயாம்.
அம்ராம் தன் தந்தையின் சகோதரன் மகளாகிய யொக்காபேத்தை மணந்து கொண்டான். அவனுக்கு அவள் வயிற்றில் மோயீசனும் ஆரோனும் பிறந்தனர். அம்ராம் வாழ்ந்த ஆண்டுகள் நூற்றுமுப்பத்தேழு.
ஆரோனின் மகனான எலியெசார், புத்தியேலின் புதல்வியருள் ஒருத்தியை மணந்து கொண்டான். இவள் அவனுக்குப் பினேஸ் என்பவனைப் பெற்றாள். வம்ச வரிசைப்படி லேவி கோத்திரத்தாரின் தலைவர் இவர்களே.