மேலும், ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடியே பெசெலேயல், திருப்பணி செய்யும் போது ஆரோன் அணியவேண்டிய ஆடைகளை இளநீலம், கருஞ்சிவப்பு, இரத்தநிறம் கொண்ட நூல்களாலும், மெல்லிய சணல் நூலாலும் நெய்தான்.
பல வண்ண நெசவு வேலையாய்ச் செய்யத் தொடங்கினான். எப்படியென்றால், பொன்னை மெல்லிய தகடாய் அடித்து அதனைச் சரிகையாக்கி; மேற்கூறின பலவண்ணச் சீலையின் நூலோடு சேர்த்து முறுக்கினான்.
மேலும், மணி வெட்டும் தலைமுறைப்படி இரண்டு கோமேதகக் கற்களை வெட்டி, அவற்றைப் பொன் குவளைகளில் கெட்டியாய்ப் பதிய வைத்து, அவைகளின் மேல் இஸ்ராயேல் புதல்வர்களின் பெயர்களைப் பொறித்தான்.
மேலும், மார்ப்பதக்கத்தை ( மேலாடையாகிய ) ஏப்போத்தின் வேலைப்பாட்டிற்கு ஒப்பாக விசித்திர வேலையாய்ச் செய்து, பொற்சரிகை, இளநீலம், கருஞ்சிவப்பு, இருமுறை சாயம்தோய்த்த இரத்த நிற நூல்களாலும், திரித்த மெல்லிய சணல் நூலாலும் வினோதமாய்ச் செய்தான்.
அவ்விரண்டும் ஏப்போத்திற்கு எதிராக இறுகியவைகளுமாய் தளராதபடி நீல நாடா பொருத்திய வளையங்களால் பலமாய்ச் சேர்க்கப்பட்டவைகளுமாய் இருந்தன. அதனால், ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடி, அவ்விரண்டும் ஒன்றை ஒன்று அகலவே கூடாது.
அங்கியின் கீழ் ஒரத்திலே இளநீலம், கருஞ்சிவப்பு இரத்த நிறம் கொண்ட நூலாலும் மெல்லிய சணல் நூலாலும் செய்த மாதுளம் பழங்களைச் சித்திரப் பின்னல் வேலையாய்ச் செய்து,
ஒரு பொன்மணியும் ஒரு மாதுளம் பழமுமாக ( வைத்தார்கள் ). ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்த படியே, கடவுளுக்கு ஆராதனை செலுத்தப் போகும் போது பெரிய குரு மேற்சொன்ன அங்கியை அணிந்து கொள்ளக்கடவார்.
இவ்வாறு உடன்படிக்கைக் கூடாரத்தின் வேலையையும் அதன் மேற்கட்டு வேலையையும் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே இஸ்ராயேல் மக்கள் செய்து முடித்தனர்.
அவர்களே திருவுறைவிடத்தையும், அதன் மேற்கட்டையும், எல்லாப் பணிமுட்டுக்களையும் வளையங்களையும் பலகைகளையும் தண்டுகளையும் தூண்களையும் அதன் பாதங்களையும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.